சந்திரன் ஆய்வில் சலிக்காத இஸ்ரோ | தினகரன்


சந்திரன் ஆய்வில் சலிக்காத இஸ்ரோ

சந்திராயன் - 3 விண்கலம் தயாராகிறது; அடுத்த வருடம் அனுப்ப ஆயத்தம்

ந்திய விண்வெளி ஆய்வு நிலையமான 'இஸ்ரோ' சந்திரனின் ஆய்வில் இருந்து இன்னும் சலிப்படையவில்லை. சந்திரயான்_2 தோல்வியில் முடிவடைந்தாலும் இஸ்ரோ சளைத்து விடவில்லை.2020 நவம்பரில் சந்திரயான்-_3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

இஸ்ரோ நிலவிற்கு சந்திரயான்-_I விண்கலத்தை 2008ஆம் ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதனையடுத்து சந்திரயான்-_I விண்கலம் 2009 ஆம் ஆண்டு தனது ஆயுட்காலத்தை நிறைவு செய்தது.

பின்னர் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்_-2 விண்கலத்தை 'இஸ்ரோ' அனுப்பியது. ஆனால் நிலவில் இருந்து 2.1 கிமீ தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்த போது, அதனுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதிலிருந்து பிரிந்த ஓர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றி வந்து நல்ல முறையில் இப்போதும் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சந்திரயான்_ 3 திட்டம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினர். அப்போது சந்திரயான்-_3 மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, சந்திரயான்-_2 விண்கலம் எடுத்த நிலவின் நிலப்பரப்பின் முப்பரிமாண புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ‘சந்திரயான்-_2’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்து செயல்படாமல் போனாலும், அதிலிருந்து பிரிந்த ஓர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றி வந்து சிறப்பான முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஓர்பிட்டரில் 8 அதிநவீன கருவிகள் உள்ளன. அவை நிலவு குறித்த பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகின்றன.

இதில் டி.எம்.சி-2 என்ற டெரைன் கமரா, நிலவின் நிலப்பரப்பு முழுவதையும் தெளிவாக படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. நிலவின் பரப்பில் பல்வேறு தாக்கங்களால் உருவாகியிருக்கும் பெரும் பள்ளங்கள், சிறு பள்ளங்கள், முகடுகள் என அனைத்தையும் மிகத் தெளிவாக முப்பரிமாண வடிவில் படம் எடுத்து அனுப்பியிருக்கிறது.

இதன் மூலம் அந்தப் பள்ளத்தின் ஆழம், அளவு உள்ளிட்ட விபரங்களைக் கொண்டு பள்ளம் எப்படி உருவானது, அதன் வயது, தன்மை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.


Add new comment

Or log in with...