Friday, March 29, 2024
Home » இடைக்கால தடையுத்தரவு நீக்கப்பட்டால்35.000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

இடைக்கால தடையுத்தரவு நீக்கப்பட்டால்35.000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

by sachintha
February 20, 2024 6:33 am 0 comment

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த

நீதிமன்ற தடையுத்தரவால் போட்டிப் பரீட்சைகளையும் கடந்த பத்து மாதங்களாக நடத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு

பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளல் மற்றும் ஓய்வு பெற்ற மற்றும் சேவையிலிருந்து விலகிய ஆசிரியர்களுக்கான இடைவெளியை நிரப்புதல் என்பவற்றுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கப் பெற்றால் 35 000க்கும் மேற்பட்டோருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க முடியும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

இதன் மூலம் நாடளாவிய ரீதியில் ஆசிரியர் சேவையில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். இச்செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச பாடநூல்கள் சகல பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 12 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அதே போன்று சீருடைகளுக்கும் 6.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் சீருடைத் துணிகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை தவணைகள் மற்றும் பரீட்சைகளுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு இரு வாரங்களுக்குள் சுற்று நிருபம் ஊடாக சகல பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்படும்.

கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை, மே – ஜூன் மாதங்களில் நடத்துவதற்கும், உயர்தர பரீட்சையை டிசம்பரில் நடத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.அந்த வகையில், சாதாரண பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் உயர்தர பரீட்சையின் பெறுபெறுகளை வெளியிடவும் தீர்மானித்துள்ளோம்.

கடந்த 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பாடசாலை இடை விலகல் 7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பாடசாலை இடைவிலகல்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியான செய்திகள் உண்மையானவையல்ல.

ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிப்பரீட்சை நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவு காரணமாக சுமார் 10 மாதங்கள் கால தாமதமாகியுள்ளது.

பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயிற்சியுடன் ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கமையவே, இவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 52 000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. நீதிமன்ற விசாரணைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.

எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் இது தொடர்பான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன் இந்த நடவடிக்கைகளை எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியும். இந்த செயற்திட்டத்தின் கீழ் 22, 000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இது தவிர மேலும் 13 ,500 பேருக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்கும் நடவடிக்கையும் கிடப்பில் உள்ளது. ஓய்வு பெற்ற மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஆசிரியர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக மாகாண மட்டத்தில் ஆசிரியர்களை சேவையில் இணைப்பதற்காக சில மாகாணங்களில் போட்டிப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, நேர்முகத்தேர்வும் நிறைவடைந்துள்ளது.

நியமனம் வழங்க வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், இதற்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ள போதிலும், தீர்ப்பு மூன்று சந்தர்ப்பங்களில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இவ்வாரத்தில் அந்த தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

நீதிமன்ற தீர்ப்பையடுத்து 35 000 க்கும் மேற்பட்டோருக்கு நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும்.

இவர்களைத் தவிர விஞ்ஞானத் துறையிலும், தொழிநுட்ப துறையிலும் 5500 பட்டதாரிகளை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

மாகாண மட்டத்தில் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இதற்கான போட்டிப் பரீட்சையை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT