தோட்ட தொழிலாளர்களும் புலிகளே | தினகரன்


தோட்ட தொழிலாளர்களும் புலிகளே

மஹிந்த அரசு அன்று அராஜகம்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மலையக மக்களையும் விடுதலை புலிகளாகவே பார்த்தனர். கொழும்புக்கு வர விடவில்லை. தொழில்புரிய விடவில்லை. சிலர் மாயமானார்கள். இன்னும் சிலர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டனர். இன்று அவை எதுவுமில்லை என பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்றுமுன்தினம் தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொண்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அவர்,

மலையக மக்களுக்கு அமைச்சர் திகாம்பரம் கௌரவத்தினை ஏற்படுத்தியுள்ளார். நீங்கள் தோட்டத்தொழிலாளர்கள் அல்ல. மலையகத்தில் வாழுகின்ற தமிழ் மக்கள் என்ற நாமத்தினை ஏற்படுத்தியுள்ளார். முன்பெல்லாம் தோட்டம் தோட்டம் என்று தான் சொன்னார்கள். ஆனால் நீங்கள் தோட்ட பிரஜைகள் அல்ல நீங்கள் இலங்கை பிரஜைகள் நீங்கள் நாட்டில் எந்த இடத்திற்கு  வேண்டுமானாலும் செல்லலாம். நாம் அனைவரும் இலங்கையர்கள் என கூற விரும்புகிறேன்.

நான் கல்வி அமைச்சராக இருந்த போது கல்வித்துறையினையும் சுகாதார துறையினை பொறுப்பேற்றேன் நான் பிரதமராக ஆனவுடன் மலையக மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க ஆரம்பித்தேன். இன்று ஏழு பேர்ச்சஸ் காணியில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன.

இது வரை சுமார் 5000ஒப்பனைகள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் வீடுகளை கட்டிக்கொடுக்கிறோம். அதற்கு தேவையான பணத்தை இந்திய பிரதமர் மோடி தருகின்றார்.  எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இதை விட வேகமாக நாம் முன்னேற்றம் அடைவோம். கடந்த காலங்களில் அமைச்சர் இராதாகிருஸ்ணன் தலைமையில் கணிதம், விஞ்ஞானம் படிக்கக்கூடிய 25பாடசாலைகளை மலையகப்பகுதியில் உருவாக்கினோம். நானுஓயாவில் தேசிய பாடசாலை ஒன்றினை உருவாக்கியுள்ளோம். இப்போது தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் பொலிஸ் பதவியில் உள்ளனர். அரச சேவையில் உள்ளனர்.  இன்று முஸ்லிம், சிங்கள மக்களை போல் உங்களுக்கும் கௌரவத்தினை ஏற்படுத்தியிருக்கிறேன்.

கோட்டபாய ராஜபக் ஷ இந்த பகுதிக்கு என்ன செய்யப்போகிறார் என்று கூற விரும்புகிறேன். மலையக மக்கள் என்ற சொல் முடிவில்லை. அவர் தோட்ட மக்கள் என்றே சுட்டிக்காட்டியிருக்கிறார். அது மாத்திரமின்றி மலையக பகுதிகளில் மல்லிகை பூவினை உற்பத்தி செய்து அந்நியச்செலவாணியினை பெற்றுத்தர போவதாக தெரிவித்துள்ளனர்.  இது மாத்திரமன்று நாங்கள் உருவாக்கிய கணித விஞ்ஞான பாடசாலைகளை மீண்டும் உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்கள். எமது நோக்கம் தொழில் துறையினை ஊக்குவித்து நவீன தொழில்நுட்ப கல்வியை விருத்தி செய்து இந்த மலையக பகுதிகளில் அதிகமான வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(ஹற்றன் சுழற்சி நிருபர்)         

 


Add new comment

Or log in with...