Home » 4ஆவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு?

4ஆவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு?

- அணிக்கு திரும்புகிறார் கே.எல்.ராகுல்

by Prashahini
February 20, 2024 1:08 pm 0 comment

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே வேளையில் காயத்தில் இருந்து மீண்டு உடற்தகுதியை எட்டும் நிலையில் உள்ள கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 4ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23அம் திகதி ராஞ்சியில் தொடங்குகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 9 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியிருந்தார். தற்போது வரை 17 விக்கெட்களை வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், 4ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று (20) ராஞ்சி செல்கிறது. அநேகமாக இந்த ஆட்டத்தில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும்.

அதேவேளையில் தசைப் பிடிப்பு காரணமாக 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியை எட்டும் நிலையில் உள்ளார். அவர், ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருக்கக்கூடும் என தெரிவித்தன.

ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 3 ஆட்டங்களிலும் 80.5 ஓவர்களை வீசி உள்ளார். இதனால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது. ஏற்கெனவே பணிச்சுமை காரணமாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT