கைதான சந்தேகநபர்களுக்கு சுழிபுரம் சிறுமி கொலையுடன் தொடர்பு! | தினகரன்


கைதான சந்தேகநபர்களுக்கு சுழிபுரம் சிறுமி கொலையுடன் தொடர்பு!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியை சேர்ந்த 6வயது சிறுமியான மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கும் இக் கொலைக்கும் தொடர்புள்ளது என்பது அரச இரசாயனப் பகுப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பான உத்தியோகபூர்வ பகுப்பாய்வு அறிக்கை 2வாரங்களில் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதனால் விசாரணைகளை முன்னெடுக்க வசதியாக சந்தேக நபர்களின் விளக்கமறியலை டிசம்பர் இறுதிவரை நீடிக்கவேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற அரச சட்டவாதி மாதினி விக்கினேஸ்வரன் நீதிமன்றை கோரினார்.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயின்ற சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப் பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

பாடசாலைக்குச் சென்று திரும்பிய மாணவியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு சடலம் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் கடந்த 17மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அதற்கும் மேலதிகமாக அவர்களது விளக்கமறியலை நீடிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கே உள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரது விளக்கமறியலை மேலும் 3மாதங்களுக்கு நீடிக்குமாறு கோரி சட்ட மாஅதிபர் திணைக்களம் யாழ்.மேல் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தது.

இந்த விண்ணப்பம் மீதான விசாரணை நேற்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியலை நீடிக்குமாறு அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் சமர்ப்பணம் செய்தார்.

மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலையுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளது என்பது அரச இரசாயனப் பகுப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் உத்தியோகபூர்வ பகுப்பாய்வு அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த அறிக்கை 2வாரங்களில் நீதிமன்றுக்கு முன்வைக்கப்படும்.

எனவே சந்தேகநபர்களின் விளக்கமறியலை டிசம்பர் 26ஆம் திகதிவரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என குறிப்பிட்டார். அரச சட்டத்தரணியின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 26ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

யாழ். விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...