உயிர்ப்பு இருப்பதாலேயே இறப்பு அர்த்தம் பெறுகிறது | தினகரன்


உயிர்ப்பு இருப்பதாலேயே இறப்பு அர்த்தம் பெறுகிறது

இயேசு வாழ்ந்த காலத்தில் இரு கட்சிகள் இருந்தன. ஒன்று பரிசேயர் கட்சி, இரண்டாவது சதுசேயர் கட்சி. இந்த இரு கட்சிகளுமே யூத நாட்டின் பொருள் படைத்த ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இதில் சதுசேயர் புதுமைகள், வானதூதர், மறுவாழ்வு என்பவையெல்லாம் நம்பாதக் கூட்டம்.  எனவே இயேசுவை சோதிக்கும் நோக்குடன் ஏழு பேருக்கு மனைவியாக இருந்து, அவர் இறந்த பின் யாருக்கு மனைவியாக இருப்பார் என்ற குறுக்குக் கேள்வியைக் கேட்டார்கள் இந்த சதுசேயர்கள்.

 உள்ளங்களை அறியும் ஆற்றல் படைத்த இயேசு, "விண்ணகத்தில் பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. வானதூதர்கள் போல் (லூக். 20:27-36) உயிர் பெற்றிருப்பார்கள்" என பதில் கூறுகிறார். ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் என்று தெளிவுபடுத்தும் கிறிஸ்து, அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக அவர் வாழ்வோரின் கடவுள் (மத். 22:32) என்று உறுதிப்படுத்துகிறார்.

உயிர்த்தெழுதலும் வாழ்வு தருபவனும் நானே. என்னில் நம்பிக்கை கொள்ளும் எவரும் இறப்பினும் வாழ்வர் (யோவா. 11:25) என்றும் தெளிவுப்படுத்துகிறார்.  இறப்பு என்பது மனிதனுக்கு முடிவு அல்ல . உயிர்ப்பு ஒன்று இருப்பதால் தான் இறப்பு அர்த்தம் பெறுகிறது. இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி , உங்களுள் குடி கொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே, சாவுக்குரிய உங்கள் உடல்களையும், உயிர்பெறச் செய்வார் (உரோ. 8:11).

 இப்படி இயேசு உயிருடன் எழுப்பப்பட வில்லையென்றால், நாம் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதே (1கொரி. 15:14), என்று திருத்தூதர் பவுல் தெளிவுப்படுத்துகிறார்.

இந்த ஒரு விசுவாசத்தின் அடிப்படையில்தான் அன்று யூத வீரத்தாயும் அவரது ஏழு மகன்களும் பன்றி இறைச்சியை உண்ண மறுத்து, தாங்கள் சாகத் தயங்கவில்லை . இரண்டாவது மகன் பலியாகுமுன், இறந்தபின், என்றென்றும் வாழும் அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார் (2மக்கபே. 7:9) என்று வீர முழக்கமிட்டு பலியானான்

பணக்காரன் ஒருவன், எல்லா சுக போகங்களையும் அனுபவித்தவன், தான் இறந்தபின் என் செல்வங்கள் அனைத்தையும் என் ஊருக்கே சொந்தம் என்று உயில் எழுதி வைத்தான். யாரும் இதைக் கண்டு ஆச்சரியப்படவும் இல்லை. அவனைப் பாராட்டவும் இல்லை.

இதைக் கண்ட பணக்காரன், ஞானியிடம் சென்று, "ஏன் மக்கள் என்னைப் பாராட்ட வில்லை ?" என்று கேட்டான். ஞானியோ, "பன்றியையும், பசுவையும் பார். பன்றியை மக்கள் வெட்டிச் சமைத்து உண்டாலும், சீ பன்றி என்று அது உயிரோடு இருக்கும் போது வெறுக்கிறார்கள். ஆனால் பசுவை மக்கள் தெய்வம் போல் வாழ்த்துகிறார்கள். காரணம் பசு உயிரோடு இருக்கும்போதே பால் கொடுத்து, இறந்த பின்னும் பயன் தருகிறது. ஆனால் பன்றியோ இறந்த பின் தான் பயன் தருகிறது."

அதுபோல விண்ணகம் என்பது உலகில் உள்ள இன்ப துன்பங்களைத் தாங்கிக் கொண்டு , நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழவும், உறவுக்கு அர்த்தம் கொடுப்பதாக அமைதல் தேவை. இவைதான் அழிவுக்குரிய உடல் அழியாமையையும், வலுவற்ற உடல் வலுவுடையதாயும் மனித இயல்பு கொண்ட உடல் ஆவிக்குரிய உயிர்பெற்று எழும் (1கொரி. 15:42-44) என்று நம்பலாமன்றோ!       -

ஆயர் பேரருட் திரு
அந்தோனிசாமி


Add new comment

Or log in with...