கெரவலபிட்டி மின்சார உற்பத்தி மையம் 2020இல் ஆரம்பம் | தினகரன்


கெரவலபிட்டி மின்சார உற்பத்தி மையம் 2020இல் ஆரம்பம்

கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசத்தில் ஒன்றுசேரும் கழிவுப்பொருள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட  கெரவலபிடிய மின்சார உற்பத்தி மையம் 2020பெப்ரவரி மாதத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு வாழ் மக்களின் நீண்டகால கழிவுப்பொருள் அகற்றல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் முக்கியத்துவமிக்க இந்நிகழ்வினால் கொழும்பு வாழ் மக்களின் கழிவுப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமெனவும் மேலும் அவர் நம்பிக்ைக தெரிவித்தார்.                      

இலங்கையில் நகர்ப்புற கழிவுப்பொருளின் மூலம் மின்சாரம் உற்பத்திக்கான (colombo waste to Energy project) திட்டம் தொடர்பில் வெஸ்டர்ன் பவர் நிறுவனத்துடன் திருத்தப்பட்ட உடன்படிக்கை  கைச்சித்திடல் நிகழ்வு அண்மையில் மாநகர சபை குழுவறையில் மேயர் தலைமையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.                                             

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த வேலைத் திட்டத்தின் மூலம் பத்து மெகாவட் மின்சாரம் வழங்கப்படுவதுடன் கொழும்பு நகரின் கழிவுப்பொருட்கள் இந்த நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கப்படும். இது நகரின் கழிவுப்பொருள் அகற்றுவதில் எதிர்நோக்கிய நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக இது  விளங்குகின்றது.

நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எனது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதே தனது ஒரே நோக்கமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.                                 

மேயர் ரோஸி சேனாநாயக மற்றும் வெஸ்டர்ன் பவர் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க  உள்ளிட்ட பிரதிநிதிகள்  ஒப்பந்தத்தில்  கைச்சாத்திட்டனர். இருதரப்பு பொறியியலாளர்கள் உட்பட முக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.

(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்) 

 


Add new comment

Or log in with...