லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் | தினகரன்


லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

சுவாசக்கோளாறு காரணமாக பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியதால் குடும்பத்தினர் அவரது உடல்நிலை பற்றிய தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர்.

லதா ஜி இப்போது நன்றாக இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. நேர்மையாக சொல்வதென்றால், மோசமான நிலைக்கு சென்ற அவர் மிகவும் கடினமாக போராடியே நல்ல நிலைக்கு வரமுடிந்தது. ஒரு பாடகியாக இருந்ததால், அவரது நுரையீரல் வலிமையாக இருந்து அவரை காப்பாற்றியது.

நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த லதா மங்கேஷ்கருக்கு, இதயத்தின் இடது கீழறையும் செயலிழந்திருக்கிறது. எனவே, ஐ.சி.யூ. அறையில் வைத்து உயிர் காக்கும் கருவிகளை பொருத்தி மருத்துவம் பார்த்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை சீரான பிறகு அவரை வீட்டுக்கு அனுப்பியதும் ரசிகர்களுக்கு தகவல் தெரிவிப்பதாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். இந்திய ரசிகர்களால் இசைக்குயில் என செல்லமாக அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என இப்படி பல விருதுகளை, அங்கீகாரங்களைத் தனதாக்கியவர் லதா மங்கேஷ்கர்.

தன்னுடைய நான்கு வயதிலேயே பாடத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடினார்.


Add new comment

Or log in with...