தேர்தல் தினத்தில் நிதானம் பேணுவோம் | தினகரன்


தேர்தல் தினத்தில் நிதானம் பேணுவோம்

ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் பிரஜைகள் தான் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையாகும். எனவே, இவ்வுரிமையை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலை வரை தாமதிக்காமல் காலையில் நேர காலத்துடன் வாக்குச் சாவடிக்களுக்குச் சென்று தாம் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

வாக்களிக்க செல்லும் போது தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டை போன்ற அனுமதிக்கப்பட்ட ஆவணங்களை தம்முடன் வைத்துக் கொள்ளுங்கள். வாக்குச் சாவடிக்குள் நுழையும் போதே ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் அவசியம் இருப்பதால், குறிப்பாக முகத்திரை அணியும் பெண்கள் வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது அவர்களது முகங்களை திறந்து, ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.

வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் மஹ்ரமான ஆணுடன் செல்லுங்கள். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் வீணான பிரச்சினைகள் உருவாகுவதைத் தடுக்க வழியாக அமையும்.

அத்துடன் வாக்களித்த பின்னா் வீதிகளில் கூடி நின்று வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்காமல் பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள். தோ்தலில் வெற்றி பெறுபவர் நாட்டை நேசிக்கின்ற, குடிமக்களின் நலனுக்காக உழைக்கின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் உணா்வும் வல்லமையும் மிக்கவராக இருப்பதற்கு பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் உலமாக்கள், மஸ்ஜித் நிருவாகிகள், ஜம்இய்யாவின் பிரதேச கிளை உறுப்பினர்கள் இது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

 


Add new comment

Or log in with...