ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன மீது தாக்குதல் | தினகரன்


ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன மீது தாக்குதல்

ஹபராதுவ, மீப்பே பிரதேசத்திலுள்ள சுயாதீன ஊடகவியலாளர் லசந்த விஜேரத்னவின் வீட்டுக்குள் நேற்று புகுந்துள்ள இனந்தெரியாத நால்வர் அவரை தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இனந்தெரியாத நபர்கள் ஊடகவியலாளரை தாக்கிவிட்டு அவரது வீட்டுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பலத்த காயங்களுக்குள்ளான ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன களுகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் அதனையடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த லசந்த விஜேரத்ன,

நேற்று அதிகாலை வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டது. அதனையடுத்து வீட்டுக்கு வெளியே வந்தபோது முகத்தை மூடிய நான்கு பேர் எனது தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தினார்கள். சி.சி.டி கமரா இருக்குமானால் உடனடியாக அதனை செயலிழக்கச் செய்யுமாறு அச்சுறுத்தினார்கள்.

அதன் பின்பு தாம் சி.சி.டி கமராவை செயலிழக்கச் செய்தார்கள்.

அப்போது மனைவியும் 11மாதமே அடங்கிய குழந்தையும் தாயும் வீட்டிலிருந்தார்கள். அந்த இனந்தெரியாத நபர்கள் தமது மனைவி மீது துப்பாக்கியை காட்டி கட்டிலிலிருந்து கீழே இறங்க வேண்டாம் என அச்சுறுத்தினர். நான் கடந்த அரசாங்கத்தின் இடம்பெற்ற வீண் விரயம் மற்றும் மோசடி தொடர்பில் எழுதிய புத்தகம் தொடர்பிலேயே அவர்கள் என்னிடம் கேட்டனர்.

உனக்கு வேறு வேலை கிடையாதா? என்றும் மிரட்டினர். அதேவேளை வந்தவர்களில் இரண்டு பேர் முகத்தை முழுமையாக மறைத்தும் ஏனைய இருவர் முகத்தை அரைவாசியாக மறைத்தும் காணப்பட்டனர். அதில் ஒருவர் கையிலிருந்த நீளமான கத்தியால் என்னை தாக்கினார். அதை தடுப்பதற்காக நான் கைகளை நீட்டியபோது கைகளில் வெட்டுக்காயம் விழுந்தது. அதுதொடர்பில் ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவத்தை கண்டித்து நேற்றைய தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் நவ சமசமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற் சங்கங்களின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.(ஸ)


Add new comment

Or log in with...