தேர்தல் நடவடிக்கைக்கு 5,800 பஸ்; மேலதிக சேவைக்கு 800 பஸ்கள் | தினகரன்


தேர்தல் நடவடிக்கைக்கு 5,800 பஸ்; மேலதிக சேவைக்கு 800 பஸ்கள்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊரிற்கு செல்லும் மக்களுக்காக விஷேட பஸ் சேவை கொழும்பிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது.

நேற்று முதல் இவ்வாறு விஷேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சபையின் போக்குவரத்து பொறுப்பதிகாரி பி.எச்.ஆர்.ஜே சந்திரசிறி தெரிவித்தார். சுமார் 800பஸ்கள் வரை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், 5,800பஸ்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளின் பேரில் இவ்வாறு 5,800பஸ்கள் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளன. வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்லவும் அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கான போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுமே மேற்படி பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

நான்கு நாட்களுக்கு இந்த பஸ்கள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அதற்காக தினசரி ஒரு பஸ் கட்டணமாக ரூ 15,000ரூபா போக்குவரத்து சபைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு செலுத்தவுள்ளது.

இதேவேளை, விசேட ரயில்வே சேவைகள் எதுவும் ஈடுபடுத்தப்படமாட்டாதென புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

தனியார் பஸ் சேவைகள் இன்றுமுதல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 


Add new comment

Or log in with...