2 கோடி 25 இலட்சம் மக்களோடு செய்த ஒப்பந்தமே சஜித்தின் விஞ்ஞாபானம் | தினகரன்


2 கோடி 25 இலட்சம் மக்களோடு செய்த ஒப்பந்தமே சஜித்தின் விஞ்ஞாபானம்

இனவாதத்தை விதைத்து முஸ்லிம் சமூகத்தை சித்தரவதைப்படுத்திய ஞானசார தேரரை விடுதலை செய்யவேண்டும் என்று சொன்னவர் ஹிஸ்புல்லாதான்  என  அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார். 

சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் சனிக்கிழமை (09)  கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

இந்த நாடு ஒரு அழகான நாடாகும். இங்கு நாம் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும். 30வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தில் நாம் இழந்தவை ஒன்றிரண்டல்ல உயிர்களையும் உடமைகளையும் சொத்துக்களையும் இழந்து அன்று வீதியில் நின்றோம். மீண்டும் இவ்வாறான ஒரு நிலைக்கு நாட்டை கொண்டுசெல்ல துடிக்கிறார்கள்.

சஜித் பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். கடந்த 31ஆம் திகதி என்னை மட்டுமல்ல அமைச்சர் றவூப் ஹக்கீம் உட்பட முஸ்லிம், சிங்கள, தமிழ் தலைவர்கள், சமயப் பெரியார்கள் என இந்த நாட்டின் இரண்டு கோடி 25இலட்சம் மக்களோடு செய்து கொண்ட ஒப்பந்தம் தான் சஜித் பிரேமதாசவுடைய தேர்தல் விஞ்ஞாபனமாகும். 

இந்த தேர்தல் விஞஞாபனத்தில் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார், ஏனைய மதத்தவர்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்த யாராவது முனைந்தால் அவர் மதகுருவாக இருந்தாலும் கைக்கு விலங்கிட்டு சிறையில் அடைப்பேன் என்று சொல்லியிருக்கிறார். 

ஏதிரணியினரின் ஆட்சியில் நாம் அமைச்சர்களாக இருந்த அனுபவம் இருக்கின்றது. இவர்களின் கைக்குள் இந்த நாடு வந்தால் சிறுபான்மை சமூகம் வாழமுடியாத அடிமைகளாகிவிடுவார்கள்.

பொருளாதார சொத்துகளுக்கு பாதுகாப்பில்லாமல் மதத் தலங்களுக்கு பாதுகாப்பில்லாமல் எதிர்காலம் நாசமாகி விடும். எமது பிள்ளைகள் வாழமுடியாமல் போய்விடும். சகோதரர்களே அற்ப சொற்ப ஆசைகளை காட்டி அதை தருகிறோம் இதை தருகிறோம் என்று கூறி ஏமாற்றி விடுவார்கள். ஏமாந்து விடாதீர்கள்.

கல்முனை பிரதேச செயலக பிரிப்பு, சாய்ந்தமருது நகர சபை போன்றவற்றை வைத்து சஜித் பிரேமதாசவை பழிதீர்த்து விடாதீர்கள் இந்தச் சமூகம் தோற்றுவிடும் என்று தெரிவித்தார். 

பெரியநீலாவணை விசேட நிருபர்

 

 


Add new comment

Or log in with...