ஜனாதிபதி பொது மன்னிப்பை இரத்து செய்யுமாறு மனு | தினகரன்


ஜனாதிபதி பொது மன்னிப்பை இரத்து செய்யுமாறு மனு

ரோயல் பார்க் கொலை குற்றவாளி டொன் சமந்த ஜூட் அந்தனி ஜயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய உத்தரவை இரத்துச் செய்யும் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை பெண்கள் உரிமைகள் அமைப்பொன்று தாக்கல் செய்துள்ளது.

பெண்கள் மற்றும் ஊடக கூட்டு அமைப்பு தாக்கல் செய்துள்ள இந்த அடிப்படை உரிமை மனுவில் சட்ட மாஅதிபர், டொன் சமந்த  ஜூட் அந்தனி ஜயமஹா, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், பதில் பொலிஸ் மாஅதிபர், நீதி அமைச்சர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜூட் அந்தனி ஜயமஹாவின் கடவுட்சீட்டை உடனடியாக பறிமுதல் செய்ய அல்லது இரத்துச் செய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்கவேண்டும் என்றும் மனுதாரர்கள் தமது மனுவில் கேட்டுள்ளனர்.

நாட்டின் தலைவர் வழங்கும் ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பான வழிகாட்டல்களை அரசியலமைப்பின் 34 (1) சட்டக்கூற்றின் பிரகாரம் வெளியிடுமாறு உத்தரவிடவேண்டும் என்றும் மனுதாரர் தமது மனுவில் கேட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்த போதிலும் சட்டத்தின் ஆட்சியை மொத்தமாக மீறும் வகையிலான சுதந்திரம் அவருக்கு இல்லை என்று மனுதார்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதன் மூலம் மனுதாரர்கள், இலங்கை மக்கள் மற்றும் யுவோன் ஜொன்சனின் குடும்பம் ஆகியோருக்கு அரசியலமைப்பின் 12(1) சட்டக் கூற்றின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள சமமான உத்தரவாதம் மற்றும் சட்டத்தின் முன்னால் சமமான பாதுகாப்பு ஆகியவை மொத்தமாக மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Add new comment

Or log in with...