நிறைவேறாத நம்பிக்கைகளுடன் நாளை மற்றொரு தேர்தல் களம் | தினகரன்


நிறைவேறாத நம்பிக்கைகளுடன் நாளை மற்றொரு தேர்தல் களம்

ஜனாதிபதித் தேர்தல் என்பது பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒரு அடையாளம், முன்னடிவைப்பு என்றும் கூறலாம். இதைக் கவனத்திற் கொண்டே ஒவ்வொரு தரப்பும் இந்தத் தேர்தலில் தமது நிலைப்பாடுகளை எடுத்துள்ளன.

அதாவது தமது கட்சி நலன் நின்றே இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. இதைத் தவிர, நாட்டு நலன், மக்கள் நலன், நாட்டின் எதிர்காலம் என்பதெல்லாம் குறைந்த வீதத்தில்தான் கவனிக்கப்பட்டுள்ளன.

இதனை தேர்தல் முடிந்த பிறகு வரும் காலம் வெகு துல்லியமாக நிரூபிக்கும். அதாவது வரலாறு இதைத் தெளிவாகச் சொல்லும். இதொன்றும் புதியதல்ல. 2015இல் ஒரு மாபெரும் கனவும் நம்பிக்கையும் மக்களுக்கு ஊட்டப்பட்டன. ஆனால், அதற்குப் பிறகு வந்த நாட்கள் அந்த நம்பிக்கையை வெளிறச் செய்தன. அந்தக் கனவைப் பொய்யாக்கின என்பது நமது அனுபவம்.

இதனால்தான் 2015இலிருந்த அத்தனை பிரச்சினைகளும் இன்னமும் அப்படியே உள்ளன. இன்னும் சொல்லப் போனால் மேலும் பல புதிய பிரச்சினைகள் புதிதாக எழுந்திருக்கின்றன. புதிய பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன என்பதை விட புதிய பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றே சொல்ல வேண்டும்.

2015இல் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கைகூடாமல் போனது. காணாமலாக்கப்பட்டோர் விடயத்துக்கு முடிவில்லை. ஆயிரம் நாட்களைக் கடந்து இந்தப் போராட்டம் நீடிக்கிறது.

அதற்கு முன்பு வந்திருந்த தேர்தல்களும் அவற்றின் வாக்குறுதிகளும் அவை உண்டாக்கிய நம்பிக்கைகளும் கனவுகளும் எப்படி ஆகின என்பதும் நாமறிந்தவை. பொதுவாகவே தேர்தல் அரசியலில் இந்த மாதிரியான ஒரு சீரழிந்த போக்கு இலங்கை, இந்தியா போன்ற தென்னாசியப் பிராந்திய நாடுகளில் வெளிப்படையாகவே உண்டு. தேர்தலில் அளவுக்கதிகமான வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதும், எதிர்த்தரப்புகளின் மீது வசைகளையும் பொய்களையும் வாரியிறைப்பதும், வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறுவதும் மறந்து விடுவதும் இங்கே வழமை.

 இதை மக்களும் தெரிந்து கொண்டே ஆதரிக்கிறார்கள். அல்லது தெரியாத மாதிரி நடந்து கொள்கிறார்கள். அதனால்தான் தொடர்ந்தும் தவறுகள் நடக்கின்றன. சிந்திப்போருக்குத்தான் இது நெருடலாகவும் நெருக்கடியாகவும் உள்ளது.

உண்மையில் தேர்தல் என்பது மக்களுக்கான ஒரு நல்வாய்ப்பாகவே வருகிறது. கடந்த காலத் தவறுகளையும் சீரழிவுகளையும் சீர்ப்படுத்திக் கொள்வதற்கும் புதிய தெரிவைச் செய்வதற்குமே தேர்தல் நமக்கு நல்வாய்ப்பாக வருகிறது.

 அதிகாரத்திலிருக்கும் தரப்பு சரியாக நடக்கவில்லை. பொறுப்பாகச் செயற்படவில்லை என்றால் அதை விலக்கி விட்டுப் பொருத்தமான இன்னொரு நல்ல தரப்புக்கு அதிகாரத்தைக் கொடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை மக்களுக்கு தேர்தல் வழங்குகிறது.

 இதன் மூலம் நற்சமனிலை பேணப்படுகிறது. தீயபோக்கின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் தேர்தலை நாம் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் ஆதரிக்கவும் வேண்டியுள்ளது.

 இதைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்பட்டால் தேர்தல் ஒரு அரிய வாய்ப்பாகும். அது முன்னேற்றத்துக்கான – வெற்றிக்கான படிக்கல். சரியாகப் புரிந்து கொண்டு செயற்பட்டால் கட்சிகளும் தலைமைகளும் மக்களை ஏமாற்றவே முடியாது. மக்களுக்கும் நாட்டுக்கும் தவறிழைக்க முடியாது. பொய்யைச் சொல்லவே முடியாது. தவறுகளை இழைக்கவே முடியாது. அப்படித் தவறுகளைச் செய்தால் அதற்கான தண்டனையை முதலில் மக்களே வழங்கி விடுவர். ஆகவேதான் தேர்தல் என்பது மக்களுடைய தீர்ப்பாயமாகவும் ஆணையகமாகவும் விளங்குகிறது. இத்தனை சக்தி மிக்க தேர்தலை அதற்கான வலுப்பெறுமானத்தோடிருப்பதற்கு மக்களாகிய நாம் முயற்சிக்கிறோமா? அதைச் சரியாகப் பேணுகிறோமா என்பது முக்கியமானது.

 இதைச் சரியாகப் பேணவில்லை என்றால் அதிலிருக்கும் எந்தளவு சக்தியும் பயனுடையதாக இருக்காது. ஒரு சிறிய அளவுக்கான வலுவும் நமக்கு உதவப் போவதில்லை.

 இதுவரையிலும் நாம் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறோம். ஜனாதிபதித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்... இதை விட கிராம மட்டங்களிலும் நாம் பல தெரிவுகளைச் செய்கிறோம். கூட்டுறவில், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் போன்ற பொது அமைப்புகளில் என்றெல்லாம். இவையெல்லாம் ஜனநாயக முறைமை மக்களுக்கு அளித்துள்ள பெரும் வாய்ப்பு. நல் ஏற்பாடு.

ஆனால், இதைப் புரிந்து கொண்டு மக்கள் தமது தெரிவுகளைச் செய்வது குறைவு என்பதே நடைமுறையாக உள்ளது. மக்கள் மக்கள் பல சந்தர்ப்பங்களிலும் தமது தெரிவுகளைச் செய்யும் போது பாராம்பரிய சிந்தனை முறைக்குட்பட்டே இதைச் செய்ய முற்படுகிறார்கள். சாதி, மதம், இனம், கட்சி, ஊர், உறவு, நட்பு, பிரதேசம் என்ற அடையாளங்களின் வழியாகவே இந்தத் தெரிவுகளைச் செய்வதற்கு முற்படுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் நபர் என்ற வகையிலும் அமைந்து விடுவதுண்டு.

 கொள்கை, நடைமுறை, திட்டங்கள், சாதனைகள், வரலாற்று அனுபவம், உலகப்போக்கு, தேவைகள், யதார்த்தம் போன்ற விடயங்களை முன்னிறுத்திச் சிந்திக்கும் போக்கு மக்களிடம் குறைவு. மக்களை இவற்றின்பால் வழிப்படுத்தும் பொறுப்பு சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், பொது அமைப்புகள், செயற்பாட்டியக்கத்தினர், ஊடகங்கள் போன்ற தரப்புகளுக்குரியது. இவையே ஜனநாயகத்தின் அடித்தளத்தைச் சரியாகப் பேணுவதற்கு உதவுபவை. மக்களுக்குச் சரியான முறையில் அறிவூட்டலைச் செய்து, விழிப்புணர்வை உண்டாக்கி ஜனநாயகச் சிறப்பை மேம்படுத்த வேண்டியவை.

 ஆனால், துரதிருஷ்டவசமாக நமது சூழலில் இவை அப்படிச் செயற்படுவது குறைவு. இவை மக்களை விடத் தாழ்நிலையில் தங்களை வழிப்படுத்துகின்றன.

இதனால்தான் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பிரச்சினை தீர்க்கப்படாமலிருக்கிறது. இலங்கைக்குப் பொருத்தமான ஒரு அரசியலமைப்பை உருவாக்க முடியாதிருக்கிறது. பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடொன்றில்  பன்மைத்துவம் அவசியமான ஒன்று. அதைச் செய்ய முடியவில்லை என்றால் பிறகு ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை.

ஆக கட்சிகளுக்குப் பின்னாலும் கட்சிகளை வழிப்படுத்த முற்படும் பிராந்திய, சர்வதேச சக்திகளுக்குப் பின்னாலும் இழுபடும் நிலையில்தான் இன்று புத்திஜீவிகள், பொது அமைப்புகள், செயற்பாட்டியக்கத்தினர், ஊடகங்கள் போன்ற தரப்புகளிடத்திலே காணக்கூடியதாக உள்ளது.

ஒட்டுமொத்தத்தில் பல தளங்களிலும் அடிச்சட்ட மாற்றங்கள் நிகழ வேண்டும். நிகழ்த்தப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் தேர்தல்கள் பெறுமதியாகும். தேர்தல் முடிவுகள் இனிப்பாகும். நாம் அளிக்கின்ற வாக்குகள் பெறுமதியாகும். பலமாகும்.

 இல்லையெனில் அது வீணாகும். பதிலாக அவற்றைத் தந்திரமாக கையகப்படுத்தும் தரப்புகள் நம்மைப் பலவீனப்படுத்தும். அதுவே நடந்து கொண்டிருக்கிறது. இனியும் அதுதான் நடக்கும் என்று துணிந்து கூறலாம்.

வாக்களிப்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். நாளைய தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

தங்கள் எதிர்கால நலன்கள்,பாதுகாப்பு, மனித உரிமைகள்,இனஐக்கியம் என்றெல்லாம் பல்வேறு விடயங்களை கருத்திற் கொண்டு வாக்களிக்க  வேண்டும்.

கருணாகரன்...


Add new comment

Or log in with...