ஹிஜ்ரி 11ஸபர் மாதம் திங்கட்கிழமை பிறை 28ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் ஜன்னதுல் பகீ சென்றார்கள். நல்லடக்கம் செய்து விட்டு திரும்பும் வழியில் நபி (ஸல்) அவர்களுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. உடல் சூடு அதிகமானது. இந்நிலையிலேயே 11நாட்கள் மக்களுக்கு நபியவர்கள் தொழுகை நடாத்தினார்கள். 13அல்லது 14நாட்கள் கடினமான நோயில் கழித்தார்கள். இறுதி வாரம் நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகவே நாளை நான் எங்கிருப்பேன்? நாளை நான் எங்கிருப்பேன்? என துணைவியரிடம் விசாரிக்க தொடங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் விரும்பிய வீட்டில் தங்குவதற்கு அவர்களின் துணைவியர் அனுமதித்தனர். ஒருபுறம் பழ்ல் இப்னு அப்பாஸ் (ரலி), மறுபுறம் அலீ (ரலி) தாங்கலாக கால்கள் தரையில் உரசிக்கோடுபோட்ட நிலையில் ஆயிஷா (ரலி) வீட்டுக்கு சென்றார்கள்.
நபிகளார் (ஸல்) அவர்களின் தலை துணியால் கட்டப்பட்டிருந்தது. ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிலேயே தங்களது வாழ்வின் இறுதி வாரத்தை நபி (ஸல்) அவர்கள் கழித்தார்கள். அன்னை ஆயிஷா (ரலி) ஸுரா பலக், நாஸ் மற்றும் நபி (ஸல்) அவர்களிடம் தான் கற்ற துஆக்களை ஓதி ஊதி வந்தார்கள். பரக்கத்தை நாடி நபி (ஸல்) அவர்களின் கரத்தாலேயே அவர்களைத் தடவி விட்டார்கள்.
மரணத்துக்கு 5நாட்களுக்கு முன்பு புதன்கிழமை உடல் நெருப்பாய்க் கொதித்தது. வலியும் அதிகமானது. அவ்வப்போது நபி (ஸல்) அவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டது. அப்போது பல கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து என் மீது ஊற்றுங்கள் என்கிறார்கள். தோழர்கள் நபி (ஸல்) அவர்களை ஒரு பெரிய பாத்திரத்தில் அமர வைத்து நீர் ஊற்றினார்கள். நபி (ஸல்) அவர்கள் 'போதும் போதும்' என்று கூறினார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்களின் சூடு தணியக்கண்டார்கள். தலையில் தடித்த துணியைக் கட்டிக் கொண்டு போர்வையை போர்த்தியவர்களாக மிம்பரில் வந்து அமர்ந்தார்கள். அதுதான் நபி (ஸல்) அவர்களின் கடைசி சபையாகும்.
அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து விட்டு மக்களை விழித்து உருக்கமான சில உபதேசங்களைச் செய்தார்கள். யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் அழிப்பானாக எனது கப்ரை வணங்கும் இடமாக ஆக்காதீர்கள் எனக் கூறினார்கள்.
மேலும் யாராவது நான் முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை தந்துவிட்டேன். பழி தீர்த்துக் கொள்ளட்டும். யாரையாவது கண்ணியம் குறைய திட்டியிருந்தால் இதோ நான் முன்வந்துள்ளேன். அவர் பழி தீர்த்துக் கொள்ளட்டும்.
பின்பு மிம்பரில் இருந்து இறங்கி ளுஹரைத் தொழ வைத்தார்கள். மரணத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பு வியாழக்கிழமை நபி (ஸல்) அவர்களுக்கு வலி கடுமையானது. மக்களை நோக்கி வாருங்கள் எனக்கூறி மூன்று விடயங்களைச் சொன்னார்கள்.
1. யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் ஆகியோரை அரேபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.
2. இங்கு வருகை தரும் மக்களை நான் கவனித்து உபசரித்தவாறே நீங்களும் உபசரித்து விருந்தோம்பல் செய்ய வேண்டும்.
3. அல்லாஹ்வின் வேதத்தையும் நபி வழியையும் நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
தனக்கு நோய் கடினமாக இருந்தும் அன்றைய தினம் (வியாழக்கிழமை) தொழுகை அனைத்தையும் நபி (ஸல்) அவர்களே தொழ வைத்தார்கள். அன்றைய தினம் மஃரிப் தொழுகையில் 'வல்முர்ஸலாத்து உர்பா' என்ற சூராவை ஓதி தொழவைத்தார்கள். (புகாரி)
அன்றைய தினம் இஷா நேரத்தில் மேலும் நோயின் வேகம் அதிகமானது. நபி (ஸல்) அவர்களுக்கு பள்ளிக்கு வரமுடியவில்லை. அப்போதிலிருந்து பதினேழு நேர தொழுகைகளை நபி (ஸல்) அவர்கள் நோயுடன் இருக்கும் போது அபூபக்கர் (ரலி) அவர்களை தொழ வைக்கும்படி கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
மரணத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூறக்கேட்டதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,'அறிந்து கொள்ளுங்கள் உங்களில் எவரும் அல்லாஹ் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே தவிர மரணிக்க வேண்டாம்.'
(அபூதாவூத்)
நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு ஒரு நாள் முன்பு தங்களிடமுள்ள அடிமைகளை அனைத்தையும் உரிமையிட்டார்கள். மேலும் தங்களிடம் உள்ள ஏழு தங்கக் காசுகளையும் தருமம் செய்தார்கள். தங்களது ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.
(புகாரி)
இறுதி நாள்
திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்கர் (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து 'பஜ்ர்' தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி (ஸல்) அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழவைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலை குலைய ஆரம்பித்தனர். நபி (ஸல்) அவர்கள் 'உங்களது தொழுகையை முழுமை படுத்திக் கொள்ளுங்கள்.' என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக்கொண்டார்கள்.
(புகாரி)
முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் பாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் பாத்திமா (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்தார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியாமாகக் கூறவே பாத்திமா (ரலி) அவர்கள் சிரித்தார்கள். இது பற்றி பாத்திமாவிடம் விசாரித்தபோது எனக்கு ஏற்பட்டுள்ள இந்த வலியினால் நான் இறந்துவிடுவேன் எனக்கூற நான் அழுதேன். அவர்களது குடும்பத்தில் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் எனக் கூற நான் சிரித்தேன் என்கிறார்கள்.
(புகாரி)
நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட பாத்திமா (ரலி) அவர்கள் எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே என வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
(புகாரி)
ஹஸன், ஹுஸைன் ஆகியோரை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களையும் அழைத்து அவர்களுக்கு உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள். முன்பைவிட வேதனை அதிகமானது.
மரணத் தருவாயில் இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அனைத்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும், நெஞ்சுக்கும் இடையில் மரணமானார்கள். அவரது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன்.
அவர்களுக்கு அருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக்கொண்டார்கள். 'லாஇலாஹ இல்லல்லாஹ் இன்ன லில் மவ்தி சகராத்' என்றார்கள்.
(புகாரி)
அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள், என ஆயிஷா (ரலி) செவிதாழ்த்திக் கேட்டார்கள். என்னை மன்னிப்பாயாக, என் மீது கருணை காட்டுவாயாக, உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக.
(புகாரி)
கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உயர்த்திய அவரது கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஹிஜ்ரி 11ரபிஉல் அவ்வல் மாதம் 12திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63வயதும் 4நாட்களும் ஆகியிருந்தன.
நபி (ஸல்) அவர்களின் ஜனாஸா 'ஹிபரா' ஆடையால் போர்த்தப்பட்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் முகத்தில் இருந்து போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழலானார்கள் அபூபக்கர் (ரலி) அவர்கள். இந்த வேளையில் திங்கட்கிழமை பகல் முழுவதும் முடிந்து இரவு முழுமையாக முடிந்தது. அதுவரை நபி (ஸல்) அவர்களின் புனித உடல் 'ஹிபரா' போர்வையுடன் இருந்தது.
செவ்வாய் பகல் அன்று நபி (ஸல்) அவர்களின் ஆடையை களையாமல் அப்படியே குளிப்பாட்டினர். இப்பணியில் பல மூத்த தோழர்கள் ஈடுபட்டார்கள். உஸாமாவும், ஷுக்ரானும் நீர் ஊற்ற அலி (ரலி) அவர்கள் குளிப்பாட்டினார்கள். இவ்வாறு இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள். நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்ட ஸஃது இப்னு கைஸமுவுக்குச் சொந்தமான 'கரஸ்' என்ற கிணற்றிலிருந்து நீர்கொண்டு வரப்பட்டது.
மேலும் நபி (ஸல்) அவர்கள் வெள்ளைநிற யெமன் நாட்டு பருத்தி ஆடையினால் 'கபன்' இடப்பட்டார்கள். 'இறைத்தூதர் (ஸல்) அவர்களது உயிர் எங்கு பிரிகிறதோ அங்கு அடக்கம் செய்யப்படுவார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள் அபூபக்கர் (ரலி) அவர்கள்.
உடனடியாக நபி (ஸல்) அவர்கள் மரணித்த இடத்திலுள்ள விரிப்பை அகற்றி அங்கே அபூதல்ஹா (ரலி) அவர்கள் கப்ர் தோண்டினார்கள். மக்கள் பத்து பத்து பேர் கொண்ட கூட்டம் கூட்டமாக நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் சென்று ஜனாஸா தொழுதார்கள். இதே நிலையில் செவ்வாய் கழித்து புதன் இரவு நடுநிசியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. (முஸ்னத் அஹ்மது)
தேசகீர்த்தி, மௌலவி
எம்.யூ.எம். வாலிஹ்
(அல்-அஸ்ஹரி)
There is 1 Comment
மிகவும் நன்று இன்னும்
Add new comment