கோட்டாவும் சஜித்தும் வேறு வேறு இல்லை இருவரும் ஒன்றே | தினகரன்


கோட்டாவும் சஜித்தும் வேறு வேறு இல்லை இருவரும் ஒன்றே

குப்பை அள்ளுகின்ற தொழிலாளிக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்ற போதும் கூட க.பொ.த.சா.தரம் சித்தியடைந்திருக்கின்றாரா என கல்வித் தகைமை பார்க்கின்ற இந்த நாட்டில் இத்தனை இலட்சம் மக்களுக்கு தலைமை தாங்குகின்ற ஒருவரின் கல்வித் தகைமை என்ன என்பது தொடர்பில் ஏன் யாரும் பார்ப்பதில்லை எனக் கேள்வியெழுப்பியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் பிரதான வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் கா.பொ.த.சா.தரம் கூட சித்தியடையாதவர்கள் என்று தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு யாழ்பாடியில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

குறிப்பாக பிரதான வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் ஒருவர் தான்.

இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இன மத ரீதியான பேதங்களை ஏற்படுத்துகின்ற கட்சிகளாகவே இவர்களது கட்சிகள் இருக்கின்றன.

அத்தோடு இருவருமே இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காதவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பிலும் அக்கறை செலுத்தவில்லை. இவர்கள் எலும்புத் துண்டுகளைக் காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கூட்டமைப்பு எதுவித நிபந்தனைகளும் இல்லாமல் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக சொல்லியுள்ளனர்.

ஆக இவர்களும் அந்த எலும்புத் துண்டின் பின்னால் ஓடுகின்றனர் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

 

Add new comment

Or log in with...