அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் நாட்களை எண்ணுகின்றனர் | தினகரன்


அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் நாட்களை எண்ணுகின்றனர்

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்றது. எனவே அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் விரல்களை எண்ணி நாட்களை கணக்கிட்டு எண்ணிவருகின்றனர் என  இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

பெல்மதுளை ரில்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தமது உரையில் குறிப்பிட்டதாவது ,

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய வங்கி பணமுறி மோசடியில் ஈடுபட்டது. இதன் காரணமாக நாட்டின் வட்டி வீதம் உயர்ந்தது. எமது நாட்டிற்கு முதலீடு செய்ய எவரும் முன்வரவில்லை. அத்தோடு இந்த நாட்டிற்கு பெரும் சொத்தாக இருந்து வந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குறைந்த விலைக்கு விற்று விட்டனர். மத்தல விமான நிலையத்தை நெற்களஞ்சியமாக மாற்றினர். அதுமாத்திரமின்றி இந்த விமான நிலையத்தை விற்பதற்கு  இந்த அரசாங்கம் முயற்சி செய்தது.  சஜித் தலைமையில் புதிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாட்டின் ஆட்சியை வழங்குமாறு கோரி மக்கள் முன் செல்வது  நாட்டை அழிவுப்பாதையில் மீண்டும் தொடர்ந்து கொண்டு செல்வதற்கேயாகும். தவறியாவது இவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொடுத்தால் இந்நாட்டு மக்கள் இறுதியில் கடலில்பாய வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த அரசின் சில அமைச்சர்களின் வேண்டுதலுக்கிணங்க வியட்நாமில் இருந்து மிளகை இலங்கைக்கு வரவழைத்து மிளகு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் எமது  நாட்டு விவசாயிகளை முற்றாக கீழே தள்ளி விட்டனர். அதேசமயம் எமது நாட்டு தேயிலைக்கு வெளிநாட்டில் நல்ல மதிப்பு இருந்தது. அதனை இல்லாமல் செய்ய இந்த அரசு தேயிலையில் கலப்படம் செய்து நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இவ்வாறு ஒரு அழிவினை ஏற்படுத்திய அரசாங்கமொன்று வரலாற்றில் எப்போதுமே இருந்ததில்லை என அவர் தெரிவித்தார்.

(பலாங்கொடை தினகரன் நிருபர்)

 


Add new comment

Or log in with...