இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் இஸ்லாமிய ஜிஹாத் தளபதி பலி | தினகரன்


இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் இஸ்லாமிய ஜிஹாத் தளபதி பலி

சிரியாவிலும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

காசாவில் ஈரான் ஆதரவு பலஸ்தீன போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் முன்னணி தளபதி ஒருவர் இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பதில் நடவடிக்கையாக அந்த போராட்டக் குழு டெல் அவிவ் உட்பட இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகளை வீசியுள்ளது.

கடந்த ஒரு சில மாதங்களில் இடம்பெற்ற இந்த உக்கிர தாக்குதலின்போது, டமஸ்கஸில் இருக்கும் இஸ்லாமிய ஜிஹாத் அதிகாரி ஒருவரின் வீட்டை இலக்குவைத்தும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அந்த அதிகாரியின் மகன் உட்பட இருவர் கொல்லப்பட்டதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இது பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு இஸ்ரேல் மறுத்துள்ளது.

“காசா மற்றும் சிரியாவில் இஸ்ரேல் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதல் ஒரு யுத்தப் பிரகடனம்” என்று இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் காலித் அல் பட்டிஷ் குறிப்பிட்டுள்ளார். காசாவில் கொல்லப்பட்ட பாஹா அபூ அல் அத்தாவின் இறுதிச் சடங்கில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அல் அத்தாவை ஒரு ‘துடிக்கும் வெடிகுண்டு” என்று குறிப்பிட்ட இஸ்ரேலிய அதிகாரிகள், அண்மைய எல்லை தாண்டிய தாக்குதல்கள், ஆளில்லா விமானம் மற்றும் ஸ்னைப்பர் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டவர் என்று சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

“நாம் அத்தா மீது தாக்குதல் நடத்தினோம். ஏனென்றால் எமக்கு வேறு தேர்வு இருக்கவில்லை” என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் ஜோன் கொரிக்கஸ் தெரிவித்தார். “இந்த நிலையை தொடர்ந்து நீடிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் அத்தாவின் மனைவியும் கொல்லப்பட்டுள்ளார். காசா நகரின் ஷெஜய்யாவில் உள்ள அத்தா வசித்து வந்த வீடு தாக்குதலால் சீர்குலைந்துள்ளது. மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு, அத்தாவின் மரணத்திற்கு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதில் சிரிய தலைநகரில் தமது அரசியல் பிரிவு தலைவர் அக்ரம் அல் அஜூரி இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்று இஸ்லாமிய ஜிஹாம் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பல ஏவுகணைகளை பயன்படுத்தியே சிரிய தலைநகர் டமஸ்கஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சிரியா அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதில் ஒரு ஏவுகணை சுட்டு வீழ்த்திப்பட்டதாகவும் அது கூறியது.

தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இரண்டு மாடி கட்டடம் ஒன்று முழுமையாக தரைமட்டமாகி இருப்பதாக அங்கிருக்கும் ரோய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் விபரித்துள்ளார். இந்த தாக்குதல் சத்தங்களால் அதிகாலை நான்கு மணி அளவில் தான் விழித்ததாக குறிப்பிட்டிக்கும் அண்டை வீட்டார் ஒருவர், தொடர்ச்சியான மூன்று குண்டு வெடிப்புகளால் தனது வீட்டுக் கதவு திறந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்களில் ஆறு பேர் காயமடைந்ததாக சிரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. மிசா பகுதியில் பொதுமகன் ஒருவரின் வீடே தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்தப் பகுதியில் பல வெளிநாட்டு தூதரங்கள் அமைந்துள்ளன.

ஈரான் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து சிரியா மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்த பலஸ்தீன போராட்டக் குழு பல டஜன் ரொக்கெட் குண்டுகளை இஸ்ரேலை வீசி இருப்பதோடு வடக்காக தொலைதூரத்தில் டெல் அவிவிலும் சைரன் ஒலி எழுப்பப்பட்டுள்ளது. அங்கு பல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

பல ரொக்கெட் குண்டுகளை வான் பாதுகாப்பு இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் பலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலிய மருத்துவமனைகள் குறிப்பிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து காசாவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்து இருவரை இலக்கு வைத்தும் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்ததாக பலஸ்தீனத் தரப்பு கூறுகிறது. தாக்குதலுக்கு இலக்கானவர் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் ரொக்கெட் குண்டு வீசும் குழுவைச் சேர்த்தவர் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு அடுத்து மிகப்பெரிய போராட்டக் குழுவாக இஸ்லாமிய ஜிஹாத் உள்ளது.

சர்வதேச அளவில் ஆதரவு பெற்ற பாலஸ்தீனிய அதிகாரசபையிலிருந்து 2007இல் காசாவை வலுக்கட்டாயமாகக் ஹமாஸ் கைப்பற்றியதிலிருந்து, இஸ்ரேல் மற்றும் காசா போராளிகள் மூன்று போர்களை நடத்தினர். 2014இல் மூன்றாவது போர் 50 நாட்கள் நீடித்தது. இதனால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது.

இதுபோன்று அடிக்கடி வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மாத ஆரம்பத்தில் இஸ்ரேல் மீது சுமார் 10 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கு அபு அல் அத்தா தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.


Add new comment

Or log in with...