அக்கராயன் குடிநீர்த் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை | தினகரன்


அக்கராயன் குடிநீர்த் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை

கிளிநொச்சி அக்கராயன் குடிநீர்த் திட்டம் செயல் இழந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் அதிகாரிகள் எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும்  எடுக்கவில்லை என அக்கராயன் பொது அமைப்புகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் குடிநீர்த் திட்டத்தின் கிணறு அக்கராயன் இடது கரை வாய்க்காலுக்கு அருகில் அமைந்து உள்ளது. இக்கிணற்றின் நீர் ஊற்றுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என வேலைகள் தொடங்கப்பட்ட நிலையில் மழை பெய்ததன் காரணமாக வெளி வெள்ளம் கிணற்றுக்குள் கலந்ததன் காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக அக்கராயன் குடிநீர்த் திட்டம் செயல் இழந்து காணப்படுகின்றது. குடிநீரினைப் பெற்று வந்த 260 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தற்போது குடிநீரினைப் பெற்றுக் கொள்ள முடியாது தவித்து வருகின்றனர். இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள் ஆகியோருக்கு அவசரமாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் கிணற்றினைச் சுத்தப்படுத்தி வேலைகளை நிறைவு செய்து குடிநீரினை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை எனவும் அதிகாரிகள் காட்டும் அசமந்தபோக்கு காரணமாக குடிநீரினைப் பெற்று வந்த குடும்பங்கள் நீண்ட தூரங்களுக்குச் சென்று குடிநீரினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவலம் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்ட செயலாளர் இவ்விடயம் தொடர்பாக அவசர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அக்கராயன் பொது அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

முல்லைத்தீவு குறூப் நிருபர்

 

Add new comment

Or log in with...