தீயை அணைக்க தண்ணீர் என நினைத்து பெற்றோல் ஊற்றியதில் பலி | தினகரன்


தீயை அணைக்க தண்ணீர் என நினைத்து பெற்றோல் ஊற்றியதில் பலி

சமையலறையிலுள்ள அடுப்பு தீப்பற்றி எரியும்போது சிறு பிள்ளையொன்று தண்ணீர் என நினைத்து  போத்தலில் இருந்த பெற்றோலை ஊற்றி அணைக்க முயற்சித்ததால் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உடலில் தீப்பற்றி கடுங்காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார்.  

இவ்வாறு மரணமடைந்தவர் அல்கம உருவக்க பிரதேசத்தில் வசித்த ரத்னாயக்கலாகே அயம்ஸனி ராஜகருணா என்னும் 68வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாவார். கொழும்பு நீதிமன்ற டொக்டர் எஸ்.வீ.என். பெரேரா இறந்தவரின் பிரேத பரிசோதனையை நடத்தினார். அங்கு சாட்சியமளித்த தந்திரிலாகே தனுஜா தில்ருக்ஷி (25) இறந்தவர் தனது மாமியாரென்றும் கடந்த 06ம் திகதி பகல் சமையலறையில் தீப்பிடித்தபோது குளித்துக்கொண்டிருந்த மகனிடம் தண்ணீர் கொண்டு வருமாறு கூறியபோது அவர் தண்ணீர் என புல் வெட்டும் இயந்திரத்துக்கு பயன்படுத்தப்படும் பெற்றோல் போத்தலை கொண்டுவந்து தீப்பற்றிய இடத்தில் ஊற்றியதில் தீ அதிகரித்து மாமியாரின் உடம்பிலும் பற்றியுள்ளது.

வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்தார் என கூறினார்.  

குறிப்பிட்ட வைத்திய அறிக்கை சாட்சியங்களை கருத்தில்கொண்ட கொழும்பு நகர திடீர் மரண விசாரணை பரிசோதகர் மொஹமட் அஸ்ரப் ரூமி இறந்தவரின் மரணம் எரிகாயங்களால் ஏற்பட்ட திடீர் விபத்தென தீர்ப்பளித்தார்.   

ஹேமந்த டெப் 


Add new comment

Or log in with...