தேர்தல் முடியும் வரை படையினர் முகாம்களுக்குள் | தினகரன்


தேர்தல் முடியும் வரை படையினர் முகாம்களுக்குள்

ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களின் வலியுறுத்தலுக்கமைய தேர்தல் நடந்து முடியும் வரை படையினரை முகாம்களுக்குள் முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இம் முடிவை தான் எடுக்கவில்லையெனவும் இது அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்றுக் காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும்  ​ேவட்பாளர்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெற்றது.

பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ, அநுரகுமார திசாநாயக்க உட்பட மற்றும் சில வேட்பாளர்கள் தமது பிரதிநிதிகளையே இதில் பங்கேற்கச் செய்திருந்தனர். அத்துடன் 20க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் சில வேட்பாளர்கள் தாங்களோ, பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இச் சந்திப்பின் போது முக்கியமான சில அறிவுறுத்தல்களை ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வழங்கினார். காலையிலேயே வாக்களிக்க ஆதரவாளர்களை ஊக்குவிக்க வேண்டும். வாக்காளர் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதாகவும் வாக்குச் சீட்டு நீளமாக காணப்படுவதாலும் போதிய கால அவகாசம் தேவைப்படுவதால் முடியுமான அளவுக்கு காலையிலேயே வாக்களிக்கச் செய்ய வேண்டும்.

மாலை 5மணி வரை காத்திருக்க வேண்டாமெனவும் ஐந்து மணிக்குப் பின்னர் வாக்காளர்கள் வரிசையில் காணப்பட்டாலும் அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட மாட்டாது.  மாலை 5.15மணிக்கு தபால் மூல வாக்குகள் எண்ணப்படுவதோடு அதனுடன் தொடர்ந்ததாக ஏனைய வாக்குகளும் எண்ணப்பட வேண்டியுள்ளது. 15நிமிடங்களுக்குள் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளதால் இந்த இறுக்கமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது.

தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்க அனைவரும் வேண்டும். வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால் இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

வாக்களிப்பு தினத்தன்று ஆதரவாளர்கள் மது அருந்துவதற்கு உதவ வேண்டமெனவும் மதுபோதையில் ஏவராவது வாக்களிப்பு நிலைய்களுக்கு அண்மித்த பகுதிகளில் நடமாடினால் அவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...