மட்டக்களப்பு மாநகர சபை பாதீடு; 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் | தினகரன்


மட்டக்களப்பு மாநகர சபை பாதீடு; 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஆதரவாக 26 வாக்குகள், எதிராக 09 வாக்குகள்

வெல்லாவெளி தினகரன், மட்டக்களப்பு விசேட நிருபர்கள்

மட்டு. மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு17மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2020ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கும் விசேட சபை அமர்வு நேற்றுமுன்தினம் (13) மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விசேட அமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், ஆணையாளர், பிரதி ஆணையாளர், பொறியியலாளர், கணக்காளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது 2020ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை மாநகர முதல்வரால் வாசிக்கப்பட்டு சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. அதன் பின்னர் பாதீட்டின் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. வாக்கெடுப்பில் பாதீட்டுக்கு ஆதரவாக 26 வாக்குகளும் எதிராக 09 வாக்குகளும் 02 வாக்குகள் நடுநிலையாகவும் இடப்பட்டன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

நிதி ஒதுக்கீடுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் மூவர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் உட்பட 26 பேர் வாக்களித்திருந்தனர்.

நிதி ஒதுக்கீடுக்கு எதிராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவர், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவர், சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவர் உட்பட 09 பேர் வாக்களித்திருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவரும், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி உறுப்பினர் ஒருவரும் இப் நிதி ஒதுக்கீடுக்கு நடுநிலைமை வகித்தனர். அதனடிப்படையில் 17 மேலதிக வாக்குகளால் 2020ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுநிறைவேற்றப்பட்டது.

இவ்வரவு செலவு திட்டத்தில் 2020ம் ஆண்டிற்கான மொத்த வருமானமாக 421.7 மில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் சபையின் சொந்த வருமானம் 197.9 மில்லியன் ரூபாய்களாகவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன். இத்தகைய வருமானங்களை முழுமையாக அடையும் பட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைகளும் முதல்வரால் முன்மொழியப்பட்டன.

குறிப்பாக பல்வேறு தேவைகளின் அடிப்படையில் வருகின்ற பொதுமக்களுக்கு நகர மத்தியில் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருவதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மாநகர இலவச போக்குவரத்து சேவை ஒன்றினை நகர மத்திக்குள் ஆரம்பிப்பது தொடர்பாகவும், சூரிய மின்சக்தி வெளிச்சத்துடன் கூடிய வாகனத் தரிப்பிடம் ஒன்றினை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் அமைத்தல், மாநகரில் மக்கள் போக்குவரத்தினை பாதுகாப்பானதாகவும், இலகுவானதாகவும் ஏற்படுத்தும் வகையில் மாநகர எல்லைக்குட்பட்ட சவரித்துறைபாலம், முனைவீதி, புதுப்பாலம் என்பவற்றை விஸ்தரித்தல், நடைப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல், நடையாக செல்கின்றவர்களுக்கு இலகுவான போக்குவரத்து வசதி ஏற்படுத்தல் என்பவற்றை கவனத்தில் கொண்டு நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கோட்டமுனை பாலத்திலிருந்து கல்லடிப் பாலம் வரையாகவும் மற்றும் கோட்டமுனை பாலத்திலிருந்து ஊறணி சந்தி வரையாகவும் நடை பாதை அமைத்தல் போன்றன முன்னெடுக்கவுள்ளதாக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கு தீர்வுகாணும் நோக்கில் தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு அவற்றுக்கான தீர்வினை காணல் உட்பட அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் துணையுடன் நோயாளர்களின் மருத்துவ செலவீனங்களை கவனத்தில் கொண்டு அவர்கள் தமக்கு தேவையான மருந்து வகைகளை குறைந்த விலையில் பெற்றுக் கொள்வதற்கு ஒசுசல மருந்து விற்பனை கிளை ஒன்றினை நகர மத்தியில் அமைத்தலுக்கான நடவடிக்ககை மேற்கொள்ளுதல், சடலம் எரியூட்டும் கருவியொன்றினை கள்ளியங்காடு மயானத்தில் அமைத்தல் உட்பட பல்வேறு அபிவிருத்தி மற்றும் சுகாதார செயற்திட்டங்களும் இப்பாதீட்டில் உள்வாங்கப்பட்டுள்ளன.

2020ம் ஆண்டுக்கான இப்பாதீடானது, மட்டக்களப்பு மாநகரசபையின் நடப்பாட்சியின் 02வது நிதி ஒதுக்கீடுஎன்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...