அஞ்சல் சேவை தமிழ் உதாசீனம்; மொழியறிவு ஊட்டப்பட வேண்டும் | தினகரன்


அஞ்சல் சேவை தமிழ் உதாசீனம்; மொழியறிவு ஊட்டப்பட வேண்டும்

ரச சேவையானது பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை அவர்கள் பயன் பெறும் வகையில் வழங்குவதாக அமைய வேண்டும். அதுவே அரச சேவையின் எதிர்பார்ப்புமாகும். அதற்காகப் பல்வேறு நடைமுறைகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பொதுமக்களின் அன்றாட, அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் உரியபடி நிறைவேற்றப்படுவதே அரச சேவையின் சிறப்பாக அமையும்.

அரச சேவையின் சிறப்புக்கு பங்கமேற்படுவது போன்று சில செயற்பாடுகள் நிகழ்கின்றன.  இலங்கையின் அஞ்சல் சேவை அதற்கோர் தக்க எடுத்துக் காட்டாக உள்ளது.

அஞ்சல் திணைக்களத்தால் பல சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் முதலில் நினைவுக்கு வருவது கடித விநியோகமாகும். அதனாலேயே உலகில் நடைமுறையிலுள்ள சேவைகளில் அஞ்சல் சேவை முக்கியத்துவம் பெறுகின்றது. நாட்டுக்குள் மட்டுமல்ல சர்வதேசத்தையே இணைக்கும் சக்தி வாய்ந்த சேவை அஞ்சல் சேவையென்று கூறலாம். ஓரிடத்தில் ஒருவரின் தகவல்களை பிறிதோர் தூர இடத்துக்கு கொண்டு சென்று வழங்கும் பொறுப்பு இந்த அஞ்சல் சேவையின் பிரதான நோக்கமாகும். குறைந்த செலவில் விரைவாக இச்சேவை நம்நாட்டிலும் இடம்பெற்று வருகின்றது.  

அந்த நியாயமான நம்பிக்கையை இழக்கும் செயற்பாட்டிலும் இலங்கையின் அஞ்சல் சேவை சில வேளைகளில் காணப்படுகின்றது. மொழி அறிவற்ற அஞ்சல் சேவையாளர்கள் சிலரால் நமது நாட்டின் மொழிக் கொள்கை உதாசீனம் செய்யப்படுவதை மீறப்படுவதை பல எடுத்துக்காட்டுகளுடன் வெளிப்படுத்தக் கூடியதாயுள்ளது. நாட்டின் மொழிக் கொள்கை புறக்கணிக்கப்படுவதன் மூலம் அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள மொழியுரிமையை நாட்டு மக்களின் ஒருதரப்பினரான தமிழர்கள் அனுபவிக்க முடியாத நிலையுள்ளது.

இந்நாட்டின் அரச சேவையாளர்கள் அனைவரும் நாட்டின் தேசிய மற்றும் அரச கரும மொழிகளான சிங்களத்திலும் தமிழிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதியுள்ளது. அரச சேவையாளரின் நியமனத்திற்கான நிபந்தனைகளில் ஒன்றாகவே அது உள்ளது. அவ்விதிகள், அஞ்சல் திணைக்கள  பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும். இருந்த போதிலும் பல அஞ்சல் அலுவலகப் பணியாளர்கள் மாற்று மொழியில் சித்தியடைந்ததாகச் சான்றிதழ் பெற்று, படி, பதவி உயர்வுகளைப் பெற்றுள்ள போதிலும், மாற்றுமொழிப் புலமை, தகைமை பெற்றதற்கான செயற்பாடு இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர்.  

அனுபவத்தில், நேரில் சந்தித்து, அனுபவித்த, கேட்டறிந்த உண்மை நிலையை தபால் அமைச்சுக்கும், அதன் அமைச்சருக்கும் சீர் செய்யும் பொருட்டு முன்வைக்க வேண்டியுள்ளது. தமிழ் மொழியில் முகவரியிடப்பட்ட கடிதமொன்று உரிய காலத்தில் கிடைக்கப் பெறாமையை விசாரித்த போது கிடைத்த பதில் "இந்த அஞ்சல் அலுவலகத்தில் தமிழ் தெரிந்தவர்கள் இல்லை.அதனால் தமிழில் முகவரியிட்டு வரும் கடிதங்களை விநியோகிப்பதில் சிரமம் உள்ளது. தமிழ் தெரிந்து எவராது வரும் போது அவர்களின் உதவியுடன் சிங்களத்தில் எழுதி விநியோகிப்போம். இல்லாவிட்டால் அவ்வாறொருவர் வரும் வரை ஒரு பக்கத்தில் போட்டு வைப்போம்" என்பதே ஆகும்.  

அநேகமாக கடிதம் அஞ்சலில் இடப்பட்டு மறுநாளே உரியவரிடம் கிடைக்கும் திறமையான அஞ்சல் சேவை உள்ளதாகக் கூறப்படும் நம் நாட்டில், தேசிய மற்றும் அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் நிலை இவ்வாறேயுள்ளது.  

அஞ்சல் சேவையாளர்கள் அனைவரும் மாற்று மொழிகளை வாசிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென்ற விதி இன்று நேற்றல்ல பல ஆண்டுகளுக்கு முன்னே அதாவது இலங்கையில் அஞ்சல் சேவை ஆரம்பக்கப்பட்ட காலம் முதலே நடைமுறையிலுள்ளது.

அப்படியிருக்கும் போது முகவரியை வாசித்து அறிய முடியாதவர்களாக அஞ்சல் சேவையில் பலர் இருப்பது அஞ்சல் சேவைக்கும், நாட்டின் மொழிக் கொள்கைக்கும் இழுக்காக உள்ளது.  

மாற்று மொழியில் பாண்டித்தியம் பெற வேண்டியதில்லை. எழுத்துக்களை அறிந்து அதை வாசிக்கும் போது முகவரியை அதன் ஒலிவடிவத்தை தெரிந்து கொண்டால் போதும், மொழியின் எழுத்துருக்களையும், அதன் ஒலிவடிவத்தையும் மட்டும் தெரிந்திருந்தால் அதுவே முகவரியை அறிந்து கொள்ளப் போதுமானது. அந்த குறைந்த, கீழ்மட்ட அறிவைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக அஞ்சல் சேவையாளர்கள், கடிதம் விநியோகிக்கும் சேவகர்கள் பலர் உள்ளமை அவர்கள் பெற்றுள்ள மாற்று மொழி அதாவது தமிழ் மொழி அறிவுக்கான சான்றிதழைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.  

அதேபோல் அஞ்சல் அலுவலகங்கள் பலவற்றில் கடிதங்களைப் பதிவு !செய்யச் செல்லும் போது தமிழில் முகவரியிடப்பட்ட கடிதங்களைக் கண்டால் சிங்களத்திலோ, ஆங்கிலத்திலோ எழுதித் தருமாறு கேட்கப்படுகின்றது. தேசிய மொழி, நிர்வாக மொழி இவ்வாறு புறக்கணிப்புக்குள்ளாகின்றது, அவமதிக்கப்படுகின்றது.

மேலே குறிப்பிட்ட அதாவது கடிதங்களை விநியோகிப்பதற்கும், பதிவுத் தபால்களை ஏற்று பற்றுச் சீட்டு வழங்குவதற்கும் எழுத்துக்களை அறிந்து அவற்றின் ஒலி வடிவங்களைப் புரிந்து கொண்டால் மட்டும் போதுமானது. அந்த அறிவு கூட அற்றவர்களாக பெரும்பான்மையான அஞ்சல் திணைக்களப் பணியாளர்கள் உள்ளனர்.  

தமிழரோ, சிங்களவரோ மாற்று மொழி எழுத்துகளைப் பார்த்து அறிந்து கொள்வதற்கு அதிக அளவாக ஐந்து மணித்தியாலங்கள் போதுமானது என்பது கனிப்பு. அதனால் முறையாக திட்டமிட்டு அஞ்சல் சேவையிலுள்ள பணியாளர்களுக்கு மாற்று மொழி எழுத்துக்கள் பற்றிய அறிவை வழங்க தபால் அமைச்சும், தபால் திணைக்களமும் பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரியபடி மாற்று மொழியறிவை அஞ்சல் சேவைப் பணியாளர்களிடம் ஏற்படுத்துவதால் தரமான அஞ்சல் சேவையை நாட்டிலே உருவாக்கலாம்.  

நாட்டின் தேசிய மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரச ஊழியர்களுக்கான மாற்று மொழியறிவை ஏற்படுத்துவதே சிறந்த தீர்வாகும்.  

த. மனோகரன்...
(ஓய்வுபெற்ற கைத்தொழில்
நீதிமன்றப் பதிவாளர்


Add new comment

Or log in with...