Friday, March 29, 2024
Home » இந்தியாவுக்கும் அமீரகத்திற்கும் இடையில் ஒவ்வொரு துறையிலும் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் அமீரகத்திற்கும் இடையில் ஒவ்வொரு துறையிலும் கூட்டாண்மை

by Rizwan Segu Mohideen
February 17, 2024 10:48 am 0 comment

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையில் ஒவ்வொரு துறையிலும் கூட்டாண்மை உள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி இந்த ஒவ்வொரு கூட்டாண்மையிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருந்த இராஜதந்திர விஜயத்தின் போது மேற்கண்டவாறு சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, யூ.ஏ.ஈ அமீரை சகோதரர் என விழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் யூ.ஏ.ஈ அமீரே இந்தியப் பிரதமரை வெகு விமர்சையாக வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமீர் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யானுக்கும் இந்திய பிரதமருக்கும் இடையிலான இருப்பக்க சந்திப்பு அபுதாபியில் இடம்பெற்றதோடு இரு நாடுகளது தலைவர்களுக்கும் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல கைசார்த்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இங்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நானும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமீரும் கடந்த ஏழு மாதங்களில் ஐந்து தடவைகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் இவ்வாறு அரிதாகவே சந்திப்புக்கள் இடம்பெறும். எங்களது பயணத்தில் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் இந்த விஜயம் எங்களுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்றுள்ளார்.

அதேநேரம் அபுதாபியில் நடைபெற்ற உலக அரசாங்க மாநாட்டில் பங்குபற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது இந்து கோவிலையும் திறந்து வைத்தார். அத்தோடு அபுதாபியிலுள்ள புலம்பெயர் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த வைபவத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

யூ.ஏ.ஈ. இக்கான இந்தியப் பிரதமரின் விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT