பின்லேடன் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஹீரோக்களாக கொண்டாடும் முஷர்ரப் | தினகரன்


பின்லேடன் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஹீரோக்களாக கொண்டாடும் முஷர்ரப்

காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தான் இராணுவப் பயிற்சி அளித்ததை ஊர்ஜிதப்படுத்தும் கருத்துகள்

பயங்கரவாதிகள் ஒசாமா பின் லேடன், அய்மன் அல் ஜவாரி, ஜலாலுதீன் ஹக்கானி உள்ளிட்டோர் 'பாகிஸ்தானின் ஹீரோக்கள்' என ஒரு பேட்டியில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷர்ப் தெரிவித்த கருத்துகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஜம்மு -காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர், காஷ்மீர், லடாக் ஆகியன இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது கோபம் கொண்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

காஷ்மீரில் உள்ள இளைஞர்களை இந்திய இராணுவத்துக்கு எதிராக போரிட முஜாஹிதீன்களாக பயிற்சி அளித்தது பாகிஸ்தான்தான் என்ற குற்றச்சாட்டை இந்தியா முன்வைக்கிறது. அது போல் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதையும் இந்தியா கண்டித்து வருகிறது. அத்துடன் தங்கள் மண்ணில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்ப்பதாகவும் இந்தியா குற்றம்சாட்டுகிறது.

ஆனால் இவற்றையெல்லாம் பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பர்வேஸ் முஷர்ரப் கூறிய கருத்துகள் அடங்கிய திகதி குறிப்பிடப்படாத வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பாகிஸ்தான் அரசியல்வாதி பர்ஹாத்துல்லா பாபர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் முஷர்ரப் கூறுகையில் "பாகிஸ்தானுக்கு வரும் காஷ்மீர் மக்களுக்கு ஹீரோ போன்ற வரவேற்பை எங்கள் நாடு அளிக்கிறது. நாங்கள் அவர்களை ஆதரித்து பயிற்சி அளித்தோம். இந்திய இராணுவத்துக்கு எதிராக போராடும் முஜாஹிதீன்களாக அவர்களைக் கருதினோம். அதன் பின்னர் பல்வேறு தீவிரவாத இயக்கங்களான லஷ்கர் இ தொய்பா உள்ளிட்டவை வளர்ச்சி அடைந்தன. அவர்களெல்லாம் எங்கள் ஹீரோக்கள். அதுபோல் தீவிரவாதிகள் ஒசாமா பின் லேடன், அய்மன் அல் ஜவாரி, ஜலாலுதீன் ஹக்கானி உள்ளிட்டோர் பாகிஸ்தானின் ஹீரோக்கள். 1979-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகளை விரட்டி அடிக்க ஜிஹாதிகளை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.

இந்த உலகிற்கு முஜாஹிதீன்களை கொண்டு வந்தோம். அவர்களுக்கு ஆதரவு தந்து ஆயுதங்களை அளித்தோம். தலிபான்களுக்கும் பயிற்சி அளித்தோம். அப்போதைய சூழலில் மாற்றம் ஏற்பட்டது. எங்கள் ஹீரோக்கள் எல்லாம் தற்போது வில்லன்களாகி விட்டனர்" என கூறியிருந்தார்.

என்னதான் காஷ்மீர் மக்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கவில்லை என பாகிஸ்தான் மறுத்தாலும் முஷர்ரப்பின் கருத்துகள் அதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

(One India Tamil)


Add new comment

Or log in with...