அம்பாறை மக்களை அச்சுறுத்தி எவரும் வாக்குகளை பெற முடியாது | தினகரன்


அம்பாறை மக்களை அச்சுறுத்தி எவரும் வாக்குகளை பெற முடியாது

தேர்தல் தினத்தில் வாக்குச் சாவடிகளுக்கு அண்மையில் கைக் குண்டுகளை வெடிக்கச் செய்ய இருப்பதாக மக்களை மிரட்டுகின்றனர், இந்த கைக்குண்டுகளுக்கு அம்பாறை மாவட்ட மக்கள் அச்சப்பட மாட்டார்கள் என கோட்டாபயவுக்கு கூறிவைக்கிறேன்.

திருக்கோவில் குட்னிக் விளையாட்டுத் திடலில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கைக்குண்டுகள் மூலமாக என்னையும் மூன்று முறை கொலை செய்யப் பார்த்தார்கள். நாட்டில் குண்டுகளை வைத்தவர் கோட்டாபய.

மஹிந்த ராஜபக்ஷக்களின் ஆட்சியில் வெள்ளை வான் வரும், ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் அழைப்புக்கு உயிர் காக்கும் வண்டிவரும். ஐக்கிய தேசிய கட்சியில் தான் இந்த நாட்டில் வறுமை ஒழிப்பு உட்பட பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து இருந்தனர் என்பதனை நீங்கள் மறந்து விடக்கூடாது.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 65வீதமான வாக்குகளை மைத்திரிபால சிறிசேனவுக்கு பெற்றுக் கொடுத்தோம். இம்முறை சஜித் பிரேமதாச 75 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்வோம் என இந்த இடத்தில் உறுதி கூறுகின்றேன் என தெரிவித்தார்.

(திருக்கோவில் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...