நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதவருக்கு வாக்களியுங்கள் | தினகரன்


நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதவருக்கு வாக்களியுங்கள்

தமிழ் மக்கள் தமக்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகள், பிரச்சினைகள், தாம் வாக்களிக்காமல் விட்டமையால் ஏற்பட்ட விளைவுகள் அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து தமிழ் மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாத வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என யாழ்.வணிகர் கழகம் கோரிக்கைவிடுக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வணிகர்கழகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தவறாது வாக்களிக்க வேண்டும். கடந்த 70வருடங்களாக தமிழ் மக்களின் உரிமைக்கான அகிம்சை, ஆயுத பேராட்டங்கள் தோல்வியடைந்த நிலையில் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியாத சூழ்நிலையில் நாம் புத்திசாதூர்யமாக நடக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.  நாட்டில் சில பௌத்த பேரினவாத சக்திகளிடமும், சில சிங்கள பேரினவாத சக்திகளிடமும் தமிழ் மக்கள் சிக்கித் தவித்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வேளையில் கடந்த 70வருடங்களாக எத்தனையோ முறை பேச்சு வார்த்தை நடத்தியும், உடன்படிக்கைகள் செய்தும் எந்த சிங்கள தலைமைத்துவமும் எங்களுக்கான உரிமையை வழங்க முன்வரவில்லை. எந்த வகையான அனுகுமுறை மூலம் எமது உரிமையை பெற்றெடுக்க முடியுமென வழி தெரியாமல் ஏங்கித் தவிக்கின்றோம்.

இவ்வேளையிலே ஜனாதிபதி தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில்தான் தேசிய ரீதியில் தமிழ் மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு வாக்குரிமையை கொண்டுள்ளோம். எனவே இதை தவறாது பயன்படுத்துங்கள். தமிழ் மக்களாகிய உங்கள் அனைவருக்கும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை புரிந்துகொள்ளக்கூடிய ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டிய கடமை உள்ளது.

ஜனநாயக ரீதியில் உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டியது உங்கள் எல்லோரது கடமையுமாகும். இதன் மூலமே தற்போதிருக்கும் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த கூடிய நிலை உள்ளது.

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு தமிழர்கள் பல வழிகளிலும் இலங்கை அரசால் அடக்கியாளப்படுகின்ற நிலை வேகமாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. இப்படியானதொரு சூழ்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை காலமும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அடக்கு முறைகளில் இருந்து விடுபட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க தமிழ் மக்கள் புத்தி சாதுர்யமாகவும், மதிநுட்பமாகவும் சிந்தித்து சரியானதொரு ஜனாதிபதி வேட்பாளருக்கு தங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும்.

எந்த வேட்பாளர் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருப்பார் என நினைக்கின்றீர்களோ அவருக்கு வாக்களியுங்கள்.

தமிழ் மக்களாகிய நீங்கள் கடந்த கால வரலாறுகளை சீர்தூக்கி பார்த்தும்,  ஏற்கனவே தமிழ் மக்கள் தேர்தலை பகிஸ்கரித்ததன் மூலம் ஏற்பட்ட விளைவுகளை மனதில் கொண்டும் எவருமே இச் சந்தர்ப்பத்தை தவறவிடாது புத்திசாதூர்யமாக பகுப்பாய்வு செய்து அன்னபட்சி பாலையும் நீரையும் பகுத்தறிவதைப் போன்று நீங்களும் பகுப்பாய்வு செய்து சரியான ஒருவரை தெரிவு செய்ய எல்லா தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்.

பருத்தித்துறை விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...