நாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து நிறுத்துங்கள் | தினகரன்


நாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்

வாக்களிக்க அறிவுரை கூறி கல்விமான்கள் கருத்து

கல்வி கற்றலின் நோக்கம் வெறுமனே பட்டங்களை வாங்கிக் குத்திக் கொள்வதோ ஆறிலக்க ஏழிலக்க சம்பளந்தரும் தொழிலில் ஈடுபட்டு ராஜ வாழ்க்கை வாழ்வதோ அல்ல. நல்லது நாடி தீயது விலக்கி மனித விழுமியங்களைப் பேணி வாழ்பவனே சிறந்த கல்வியாளன் சிறந்த வாண்மையாளன். சனிக்கிழமை நடக்கவுள்ள தேர்தலில் மனித விழுமியங்களை மதிக்கும் எந்த ஒருவரும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க முடியாதென கல்விமான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் எல்லாச் சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் எண்ணம் அவரிடம் அறவே இல்லை. மாறாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பேரினவாத கூடாரத்தின் நிழலில் தனக்கு ஜால்ரா அடிக்கும் சிறுபான்மை அடிவருடிகளை வைத்துக்கொண்டு அவர்களுக்குத் தேவையான எலும்புத் துண்டுகளை வீசுவதன் மூலம் சிறுபான்மை மக்களை அடக்கியாள்வதே அவரது கொள்கையாகுமென்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டை தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அனைத்துப் பொருளாதார மர்ம நிலைகளையும் தனது தேவைக்கேற்ப ஆட்டிவைப்பதன் மூலம் ஒரு சர்வாதிகார ஆட்சியை பெரும்பான்மை மக்கள் மீது திணிப்பதும் அதன்மூலம் அடுத்துவரும் தசாப்பதங்களுக்கு அசைக்க முடியாத ராஜபக்ஷ ஆட்சியை நிலைநிறுத்துவதும் அவர்களது நோக்கம். யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல இந்நாடு ஒரு குடும்பத்தின் இராட்சத கரங்களுக்குள் செல்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு வாக்களர் ஒவ்வொருவரது கரங்களிலும் உள்ளது.

கல்வியாளர் என்ற வகையிலும் வாண்மையாளர் என்ற வகையிலும் நாடு அராஜக நிலைக்கு செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஒழுக்கம் சார்ந்த பொறுப்பு எமக்குண்டு. ஜேர்மனியில் அடொல்ப் ஹிட்லரின் ஆக்ரோஷ வார்த்தைகளில் மயங்கிய மக்களுக்கு இறுதியில் என்ன கிடைத்தது என்பதை வரலாறு சொல்லும்.

அதுபோன்றதொரு தெரிவிலேயே இலங்கை மக்களும் உள்ளனர். பல்கலைக்கழக சிங்கள (புத்தி?) சீவிகள் என தங்களை அழைத்துக் கொள்வோர் சிறிதளவேனும் வெட்கமின்றி கிஞ்சித்தேனும் ஒழுக்கம் சார்ந்த உறுத்தலின்றி வெள்ளை வேன் கடத்தல்காரருக்கு ஆதரவு வழங்குகின்றனர். வெற்றி பெற்றால் உயர்பதவிகளும் பணமும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தமது விழுமியத்தை அடகுவைக்கும் சந்தர்ப்பவாதிகளே அவர்கள்.

சஜித் பிரேமதாச இனவாதம் பேசவில்லை. சிறுபான்மை இனங்களை அரவணைத்துச் செல்லும் விருப்பம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கொலை, கடத்தல் காணாமலாக்கல் முறைகேடு ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது இல்லை. வாண்மையாளர்களும் கல்விசார் சமூகமும் தமது கருத்துகளை வெளிப்படுத்தி நாட்டுக்கு நல்லவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய அழுத்தங்களை அவருக்கு வழங்க முடியும்.

குறைந்தபட்சம் அதற்கான வாய்ப்பு அவரது ஆட்சியில் கிடைக்கும். நிச்சயமாக அவரது ஆட்சியில் கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுமென்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகின்றனர். சஜித் பிரபலமான ஒரு அரசியல் வாதியாக இல்லாதிருக்கலாம். பலவீனமானவராகத் தோற்றமளிக்கலாம். கோட்டாபய சொன்னதைச் செய்யும் ஒரு கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் மக்கள் தமது சுதந்திரத்தை தொலைத்து வேறு எதனைப் பெற்றாலும் அதனால் ஏற்படும் பயன் ஏதுமில்லையென்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Add new comment

Or log in with...