ஆர்ப்பாட்டக்காரரின் நெஞ்சில் சுட்ட ஹொங்கொங் பொலிஸ் | தினகரன்


ஆர்ப்பாட்டக்காரரின் நெஞ்சில் சுட்ட ஹொங்கொங் பொலிஸ்

ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்கள் நீடித்துவரும் நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் மீது நேற்று நெஞ்சில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

வீதித் தடங்கல் ஒன்றில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்ட பொலிஸார் ஒருவர் துப்பாக்கியை எடுக்கும் வீடியோ ஒன்று பேஸ்புக் சமூக ஊடகத்தில் பதிவாகியுள்ளது.

இதன்போது முகமூடி அணிந்த மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் அந்தப் பொலிஸாரை அணுகியபோது அந்த ஆர்ப்பாட்டக்காரரின் நெஞ்சில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

தள்ளுமுள்ளு நீடித்ததால் அந்த பொலிஸ் அதிகாரி மேலும் இரண்டு தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்துவது அந்த வீடியோவில் காணமுடிகிறது.

சுடப்பட்ட 21 வயது ஆர்ப்பாட்டக்காரர், அவசர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஹொங்கொங் பொலிஸ், போராட்டக்காரர்கள் பொலிஸை தாக்கி அவரது துப்பாக்கியை பிடுங்க முயற்சித்ததாகவும், அதனாலேயே அவர் சுட்டதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

ஹொங்கொங்கின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் பாதுகாப்பு பிரிவினர் முதன்முறையாக கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸாரை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு பொருள்களை வீசியதாகக் கூறப்படுகிறது.

ஹொங்கொங்கின் மேலும் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றன.

ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட 22 வயது மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.

குற்றப்பின்னணி உடையோரை நாடுகடத்துவது குறித்து ஹொங்கொங்கில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டமூலம் தொடர்பில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் தற்போது ஜனநாயக ஆதரவுப் போராட்டமாக மாறியுள்ளது.


Add new comment

Or log in with...