இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம் | தினகரன்


இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று பொறுப்பு அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

நாக்பூரில் இடம்பெற்ற பங்களாதேஷூக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-−1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் அய்யர் 62 ஓட்டங்களும், லோகேஷ் ராகுல் 52 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி 19.2 ஓவர்களில் 144 ஓட்டங்களில் சகல விக்கெட்டையும் இழந்து தோல்வியை சந்தித்தது. 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த பங்களாதேஷ் அணி அதன் பிறகு பெருத்த சரிவை சந்தித்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஹெட்ரிக்’ சாதனை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற 27 வயது வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் 7 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 12-வது ‘ஹெட்ரிக்’ சாதனை இதுவாகும். அத்துடன் அவர் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். பங்களாதேஷ் தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் 81 ஓட்டங்கள் பெற்றும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பொறுப்பு அணியின் தலைவர் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பந்து வீச்சாளர்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. மிடில் ஓவரில் பனித்துளியால் பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்பதை நான் அறிந்து இருந்தேன். ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி வலுவான நிலையில் இருந்தது. கடைசி 8 ஓவர்களில் அந்த அணி வெற்றிக்கு 69 ஓட்டங்களே தேவைப்பட்டது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை முன்னேற்ற பாதையில் பயணிக்க வைத்தனர். நான் வீரர்களிடம் நாட்டுக்காக விளையாடுவதை நினைவில் வைத்து செயல்படும்படி அறிவுறுத்தினேன். இந்த போட்டியில் எல்லா பாராட்டுகளும் பந்து வீச்சாளர்களையே சாரும்.

துடுப்பாட்டத்தில் ஸ்ரேயஸ் அய்யர், லோகேஷ் ராகுல் சிறப்பாக செயல்பட்டார்கள். அணியில் தங்களது பொறுப்பை உணர்ந்து எல்லா வீரர்களும் செயல்பட்டனர். உலக கிண்ண போட்டிக்கு முன்பு சில ஆட்டங்கள் தான் நமக்கு இருக்கிறது. நமது அணியின் கலவை நன்றாக உள்ளது. சில வீரர்கள் வாய்ப்பை தவற விட்டுள்ளனர். அவர்களும் அணிக்கு திரும்புவார்கள். அணியில் உள்ள எல்லா வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதனால் வீரர்களை தேர்வு செய்வது தேர்வாளர்களுக்கும், அணியின் தலைவர் விராட்கோலிக்கும் தலைவலியாக இருக்கும்.


Add new comment

Or log in with...