பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு | தினகரன்


பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு

நாட்டின் தேசிய பொருளாதார முன்னேற்றத்திற்கு பல்கலைக்கழகங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் மூலம் பெரும் பங்களிபை வழங்க முடியுமென தென்கிழக்கு பல்கலைக்கழ உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் எட்டாவது விஞ்ஞான ஆய்வரங்கு பீடாதிபதி கலாநிதி யூ.எல். செய்னுடீன் தலைமையில் அண்மையில் பிரயோக விஞ்ஞான பீட சம்மாந்துறை வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு பீடத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்ற இவ்வாய்வரங்கினூடாக ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளின் காரணமாக தேசத்தின் முன்னேற்றத்தில் இப்பல்கலைக்கழகமும் மிகுந்த கரிசனையுடன் செயற்படுகின்றது.

ஒரு நாட்டின் அபிவிருத்திற்கு பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு இன்றியமையாததாக காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது ஆய்வுகள் விடயத்தில் முன்னிலை வகிப்பதனூடாக நாட்டின் அபிவிருத்திக்கு பெரிதும் உதவுகிறது.

பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியில் குறுகிய காலத்திற்குள் தென் கிழக்கு பல்கலைக்கழகம் சர்வதேச ரீதியில் புகழ்பெற்று காணப்படுவதோடு தொழிநுட்ப ரீதியிலும் பல்கலைக்கழகம் பரினாம வளர்ச்சி கண்டுவருகிறது.

இப்பல்கலைக்கழகம் பல சர்வதேச தேசிய ஆய்வரங்குகளை நடாத்தி சர்வதேச ரீதியில் காலடி வைத்துள்ளது. அந்த வகையில் இவ்வாய்வரங்கை ஏற்பாடு செய்த பீடாதிபதிக்கும் அதன் நிருவாகத்தினருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.

இந்த ஆய்வரங்கானது எமது சிந்தனையை விருத்தி செய்வதோடு விரிவுரையாளர்களும் மாணவர்களும் இதன் மூலம் தமது ஆய்வுத்திறனை வளர்த்துக் கொள்ளமுடியுமென்றார்.

பிரதம பேச்சாளராக கலந்துகொண்ட பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீட பேராசிரியர் எம்.ஏ. கரீமுக்கு உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...