உலகின் முதன்மையான வத்திக்கான் 'லத்தரன்' பேராலயம் | தினகரன்


உலகின் முதன்மையான வத்திக்கான் 'லத்தரன்' பேராலயம்

உலகிலேயே முதன்மையான பேராலயம் உரோமையில் உள்ள வத்திக்கான் பேராலயமாகும்.  

உரோமையில் உள்ள “உலக மீட்பர் மற்றும் திருமுழுக்கு யோவானினதும் நற்செய்தியாளர் யோவானினதுமான தேவாலயம்’ என்று லத்தரன் பேராலயம் அழைக்கப்படுகிறது.  

லத்தரன் என்ற குடும்பத்தார் குடியிருந்த இடம் என்பதால் இப்பெயர் வந்தது. இதனை “ஆலயங்களுக்கெல்லாம் தலையானதும் தாயானதுமான ஆலயம்” என்பர்.  

இதுவே திருத்தந்தை அவர்கள் உரோமையின் பேராயர் என்ற முறையில் ஆசனம் கொண்டுள்ள அலயமாகும்.  

இதன் நேர்ந்தளிப்பு விழா நவம்பர் 9ல் கொண்டாடப்பட்டது.  

உரோமைப் பேரரசன் நீரோ கொடுங்கோலன் லத்தரன் குடும்பத்தார் மீது கோபம் கொண்டவனாக அவர்களது கோட்டையை அரசுடமையாக்கினான். ஆனால் பிற்காலத்தில் கொன்ஸ்தாந்தின் மன்னர் மனம் மாறிய போது அதனை பாப்பரசரிடம் ஒப்படைத்தார்.  

அவரும் அங்கே குடியேறி தம் தலைமை ஆலயமாக மாற்றிக்கொண்டார். எனினும் 14ம் நூற்றாண்டில் பாப்பரசர்கள் பிரான்ஸ் தேசத்தில் அஞ்ஞாதவாசம் செய்தபோது இது தன் முக்கியத்துவத்தை இழந்தது.   பின்னர் உரோமை திரும்பிய திருத்தந்தையர் இவ்வாலயம் சிதைந்துபோயிருந்ததைமயால் புதிய இடங்களில் குடியேறி இறுதியில் வத்திக்கான் வந்து சேர்ந்தனர். தற்போதும் கூட லத்தரன் வத்திக்கானிலிருந்து 4கி.மீற்றர் தொலைவில்தான் உள்ளது.   ஒருவர் இந்த ஆலயத்தின் உள்ளே முதன் முதலாக நுழைவாரானால் இருபுறமும் இரண்டு ஆள் உயரத்திற்கு இருக்கும் பன்னிரு சீடர்களின் உருவச்சிலைகளைக் கண்டு மலைத்துப் போய் விடுவார்கள்.  

1701ம் ஆண்டில் பாப்பரசரின் நெருங்கிய சகா ஒருவர் தீட்டிய சித்திரங்களை அடிப்படையாகக் கொண்டு குறுகிய காலத்திலேயே முடிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் இவை வித்தியாசமான சிற்பிகளால் செதுக்கப்பட்டுள்ளன.  

பளிச்சிடும் பளிங்கு நிலம் தென்பட மிகத் தொலைவில் தான் பீடம் தெரியும். நடுப்பீடத்திலோ புனித இராயப்பர் திருப்பலியாற்றிய மரத்திலான பீடம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியத்தின்படி புனித பவுல் சிரச்சேதம் செய்யப்பட்ட பின் அவர் தலை இந்த ஆலயத்திலேயே பாதுகாக்கப்படுகின்றது.  

ஆலயத்திற்கு வெளியே முற்றவெளியில் எகிப்தில் பார்வோன் மன்னனால் நிறுவப்பட்டிருந்த ஒரு பிரமாண்டமான ஸ்தூபி காணப்படுகின்றது.  

உரோமை மன்னர்கள் எகிப்தை வெற்றி கண்டபின் அதனை கப்பலிலேற்றி கொண்டு வந்துவிட்டார்கள். 455தொன் எடையுள்ள இத்தூபி உலகிலேயே அதிக உயரமானதாகும்.  

ஆலயத்தின் இடப்புறம் ஒரு சிறிய கட்டடத்தில் ஆண்டவர் இயேசு பிலாத்துவின் அரண்மனையில் விசாரணைக்காக ஏறிச் சென்ற பளிங்கு படிக்கட்டுக்களை பொருத்தியிருக்கின்றார்கள். அப் படிக்கட்டுக்களுக்கு மேலாக ஒரு பலகை வைத்து பாதுகாத்துள்ளனர்.  

அதன் மேல் கால் வைத்து ஏறிச் செல்ல யாருக்கும் அனுமதிக்கப்படுவதில்லை. படிகளை நாம் முழங்கால்களால் ஏற வேண்டும். இறங்க வேறு வழி உண்டு. பேராலயத்தின் உள்ளே முன்பு வைக்கப்பட்டிருந்த புனித ஹெலனாவின் கல்லறை தற்போது வத்திக்கான் அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. எனினும் 6 பாப்பரசர்களின் கல்லறைகள் இங்கே உண்டு. இதில் முக்கியமானது 13ம் சிங்கராயரின் கல்லறையாகும். (ஸ)  


Add new comment

Or log in with...