ஆப்கானை வெள்ளையடிப்பு செய்தது மேற்கிந்திய தீவு! | தினகரன்


ஆப்கானை வெள்ளையடிப்பு செய்தது மேற்கிந்திய தீவு!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவு அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவு அணி, 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

லக்னொவ் மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவு அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும் மத்திய தரவரிசை வீரர்கள் கைகொடுக்க அணி, கௌரவமான ஓட்டத்தை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி 15 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை, தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இப்ராஹிம் சத்ரான் 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரஹமட் ஷா 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அஸ்கர் ஆப்கான் களத்தில் நிலைத்து ஆட மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹஸ்ரதுல்லா சஸாய் 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பிறகு களமிறங்கிய நஜிபுல்லா சத்ரான் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த அஸ்கர் ஆப்கான், 86 ஓட்டங்களுக்கும், ரஷித் கான் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர். மொஹமட் நபி ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்தார்.

இதற்கமைய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கீமோ போல் 3 விக்கெட்டுகளையும், அல்சார்ரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், ரொமாரியோ செப்பர்ட் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 250 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதலிரண்டு விக்கெட்டுகளையும் 4 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை, இழந்தது.

எவீன் லீவிஸ் 1 ஓட்டத்துடனும், சிம்ரொன் ஹெட்மியர் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய பிரண்டன் கிங், மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்து 64 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டார். இதன்போது பிரண்டன் கிங்கும் 39 ஓட்டங்களுக்கும், நிக்கோலஸ் பூரான் 21 ஓட்டங்களுடனும், கிரன் பொலார்ட் 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, ரோஸ்டன் சேஸ் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 48.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மேற்கிந்திய தீவு அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியது. இதன்போது ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், முஜிப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், சராபுதீன் அஸ்ரப், மொஹமட் நபி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சாய் ஹோப்பும், தொடரின் நாயகனாக ரோஸ்டன் சேஸ்ஸும் தெரிவுசெய்யப்பட்டனர்.

அடுத்ததாக இத்தொடரின் இரு அணிகளுக்கிடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 27ஆம் திகதி லக்னோவ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...