முதலை கண்ணீர் வடிக்கும் கோட்டா அணி | தினகரன்


முதலை கண்ணீர் வடிக்கும் கோட்டா அணி

சமூக வளைத்தளங்களில் அமெரிக்காவுடன் பெரும் போராட்டத்தை தொடுக்கும் மொட்டு ஆதரவாளர்கள் நாட்டின் தலைமைக்கு அமெரிக்க குடியுரிமையுள்ள ஒருவரைக் கேட்பது நகைச்சுவையான விடயமாகும். கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி, பிள்ளைகள் அமெரிக்கப் பிரஜைகளே. அவர்களுக்கு இங்கு வாக்குரிமையில்லை. சமல் ராஜபக்ஷவின் மகனும், மருமகளும் அமெரிக்கப் பிரஜைகளே. பஷில் ராஜபக்ஷவின் பரம்பரையே அமெரிக்கர்களே. குடியுரிமையை நீக்கிக் கொள்ளும் நபர்களின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலப்பகுதிப் பெயர்ப்பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இல்லை. குடியுரிமையை உறுதிப்படுத்துமாறு கலாநிதி இங்குறுவத்தே சுமங்கல தேரர் உண்ணாவிதரமிருக்கிறார். அது தொடர்பாக அறிவிப்பதற்கு அழைக்கப்பட்ட ஊடக சந்திப்பில் கோட்டாபயவின் சட்டத்தரணிகள் குழுவின் தலைவரான அலி ஷப்ரி கேள்விகளுக்கு மாறுப்பட்ட குதர்க்கமான பதில்களையே கூறுகிறார். அத்தோடு  பதில்கள் தெளிவில்லாமல் இருந்தன.  

தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பின்னர் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெளிவரும் இலங்கையர் அனைவருக்கும் நன்கு பழக்கமான பல தலைப்புகள் உண்டு. அவற்றில் இரகசிய ஒப்பந்தங்களுக்கு முக்கிய இடமுண்டு.

யானை-,புலிகள் ஒப்பந்தம் தொடக்கம் சர்வதேச ஒப்பந்தம் வரை இது நீள்கின்றது. இந்நாட்களில் அதிகமாக பேசப்படுவது மில்லேனியம் சலேஞ்ச் கோபரேஷன் ஒப்பந்தம்(MCC) ஆகும். சிலர் மில்லேனியம் சலேஞ்ச் ஒப்பந்தத்தினூடாக இலங்கை அமெரிக்காவின் பொறியில் சிக்கவுள்ளதாக கூறுகின்றார்கள். அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் அழுத்தம், எல்லைப் பகிர்வு, காணிகளை குறைந்தவிலைக்கு அமெரிக்காவுக்கு விற்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் அதிலடங்குகின்றன. வேறு சிலர் இது நாட்டிற்கு நன்மையான எவ்வித சிக்கலுமற்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்கின்றார்கள்.  

மக்கள் என்ற நிலைமையிலிருந்து விலகி இரண்டு நாடுகளுக்கிடையே இராஜதந்திர மட்டத்தில் செய்யப்படும் ஒப்பந்தம் என்பதால் எமது இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் பேய் என்றோ வேண்டியதெல்லாம் கொடுக்கும் கற்பகதரு என்றோ நாம் எண்ணக்கூடாது. எமக்கு கிடைக்கும் நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்த்து மிகவும் பொருத்தமான முடிவுக்கு வரவேண்டியது புத்திசாலித்தனமாகும். ஜனநாயக நாட்டில் அவ்வாறே நடைபெறவேண்டும். அதற்காக நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகள் உள்ளன. அது குறிப்பிட்ட ஒப்பந்தத்தை இரகசிய ஒப்பந்தமாக இல்லாமல் நாட்டிற்கு தெரியபடுத்துவதாகும்.  

“மில்லேனியம் செலேன்ச் கோபரேஷன் ஒப்பந்தம்” தற்போது யாருக்கும் இரகசியமானதல்ல. 84பக்கங்களைக் கொண்ட யாரும் இணையத்தளத்தினூடாக பார்க்கக் கூடிய ஒன்றாகவுள்ளது. அது தொடர்பாக விவாதிக்கலாம், குற்றம்சாட்டலாம், யோசனைகளை முன்வைக்கலாம். ஆனால் அது பற்றி அதிகமாக கவலைக்குள்ளாகியுள்ளார்கள் எனக் கூறும் தரப்பினரால் அவர்களது ஆட்சிக்காலத்தில் இவ்வாறான ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டதும் அவற்றை செயற்படுத்தியதும் வெளிப்படையாகயல்ல என்பதை அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.  

சோபா மற்றும் எக்ஸா ஒப்பந்தம்  

“மில்லேனியம் சலேஞ்ச் கோபரேஷன் ஒப்பந்தம்” என்பது அமெரிக்க ஐக்கிய இராஜ்ஜியத்துடன் முதற்தடவையாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமல்ல. சோபா மற்றும் எக்ஸா இதற்கு முன்னர் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகும். அமெரிக்காவால் சோபா ஒப்பந்தம் முதற்தடவையாக பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியின் கீழ் 1995ம் ஆண்டிலாகும். அதாவது சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலாகும். அப்போது அமைச்சரவையைப் பிரதிநிதித்துவம் செய்த மஹிந்த ராஜபக்ஷவும் எவ்வித எதிர்ப்புமின்றி கையைத் தூக்கினார். 2005ல் ராஜபக்ஷ முதற்தடவையாக ஜனாதிபதியானவுடனும் இலங்கையின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் எனக்கூறும் சோபா ஒப்பந்தத்தை இரத்துச் செய்யவோ அல்லது அது பற்றிக் கதைக்கவோ என்னவில்லை. 1995மே மாதம் 16ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு கடவுச் சீட்டு இல்லாமல் இலங்கைக்கு வரவும், அவர்கள் பயணம்செய்யும் வாகனத்தை பரிசோதிக்க முடியாதெனவும், அவர்களுக்கு சுதந்திரமாக நாட்டில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தேவையான அனைத்து அதிகாரங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இன்றும் அமுலிலுள்ள இவ்வொப்பந்தம் பற்றி இலகுவாகப் புரிந்துகொள்வதென்றால் அமெரிக்க இராணுவ வீரர்கள் வெளிநாடுகளுக்குள் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பத்தை அளிக்கும் ஒப்பந்தமாகும்.  

இராணுவ ஊக்குவிப்புக்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கும் அதற்கு சமமான ஒப்பந்தமான 2017ஆகஸ்ட் மாதம் புதுப்பிக்கப்பட்ட உள்நுழைதல் மற்றும் மறுசீரமைப்பு சேவைகள் ஒப்பந்தம் எனப்படும் எக்ஸா ஒப்பந்தம். 2007இல் மஹிந்த ராஜபக்ஷ அரசில் முதல் முறையாக கைச்சாத்திட்ட இவ்வொப்பந்தத்துக்கு ஊக்குவிப்பு ஒத்துழைப்பு, வளங்கள், சேவைகள் மற்றும் “முன்னர் காணாத சந்தர்ப்பங்களில்” விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பாவிப்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இன்னும் வெளியிடப்படாத 2017இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மிகவும் விஸ்தீரமானதோடு ஒப்பந்தம் காலவரையறையின்றி அமுலில் உள்ளதென மட்டும் கூற முடியும்.  

மில்லேனிம் சலேஞ்ச் என்றால் என்ன?  

மில்லேனியம் செலேஞ்ச் ஒப்பந்தம் மூலமாக மீண்டும் அறவிடப்படாத உதவியாக இலங்கைக்கு 480மில்லியன் அமெரிக்க டொலர் (85பில்லியன் ரூபா) வழங்கப்படவுள்ளது. அந்த நிதி உதவி திட்ட உதவியாக கிடைக்கும்.  

போக்குவரத்துத் திட்டம்  

இதன் கீழ் மத்திய சுற்றுவட்டப் பாதைக்கு உள்ளடங்கும் பிரதேசப் பாதைகளை நவீன மயப்படுத்தல். போக்குவரத்து நெரிசலை முகாமைத்துவம் செய்தல். பொது பஸ் போக்குவரத்து சேவைகளை நவீனமயப்படுத்தல். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து முகாமைத்துவ காரியாலயமொன்றை அமைப்பது போன்ற திட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  

காணித்திட்டம்:

இதன் கீழ் தெரிவு செய்யப்பட்ட 12மாவட்டங்களில் அரசுக்குச் சொந்தமானதும் மற்றும் உரிமையாளர்களுடன் கூடிய காணிகளை அளந்து சரியான காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு அதிகாரப் பத்திரம் மூலம் காணி உரிமையை பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு, உரிய காணி உரிமையைப் பெற்றுக்கொடுத்தல், காணி உரிமைகளை டிஜிட்டல் மயப்படுத்தி அறிக்கைகளைத் தயாரிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.  

ஒப்பந்தத்திலும் இந்த உதவி வழங்கல் தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும் பல நிர்ணயங்கள் உள்ளன. அவற்றில் பொருளாதார சுதந்திரம், நியாயமான நிர்வாகம், பொதுமக்களுக்காக செய்யப்படும் முதலீடுகள் என்பன அவற்றில் அடங்குகின்றன. உதவி பெற்றுக்கொள்வதில் மில்லேனியம் செலேஞ்ச் நிறுவனம் இலங்கைக்கு முன்வைத்துள்ள எல்லைகள் சிலவும் உள்ளன.

அவ்வெல்லைகளின்படி இராணுவம், பொலிஸ், தேசிய பாதுகாப்பு அதிகாரமோ வேறு இராணுவ அமைப்புகளுக்கோ பயிற்சி அளிப்பதற்கு அந்த உதவியைப் பாவிக்க முடியாது. அமெரிக்காவின் உற்பத்தி சந்தைக்கோ, தொழிலுக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த உதவிகளை உபயோகிக்க முடியாது. சூழலுக்கு சுகாதாரத்திற்கு, சமூக துஷ்பிரயோகங்களுக்கு போன்று பெண்களுக்கு மற்றும் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க முடியாது. இதற்கான திட்டம் 2016ம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அல்லாத பிரதிநிதிகள்  

இவ்வொப்பந்தத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் திட்டங்கள் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும் பணிப்பாளர் சபையாலேயே கண்காணிக்கப்படுகின்றன. இதன் விசேட தன்மை என்னவென்றால் அந்தப் பணிப்பாளர் சபையின் எந்தவொரு அரசியல்வாதியும் உள்ளடக்கப்படவில்லை. ஜனாதிபதியின் பிரதிநிதி, பிரதமரின் பிரதிநிதி, நிதியமைச்சின் செயலாளர், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர்,காணி அமைச்சின் செயலாளர், பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், பெருந்தெருக்கள் மற்றும் பாதை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், பெண்கள் மற்றும் சிறுவர் அமைச்சின் செயலாளர், தனியார்துறையின் பிரதிநிதியொருவர், சிவில் சமூக பிரதிநிதியொருவர் என உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.  

2001தொடக்கம் 11வருடங்களாக திட்டங்கள் தீட்டப்பட்டாலும் (எம்.சி.சி.)  உதவித் தொகைக்கு இலங்கை தகுதி பெற்றது 2004இல் ஆகும். அது மேலும் பல நாடுகளுடன் இணைந்ததாகும். ஆர்மேனியா, பெனின், பொலிவியா, எல்செல்வடோர்,ஜோர்ஜியா, கானா, ஹொன்டூராஸ் போன்ற பல நாடுகள் அவற்றில் அடங்குகின்றன. இதில் முதன் முதலாக நிதியுதவி பெற்ற நாடுகள் மடகஸ்காரும் கொண்டூராசும் ஆகும். ருவண்டா இந்த உதவியை கேட்டிருந்தாலும் அதற்கான தகுதியை அந்நாடு பெறவில்லை. அதற்கு காரணம் அந்நாட்டில் காணப்பட்ட ஊழலும் முறைகேடுகளும் ஆகும். ஊழலுக்கு எதிராக மக்கள் பாதையில் இறங்கி போராடியது எம்.சி.சி உதவி அவர்களுக்கு கிடைக்காததனால் அப்போராட்டம் தீவிரமடைந்தது. எம்.சி.சி. நிதியுதவியை பெறமுடியாத நாட்டுத் தலைவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் ஒரு போராட்டக் குரலாகும்.  

துரதிஷ்டவசமாக எமது நாட்டில் எம்.சி.சிக்கு எதிராக பாதைக்கு இறங்குபவர்கள் நிதி உதவி வேண்டாம் என்றே கூறுகின்றார்கள்.அதற்கு எதிராக சத்தியாகிரகம் செய்தவர்கள் ஒப்பநதத்தைப் பற்றி கனவில் கூட அறியாதவர்களாவர். எம். சி. சி. ஒப்பந்தத்தின் நன்மை, தீமைகளை கலந்துரையாடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனாலும் உள்ளதை உள்ளபடி காண்பதற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பெரும் தடையாகும். நாட்டை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுப்பதாகவும் அது மிக இரகசியமான ஒப்பந்தமென்று  குற்றம்சாட்டும் மொட்டுக் கட்சிக்காரர்களுக்கு தமது நிர்வாகக் காலத்தில் தாம் செயற்பட்ட விதம் குறித்து நினைவில் கொள்வது புதுமையானதல்ல.  

1995இல் சந்திரிகா குமாரதுங்க முதற்தடவையாக சோபா ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டது அமைச்சரவையில் மாத்திரம் கலந்துரையாடிய பின்னராகும். அதன் பின்னர் இரண்டாவது கட்டம் 2007மார்ச் 5ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட எக்ஸா ஒப்பந்தம் அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமலேயே கையெழுத்திடப்பட்டது. அவ்வொப்பந்தத்தில்  அமெரிக்காவின பிரதிநிதியாக அப்போதைய தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்கும் இலங்கைப் பிரதிநிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுமாகும்.  

நேரடியாக அமெரிக்க இராணுவத்துக்கு யுத்த உதவி வழங்கல், அமெரிக்க இராணுவம் விசா இல்லாமல் எவ்வித பரிசோதனையுமின்றி நாட்டில் நடமாட உரிமை வழங்கிய ஒப்பந்தங்கள் கூட அமைச்சரவையின் அனுமதியின்றி கையெழுத்திட்ட  மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இவ்வாறே நடவடிக்கை எடுத்தது. இன்று எம். எம். சி ஒப்பந்தத்திற்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள் இவ்வாறானவர்களே.  

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்றல்  

எம். சி. சி. ஒப்பந்தம் மூலம் ஒரு பேர்ச் காணியை 180ரூபாவுக்கு அமெரிக்காவுக்கு விற்கப்போவதாக பொய்கூறும் மொட்டுக் கட்சிக்காரர்கள் கடந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அவர்கள் கட்டுக்கட்டாக கமிஷன் பெற்று இந்நாட்டுக் காணிகளை அமெரிக்க உள்ளிட்ட பலநாடுகளுக்கு விற்றதை மறைக்க நினைக்கின்றார்கள். அவற்றின் சிலவற்றை ஞாபகப்படுத்த வேண்டும்.

ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் சோமாவதி புண்ணிய பூமிக்கு அண்மையிலுள்ள 5ஆயிரம் ஏக்கரை அமெரிக்க டோல் நிறுவனத்துக்கு விற்றார்கள். அங்கு இன்று வெற்றிகரமாக வாழை பயிரிடப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனத்துக்கு உள்ஹிட்டியாவயில் 1500ஏக்கரும், பெல்வத்த பிரதேசத்தில் 1200ஏக்கரையும் விற்றுள்ளார்கள். போர்ட் சிட்டி திட்டத்துக்காக காலிமுகத்திடலில் 600ஏக்கரை 91வருட குத்தகைக்கு சீனாவுக்குப் பெற்றுக்கொடுக்கும் போது அந்த பூமிக்கு மேலே எந்தவொரு விமானத்துக்கோ செல்ல முடியாத வகையிலாகும்.

மக்களை முட்டாள்கள் ஆக்குவதற்கும் ஒரு எல்லை உண்டு. தற்போதைய நிலைமையில் அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு வாக்குகளை அளித்து தங்களது வாக்குகளை வீணடிக்கப் போகிறீர்களா? இந்நாட்டின் பிரஜை ஒருவரை அதிகாரத்துக்குக் கொண்டுவரப் போகிறீர்களா? என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் இதுவாகும்.    


Add new comment

Or log in with...