மாற்றுத்திறனாளிகள் தமது வாகனத்தில் செல்லலாம் | தினகரன்


மாற்றுத்திறனாளிகள் தமது வாகனத்தில் செல்லலாம்

மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய சொந்த வாகனங்களில் வாக்களிப்பு நிலையத்தின் வாசல் வரை சென்று வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தேர்தல்கள் அலுவலக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

எதிர்வரும் தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் தாங்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் வாக்களிப்பு நிலையத்தின் வாசல் வரை சென்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான அனுமதிகளை தங்களுடைய மருத்துவச் சான்றிதழ்களை தெரிவத்தாட்சி அலுவலரிடம் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். 

இத் தேர்தலில் 35அபேட்சகர்கள் போட்டியிடுவதனால் 2அடி நீளமான இவ் வாக்குச் சீட்டை மேலிருந்து கீழாக உற்றுநோக்கி வாக்களிக்க அதிக நேரம் தேவைப்படும் என்பதனால் வாக்களிப்பின் நேரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு காலை 7மணி முதல் மாலை 5மணிவரை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எனவே சகல வாக்காளர்களும் காலை நேரத்தில் நேர காலத்துக்குச் சென்று உங்களது வாக்குகளை அளித்து இந்த ஜனாதிபதித் தேர்தலைச் சிறந்த முறையில் நடத்துவதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். 

திருகோணமலை மாவட்டத்தில், 2018ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி 2லட்சத்து 81ஆயிரத்து 114பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

சேருவில தொகுதியில் 79,303, திருகோணமலை தொகுதியில் 94,781, மூதூர் தொகுதியில் 1,07,030பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

இந்த வாக்காளர் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டைவிடவும் 8,292 வாக்காளர்கள் அதிகரித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 307 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

ரொட்டவெவ குறூப், திருமலை மாவட்ட விசட நிருபர்கள் 

 


Add new comment

Or log in with...