சவூதி இசை நிகழ்ச்சி ஒன்றில் கத்திக்குத்து: மூவருக்கு காயம் | தினகரன்


சவூதி இசை நிகழ்ச்சி ஒன்றில் கத்திக்குத்து: மூவருக்கு காயம்

சவூதி அரேபியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது மூன்று கலைஞர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தலைநகர் ரியாதின் மன்னர் அப்துல்லா பூங்கா அரங்கில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இசை நிகழ்ச்சி தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது 33 வயது யெமன் நாட்டவர் என கூறப்படும் நபர் திடீரென்று மேடை மீது ஏறி அங்கு இருந்த கலைஞர்கள் மீது கத்தியால் தாக்குவது பதிவாகியுள்ளது.

தாக்கப்பட்டவர்களில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருப்பதாகவும் அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கலைஞர்கள் வெளிநாட்டினர்கள் என்று கூறப்பட்டபோதும் எந்த நாட்டவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து அக்கலைஞர்கள் மேடையை விட்டு ஓட்டம் பிடித்ததோடு தாக்குதல் நடத்திய ஆடவரை மற்றொருவர் துரத்திப் பிடிப்பது ட்விற்றரில் வெளியான வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது.

தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் கைது செய்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதி மூடப்பட்டுள்ளன. தாக்குதலின் நோக்கம் பற்றி எந்த விபரமும் வெளியாகவில்லை.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தொடர்பில் சவூதி அரேபியாவில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் அண்மைக் காலத்தில் தளர்த்தப்பட்டது. இஸ்லாத்தில் இசை தொடர்பில் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரியாதில் இடம்பெற்று வரும் இரண்டு மாதங்கள் கொண்ட களியாட்ட விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்குகளில் மன்னர் அப்துல்லா பூங்காவும் ஒன்றாகும்.


Add new comment

Or log in with...