அமைதியான தேர்தலுக்கு அனைவரும் இடமளியுங்கள்! | தினகரன்


அமைதியான தேர்தலுக்கு அனைவரும் இடமளியுங்கள்!

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு செய்து முடித்துள்ளது. இந்தத் தேர்தலில் 2018 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படவுளளது. அதன் பிரகாரம் ஒரு கோடி, ஐம்பத்தொன்பது இலட்சத்து, 92 ஆயிரத்து 96 பேர் (1,59,92,096) வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிகக் கூடிய எண்ணிக்கையாகவே இது காணப்படுகின்றது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இதையும் மிகப் பெரிய எண்ணிக்கையாகவே பார்க்க முடிகின்றது. தேர்தல் பிரசாரப் பணிகள் நேற்றுமுன்தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளன. 48 மணிநேர அமைதிக் காலம் இப்போது நடைமுறையில் உள்ளது. இந்த அமைதிக் காலம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சில முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார். கட்சிகள், வேட்பாளர்கள்,வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அவர் அறிவுறுத்தியிருக்கின்றார்.

தேர்தல் பிரசார காலப் பகுதியில் வேட்பாளர்களும், ஊடகங்களும் பின்பற்றிய நடைமுறை குறித்து பெரும் அதிருப்தியையும் விசனத்தையும் ஆணைக்குழுத் தலைவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். சில ஊடகங்கள் மீது அவர் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பொதுவாக தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் நிறையவே பக்கச்சார்பாக நடந்து கொண்டதை வெளிப்படையாக தெரிவித்த அவர், தேர்தல் விதிகளின் பிரகாரம் அவற்றுக்கெதிராக தம்மால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாத வகையில் கைகள் கட்டப்பட்டிருப்பதாக மறைமுகமாகவே தெரிவித்திருக்கின்றார்.

சில தனியார் ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் கேள்விக் கணை தொடுத்த போது அவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்தல் சட்டவிதிகளுக்கமைய தமக்குக் கிடையாது என குறிப்பிட்டார். உண்மையிலேயே இது பாரபட்சமான செயற்பாடு என்பதை அவர் அறிந்துள்ள நிலையிலும், அவரால் எதுவும் செய்ய முடியாத இயலாமைக்குள் தள்ளப்பட்டிருப்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

சமூக வலைத் தளங்களின் செயற்பாடுகளையும் அவர் கண்டிக்கத் தவறவில்லை. தேர்தலை மையப்படுத்தி தவறானதும், போலியானதுமான தகவல்களை சமூக வலைத்தளங்களும், சில ஊடகங்களும் பரப்பி வருகின்றன. இதனை ஊடக தர்மத்தை மீறும் செயலாகவே நோக்க முடிகின்றது. இந்தச் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலைமைகளைத் தோற்றுவிப்பதாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது குறித்து ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய புள்ளி விபரங்களுடன் பகிரங்கப்படுத்தியுள்ளார். இலத்திரனியல் ஊடகங்கள் வரம்பு மீறிச் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியிடுகின்றார்.

இலங்கையில் ஊடகத்துறையின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுத்துள்ளது. மக்களின் நம்பகத்தன்மை கூட கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில இலத்திரனியல் ஊடகங்கள் முற்று முழுதாகவே பக்கச்சார்பாக நடந்து கொண்டிருப்பதை அவரது புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஜனநாயகத்தின் முக்கிய தூணாகக் கொள்ளப்படும் ஊடகத்துறையின் இன்றைய பயணப் பாதை குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. நாட்டு மக்கள் ஊடகத்துறை மீது நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர்.

குறிப்பிடத்தக்க சில ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருப்பதாக மஹிந்த தேசப்பிரிய நேற்றுமுன்தினம் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றார். இதனால் ஊடகத்துறைக்கு ஏற்படக் கூடிய அபகீர்த்தி குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தான் விரும்பாத ஒன்றைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கூட அவர் மனம் வருந்தியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின் நிலைமையை எம்மாலும் புரிந்து கொள்ள முடிகிறது. சட்டவிதிகளை மீறுவோர் விடயத்தில் அவர் நேரடியாக தலையிடாமல் அதனை நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தும் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார். எதிர்காலத்திலாவது ஊடகங்கள் பாரபட்சமின்ற ஊடக தர்மத்தைப் பேணி நேர்மையாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருக்கின்றார். ஒரு விதத்தில் இதனை நியாயமாக பார்க்க முடிகின்ற போதும், சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் முழுப் பழியையும் ஊடகங்கள் மீது சுமத்துவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகக் காண முடியவில்லை என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

இதேவேளை நாளைய வாக்களிப்பு தினத்தில் அமைதியைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வன்முறைகளுக்கோ, கைகலப்புகளுக்கோ இடமளிக்கப்படக் கூடாது. மக்கள் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது ஜனநாயக வாக்குரிமையை பயன்படுத்தி விட்டு வீடுகளில் இருக்குமாறு பாதுகாப்புத் தரப்பு கேட்டிருப்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அமைதியான, நேர்மையான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் அமைய வேண்டும் என்பதை ஜனநாயகத்தை மதிக்கும் ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்பாகும். ஜனநாயக சுதந்திரத்தை பாதுகாப்பதே ஒவ்வொருவரதும் கடப்பாடாகும். இந்தத் தேர்தல் அதற்கு வழிசமைப்பதாக அமைய வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.


Add new comment

Or log in with...