பரபரப்பு, எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் நாளை | தினகரன்


பரபரப்பு, எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் நாளை

  • 35 வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பது குறித்து  கல்விப் புலம் சார்ந்தோர் கூறிய கருத்துகள்...
  • தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இம்முறை பெரும் வேலைச்சுமை; முன்னரை விட அதிக பணச் செலவு
  • வேட்பாளர் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் தேவை
  • அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள்

- 26 அங்குல நீளமான நீண்ட வாக்குச் சீட்டு
- வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பெரிய வாக்குப் பெட்டிகள்
- வாக்களிக்கும் நேரம் ஒரு மணித்தியாலம் நீடிப்பு

"35 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதால் 26 அங்குலத்தில் வாக்குச்சீட்டின் நீளம் இருப்பது அவ்வளவு சிறந்ததல்ல. இதனால் வாக்குகள்  செல்லுபடியற்றதாக மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.  மக்களுக்கு வேட்பாளரையும், சின்னத்தையும் தேடுவதில் தடுமாற்ற நிலைமை  ஏற்படலாம். இந்தளவு பெரிய வாக்குச்சீட்டு உலகத்தில் எந்தவொரு நாட்டின் ஜனாதிபதித் தேர்தலிலும் இருக்குமென்று தோன்றவில்லை."

ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறுகிறது. பரபரப்பாக நடைபெற்ற தேர்தல் பிரசாரங்கள் யாவும் கடந்த புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுற்றுள்ளன.

ஒரு கோடி 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 12,845 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

இம்முறை தேர்தல் களத்தில் ஒரு பெண், இரண்டு பெளத்த மதகுருமார் உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுதான் இன்று தேர்தலில் வேலைப் பழுவை அதிகரித்திருக்கின்றது. மக்களையும் தேர்தல் ஆணைக்குழுவையும் சங்கடத்துக்குள் ஆழ்த்தியிருக்கிறது.

"ஜனாதிபதித் தேர்தல்களில் வேட்பாளர்கள் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்நிலைமை தொடருமானால் வேறொரு அரசியல் கலாசாரம் நாட்டில் ஏற்படும். 35 வேட்பாளர்கள் களமிறங்குகின்ற போது, மக்களுக்கு வீண் குழப்பம் ஏற்படும். தாமதம் ஏற்படும். அதனால் 50 வீதத்துக்கு மேல் ஒரு வேட்பாளரால் வாக்குகளைப் பெற முடியாமல் போகும். பணம் இருந்தால் அவர் ஒரு அரசியல் கட்சியில் அல்லது சுயேச்சைக் குழுவில் தேர்தலில் போட்டியிட முடியும். கட்டாயமாக இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும். ஏனென்றால் வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் அதிகமாக களமிறங்குவது மேலதிக சுமையொன்றாகும். மக்களுடைய பணத்தைத்தான் தேர்தல் ஆணைக்குழு பயன்படுத்துகிறது. தேர்தல்களில் வைத்தியர், பொறியியலாளர், சட்டத்தரணிதான் போட்டியிட வேண்டும் என்பதல்ல. ஆனால் ஜனாதிபதி என்பவர் சர்வதேசம் வரைக்கும் இந்நாட்டின் புகழை கொண்டு செல்ல வேண்டியவர். அதற்காக ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு நியாயமான ஒரு விதிமுறையையாவது கொண்டு வர வேண்டும்" என்று கல்முனை மாநகர சபை உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவிக்கிறார்.

இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் ஆகக் கூடிய (35 பேர்) வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதற் தடவையாகும். அத்துடன் மிக நீண்ட வாக்குச் சீட்டு, அதிக எண்ணிக்கையான வாக்குப் பெட்டிகள், அதிக செலவு, கூடுதல் கண்காணிப்பாளர்கள், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் போட்டியிடாமை ஆகிய விடயங்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் காணப்படுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுவது போல் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடகங்களில் தோன்றி மக்களுக்கு கருத்துச் சொல்லும் களம் அமைக்கப்பட்டாலும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தை கட்சிகள் விடுவதாக இல்லை. அவர்கள் தங்களது பாணியிலே பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

"இத்தேர்தலில் வேட்பாளர்கள் அதிகரித்திருப்பது தேர்தல் ஆணைக் குழுவுக்கு பாரிய செலவை ஏற்படுத்தியுள்ளது. இதில் மக்களின் பணம்தான் விரயமாக்கப்படுகின்றது. சில அபேட்சகர்கள் எந்தவொரு அரசியல் கொள்கையும் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்திருக்கிறார்கள். கடந்த காலங்களிலே பிரதான அபேட்சகர்களை ஆதரிப்பதாக அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள். இலவச தபால் சேவை, அரச ஊடகங்களில் அபேட்சகர்கள் தங்களது கொள்கைகளை வெளிப்படுத்துவதற்கு சம அளவிலான நேர ஒதுக்கீடுகள் போன்றன வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு மிக முக்கியமான இலவச வாய்ப்புகளையும் பிரதான அபேட்சகர் எவருக்காகவாவது சிலர் பாவிக்கின்றார்கள். இன்னும் சிலர் தாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதால் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்து பிரஜாவுரிமை பெறும் நோக்குடன் களமிறங்குகின்றனர். இவ்வாறான விடயங்கள் மாற்றப்பட வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தில் இதைவிட அதிகமான அபேட்சகர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற போது பல பிரச்சினைகளை தேர்தல் ஆணைக்குழு சந்திக்க வேண்டி ஏற்படும்" என்று CaFFE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் சின்னங்களையும் உள்ளடக்கும் வகையில் முதல் தடவையாக மிக நீண்டதான 26 அங்குலம் (66 சென்ரிமீற்றர்) நீள வாக்குச் சீட்டு இம்முறை பயன்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் வாக்காளர்களின் வசதி கருதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் கால அளவும் சுமார் ஒரு மணி நேரத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் உத்தியோகத்தர்களின் வேலைச் சுமை அதிகரிக்கும். அதேநேரம், வழமைக்கு மாறாக பெறுபேறுகள் வெளிவரும் நேரம் தாமதமடையலாமென்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது.

அதிகரித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை காரணமாக வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களின் எண்ணிக்கைகளும் இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல்வேறு விடயங்களை இந்த வேட்பாளர் அதிகரிப்பானது இரு மடங்காக்கியிருக்கிறது.

"35 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதால் 26 அங்குலத்தில் வாக்குச்சீட்டின் நீளம் இருப்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. இதனால் வாக்குகள் செல்லுபடியற்றதாக மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. மக்களுக்கு வேட்பாளரையும் சின்னத்தையும் தேடுவதில் தடுமாற்ற நிலைமை ஏற்படலாம். இந்தளவு பெரிய வாக்குச்சீட்டு உலகத்தில் எந்தவொரு நாட்டின் ஜனாதிபதித் தேர்தலிலும் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. இந்தத் தேர்தலில் டம்மி வேட்பாளர்களும் உள்ளனர். இலங்கையில் காணப்படுகின்ற பலவீனமான சட்ட ஏற்பாடுகள்தான் நிறையப் பேர் போட்டியிடக் காரணம். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பணத்தின் தொகையை அதிகரித்து குறைந்தது ஒரு மில்லியனாவது வைக்க வேண்டும். உண்மையான வேட்பாளர்கள்தான் போட்டியிட வேண்டும் என்று சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வந்தால் மாத்திரம்தான் டம்மி வேட்பாளர்களின் உள்நுழைவைக் குறைக்க முடியும்" என்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தின் தலைவர் கலாநிதி ரமீஸ் அபூவக்கர் தெரிவிக்கிறார். இதுஒருபுறமிருக்க,ஜனாதிபதித் தேர்தல் நாளை16 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. போட்டியிடும் 35 வேட்பாளர்களுள் விருப்பமான ஒருவருக்கு மட்டும் ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட வாக்கை செலுத்த முடியும். அவ்வாறாயின் வாக்களிப்பின் போது வேட்பாளரின் சின்னத்திற்கும் அவரது பெயருக்கும் எதிரே உள்ள கூட்டில் புள்ளடி இட வேண்டும். அல்லது 1 என்ற இலக்கத்தைக் குறிப்பிட வேண்டும்.

இதுதவிர, ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமாயின் முதலாவது தெரிவுக்கு நேரே 1 என்றும், ஏனைய இரு தெரிவுகளுக்கும் 2,3 என்றும் குறிப்பிட வேண்டும். நாட்டில் செல்வாக்குள்ள வேட்பாளர்கள் பலர் களமிறங்குவதால் மக்களால் சிலரை நிராகரிக்க முடியாத நிலை ஏற்படலாம். அதனால் அவர்கள் விருப்பு வாக்கை செலுத்த முயல்வார்கள் என்பது மறுக்க முடியாத விடயம்.

"நாட்டில் உள்ள 21 மில்லியன் மக்களுக்குத் தலைமை தாங்கும் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தலில் அதிகளவான (35) வேட்பாளர்கள் களத்தில் இருப்பது இதுவே முதல் முறையாகும். இவ்வாறான நிலைமை பிற்காலத்திலும் தொடரக் கூடும் என்பதால் இதனை கட்டுப்படுத்த தேர்தல் ஆணைக்குழு ஏதும் நடவடிக்கை எடுக்கவுள்ளதா?" என்று தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

“அவ்வாறு கட்டுப்படுத்துவது கஷ்டமான காரியம். சில வேட்பாளருக்குப் பின்னால் போலியாகச் செயற்படும் வேட்பாளர்கள் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தமது கொள்கைகளை தெளிவுபடுத்துவதற்காக அவர்களுக்கு 45 நிமிடம் வழங்கப்படுகின்றது. இந்த இலவச வசதிகளை பயன்படுத்தி சிலருக்கு வாக்குப் போடாதீர்கள் என்று கூறுவதற்காக அவர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களாக இருந்து கொண்டு இன்னொருவருக்கு வாக்கு போடுங்கள் என்று சொல்ல முடியாது. அது தவறானது என்றாலும் துரதிர்ஷ்டவசமாக மக்களுக்கு தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக உரிமை இருக்கின்றது என்ற அடிப்படையில் அதனை எம்மால் நிறுத்த முடியாது. சட்டத்தின் அடிப்படையில் 35 வயதுடைய சில நிபந்தனைகளுக்குட்பட்ட யாருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வழி இருக்கிறது. சட்டத்தில் அதற்கான ஏற்பாடு இருப்பதால் அதனை நாங்கள் கட்டுப்படுத்துவது கஷ்டமாகும்" என்கிறார் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்.

அதேசமயம், இம்முறை ஜனாதிபதித் தேர்தல் அதிக வேட்பாளர்களுடன் கடும் போட்டிக்கு மத்தியில் நடைபெறுவதால் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்துக்கு மேல் பெற முடியாத நிலையேற்படும் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது.

அதனால் இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணும் நிலைமை ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறாக இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது மேலும் அதிக நேரத்தை எடுக்கும். கடந்தமுறை இருந்ததை விட இரண்டு மடங்கு நீளமான வாக்குச்சீட்டு, இறக்குமதி செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகள் மற்றும் தேர்தல் கடமைகளுக்காக அதிக அளவில் அதிகாரிகள் பயன்படுத்தப்படுதல் ஆகிய விடயங்கள் தேர்தல் செலவுகளை அதிகப்படுத்தியுள்ளன.

எனினும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது அவர்களின் உரிமை என்றாலும் மக்களின் பணம், நாட்டிலுள்ள அனைவரினதும் நேரம் விரயமாக்கப்படுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இதனால் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான உரிமை பறிபோகாத வகையில் உண்மையான வேட்பாளர்கள் களமிறங்குவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

அதேவேளை இருக்கும் சட்டதிட்டங்களைப் பிழையாகப் பயன்படுத்த முனைவோரை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

ஏ. மொஹமட் பாயிஸ்


Add new comment

Or log in with...