தமிழ் முஸ்லிம்கள் மனதில் வாழும் அப்துல் மஜீத் | தினகரன்


தமிழ் முஸ்லிம்கள் மனதில் வாழும் அப்துல் மஜீத்

இன்று 32வது நினைவுதினம்

கடந்த 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி முஸ்லிம்களுக்கு நீங்காத மனவேதனையை விதைத்த தினமாகும். அரசியலில் அநாதையாக இருந்த கிழக்கு முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கி, சமூகத்தின் தனித்துவக் குரலை ஒங்கி ஒலிக்கச் செய்த ஏ.எல். அப்துல் மஜீத் இவ்வுலகை விட்டு நீங்கிய தினம் அன்றாகும். இன்று அவரது 32வது நினைவு தினமாகும். 

முஸ்லிம் மக்களது உரிமைக்காகவும் பாதுகாப்புக்காவும் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவர் அவர். திருமலை மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கியிருந்த சிறுபான்மை சமுகத்திற்கு, குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்திற்கு கலங்கரை விளக்காக திகழ்ந்தவர் மர்ஹும் அப்துல் மஜீத்.சமூக மறுமலர்ச்சிக்காக தனது வாழ்நாளை செலவிட்டவர் அவர். 

1932ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15இல் கிண்ணியாவில் முஹம்மது சுல்தான் அப்துல் லத்தீப் என்ற கிராம உத்தியோகத்தர் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் மஜீத். தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா அரசினர் ஆண்கள் வித்தியாலத்திலும், இடை நிலைக் கல்வியை திருமலை இந்துக் கல்லூரியிலும், உயர் கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும் பெற்றார். தனது மேற்படிப்புக்காக இந்தியா சென்ற அவர் திருச்சி ஜமால் கல்லூரி, புனா வாதியா கல்லூரி மற்றும் சென்னை மாநில கல்லூரியில் கற்று தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.இதனால் திருமலையின் முதலாவது முஸ்லிம் பட்டதாரியாக அடையாளப்படுத்தப்பட்டார். 

 இந்தியாவில் படிப்பை முடித்த பின்னர் 1959ஆம் ஆண்டு கிண்ணியா சிரேஷ்ட பாடசாலையின் அதிபராக கடமையேற்றார். அதன் பின்னர் மாணவ கல்வி மேம்பாட்டிற்காக உழைத்தார். மாணவர்களிடம் ஒழுக்க விழுமியங்கள் பேணப்பட வேண்டுமென்பதில் கண்டிப்பாக இருந்தார். விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென பெரிதும் உழைத்தார். 

 கிண்ணியாவில் அவர் அதிபராக இருந்த காலம் அந்தக் கால மாணவர்களின் பொற்காலம் ஆகும். மாணவர்களுக்கு தனியான சீருடை வேண்டுமென வலியுறுத்தி அதை செயலிலும் காட்டினார். கிண்ணியா சிரேஷ்ட பாடசாலையாக மிளிர்வதற்கு அவர் வழிகோலினார்.பின்னர் அதிபர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து சமூகப் பரப்பில் தனது செயற்பாடுகளை விஸ்தரித்தார். கிண்ணியாவில் இளைஞர்களை ஒருமுகப்படுத்தினார்.'கிண்ணியா முற்போக்கு வாலிபர்' என்ற அமைப்பை 1961ஆம் ஆண்டு உருவாக்கினார். 

சிறந்த பேச்சாற்றலும் சமூக வேட்கையும் கொண்ட அவர் சமூக நலன்சார் பணிகளை மேற் கொண்டர். முற்போக்கு வாலிபர் மன்றம் திருமலை மாவட்டம் மட்டுமல்லாது மட்டக்களப்பு வரைக்கும் செயற்படத் தொடங்கியது. 

1960ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மூதூர் தொகுதியில் போடடியிட்டு வெற்றி பெற்ற அவர் 1977ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகவும், பொது மராமத்து பதிலமைச்சராகவும், தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராகவும் தொடர்ச்சியாக 17வருட அரசியலில் ஈடுபட்டு அவருக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டார்.  

 தமிழ் மக்களுடன் ெநருக்கமான உறவைக் கொண்டிருந்ததனால் அவர்களின் அபிமானத்தையும் பெற்றுக் கொண்டார். தான் சாந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறுபான்மை மக்களுக்கு பிழையான முடிவுகளை எடுத்த போதெல்லாம் உடனுக்குடன் சுட்டிக் காட்டியவர் அவர்.  

 கந்தளாய் குளத்தின் நீரை திசை திருப்பி மாவட்ட விவசாயிகளுக்கு நன்மை பயக்க உழைத்தார். கிண்ணியாவில் இஸ்லாமிய கலை விழாவை நடாத்தினார். இஸ்லாமிய நுண்கலை இலக்கியம் தொடர்பான கண்காட்சியொன்றை நடத்தி கலை, கலாசார விழுமியங்களை பன்முகப்படுத்தினார். தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராக அவர் பணியாற்றிய காலத்தில் முஸ்லிம் சேவையின் ஒலிபரப்பு நேரத்தை அதிகரிக்கச் செய்தார். 

 இன்று13ஆம் திகதியுடன் அவர் மறைந்து 32வருடங்களாகின்றன ஆனால் அவர் திருகோணமலை மாவட்ட மக்களின் மனங்களிலே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் எழுதிய நூல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்." கிழக்கின் தலைநகரம் திருகோணமலை. திருகோணமலையின் தலைநகரம் கிண்ணியா. இங்கிருந்துதான் கிழக்கிற்கு ஒரு காலத்தில் முஸ்லிம் முதலமைச்சர் வருவார்" என்பதாக கூறியிருந்தார் அவரது கனவு நிறைவேறி அவரது புதல்வர் நஜிப் ஏ. மஜீத் கிழக்கின் முதலமைச்சராக பதவி வகித்தார். நீண்ட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் இவரது குடும்பத்தினர் இன்றும் சுதந்திரக் கட்சியின் தலைமைகளால் கௌரவிக்கப்படுகின்றனர். கடந்த 13.11.1987அன்று நிகழ்ந்த அப்துல் மஜீதின் அகால மரணம் துயரம் நிறைந்தது.இம்மரணம் இன்னும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. வரலாற்றிற்கு இம் முடிவு தெரியா விட்டாலும் வல்ல இறைவனுக்குத் தெரியும். ஏக அல்லாஹ் அன்னாருக்கு பிர்தௌஸ் என்ற பிரகாசமான சுவர்க்கத்தை வழங்குவானாக 

ஜமால்தீன் எம். இஸ்மத் 
கிண்ணியா 


Add new comment

Or log in with...