சர்வாதிகார ஆட்சி மீண்டும் வேண்டாம்! | தினகரன்


சர்வாதிகார ஆட்சி மீண்டும் வேண்டாம்!

மக்கள் மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி ஸ்ரீநேசன்

அக்கிரமம், அராஜகம் கொண்டோருக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கக் கூடாது!

'எமது நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதற்கும் சிறுபான்மை மக்கள் சமபிரசைகளாக வாழ்வதற்கும் சஜித்தையே வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன்.

'இந்த நாட்டின் ஜனநாயகத்தை வலுப்பெறச் செய்வதற்கும் சகல மக்களும் சமபிரசைகளாக வாழ்வதற்கும் எமது மக்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும். அதாவது ஜனநாயகப் பண்புள்ள, ஜனநாயகத்திற்குப் பரிச்சயமான, சகல மக்களையும் சமமாக மதிக்கக் கூடிய வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும். அதிலும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரையும் கவனத்திற் கொள்ள வேண்டும். அப்படியான வேட்பாளர் சஜித் பிரேமதாச என்பதை நாட்டு மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்' என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மேற்கேயுள்ள நரிப்புல்தோட்டம் கிராம மக்களுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு பேசும் போது தெரிவித்ததாவது:

"எமது மக்களைக் கடத்தியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள், படுகொலை செய்தவர்கள், முதலைகளுக்கு எமது உறவுகளைத் தீனியாக்கியவர்களுக்கு நமது மக்கள் வாக்களிக்கவே கூடாது. எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், பத்திரிகையாளர்கள், மதத் தலைவர்கள் உட்பட பொதுமக்கள் கடந்த ஆட்சியின்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இறுதியாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்ற பேதமில்லாமல் எமது மக்கள் அழிக்கப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள். இப்படியான அக்கிரமக்காரர்கள், அராஜகப் போக்குடைய வேட்பாளர் எவருக்கும் மக்கள் வாக்களிக்கவே கூடாது.

அதிகாரப் பகிர்வு மூலம் அரசியல் தீர்வை வலியுறுத்துகின்ற, ஒழுக்க விழுமியமுள்ள, ஊழல் மோசடியற்ற, மனித உரிமைகளை மதிக்கின்ற, சகல மக்களது வாக்குகளையும் வேண்டி நிற்கின்ற ஜனநாயகவாதியான வேட்பாளர் சஜித் பிரேமதாசவையே ஆதரிக்க வேண்டும். அவரது அன்னச் சின்னத்திற்கே எமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு, - கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பை புறக்கணித்ததால் மஹிந்த ஜனாதிபதியானார்.கோட்டாபய பாதுகாப்பு செயலாளர் ஆனார்.எமது மக்கள் பலியாக்கப்படார்கள். பழிதீர்க்கப்பட்டார்கள். முதலைகள் செல்லப் பிராணிகளாக்கப்பட்டன.

எமது உறவுகள் கொல்லப்படும் பிராணிகளாக்கப்பட்டனர். கடத்தினார்கள், வதைத்தார்கள், கொன்றார்கள், முதலைகளுக்கும், நாய்களுக்கும் எமது மக்கள் தீனிகளாக்கப்படார்கள். தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன. குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருந்தன. நாம் 10 ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சியினை அனுபவித்தோம். பேரினவாதிகளும், எடுபிடிகளும் சொர்க்கத்தில் வாழ்ந்தார்கள்.எமது மக்கள் நரகலோகத்திற்குள் தள்ளப்பட்டார்கள். மீண்டும் எமக்கு சர்வாதிகார ஆட்சி வேண்டவே வேண்டாம். சில தமிழ் ஒட்டுண்ணிச் சுயநலவாதிகள் பணத்திற்காக, -பதவிக்காக, சர்வாதிகார ஆட்சியை விரும்புகின்றார்கள். ஆனால் எமது மக்கள் கைக்கூலிகளாகவோ, கூலிக்கு மாரடிக்கின்றவர்களாகவோ மாற மாட்டார்கள்.

எமது தமிழ் உறவுகளே! உங்களது 5 ஆண்டுக்கொரு தடவை பயன்படுத்துகின்ற வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்துங்கள். சஜித் பிரேமதாசவின் அன்னச் சின்னமே உங்கள் தெரிவாக இருக்கட்டும். ஜனநாயகமா? பிணநாயகமா? சூடு சொரணையுள்ள எமது மக்களுக்கு ஜனநாயகமே வேண்டும்.

11.11.2019 அன்று வெள்ளைவான் சாரதி ஒருவரும், வெள்ளைவானால் கடத்தப்பட்ட ஒருவரும் அமைச்சர் ராஜித சேனரத்ன அவர்களுடன் இணைந்து ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். அதன் போது வெள்ளைவான் கடத்தலில் மேலாளராக முன்னைய பாதுகாப்புச் செயலாளர் செயற்பட்டுள்ளதாகவும் அவரது மேற்பார்வையில் பிரிகேடியர் ஒருவரும், மேஜர் ஒருவரும் கடத்தல் வேலைகளைக் கையாண்டுள்ளதகவும் கூறியுள்ளார். அப்பகுதியில் கடத்தப்பட்ட 300 ஆட்கள் சித்திரவதை செய்து, கொலை செய்யப்பட்டதன் பின்னர், மொனறாகலைக் காட்டிலுள்ள 100 இற்கு மேற்பட்ட முதலைகளுள்ள குளத்திற்குள் வீசப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர் .

தமிழ் உறவுகளே, எமது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை அறிந்த பின்பும் தவறாக வாக்களிக்காதீர்கள். வாக்குரிமையை வாழ்வுரிமையாக்கிக் கொள்ள வேண்டும்".

இவ்வாறு ஸ்ரீநேசன் எம்.பி தெரிவித்தார்.


Add new comment

Or log in with...