மறு உலக வாழ்வை பற்றி வலியுறுத்தும் இயேசு | தினகரன்


மறு உலக வாழ்வை பற்றி வலியுறுத்தும் இயேசு

ரணத்தையும் மறுவாழ்வையும் பற்றி அடிக்கடி சிந்திக்க தாய் திருஅவை நமக்கு வழங்கியிருக்கும் ஒரு காலம் இந்த நவம்பர் மாதம். கல்லறைகளுக்குச் செல்லுதல், இறந்தோருக்காகத் திருப்பலிகள் நிறைவேற்றுதல் என்று பொருள்நிறைந்த செயல்கள் பலவற்றில் நாம் ஈடுபடுகிறோம். அத்துடன் தற்போது, நாம் வழிபாட்டு ஆண்டின் இறுதியை நெருங்கியுள்ளோம் என்பதால் நமக்குத் தரப்பட்டுள்ள வாசகங்கள், மரணம், மறுவாழ்வு ஆகியவற்றைச் சிந்திக்க நல்லதொரு வாய்ப்பை வழங்குகின்றன.

நம்பிக்கையும் துணிவும் நிறைந்த ஒரு தாயும், அவரது ஏழு மகன்களும் மரணத்தைச் சந்திக்கும் நிகழ்வைக்கூறும் - மக்கபேயர் 2ம் நூல் 7: 1-2, 9-14 – கடந்த ஞாயிறு முதல் வாசகம், நமக்குச் சில பாடங்களைச் சொல்லித்தருகிறது. துன்பம், மரணம், ஆகியவை, இறைவனுக்கு முன் சக்தியற்றவை என்று கூறும் இக்குடும்பத்தினர், மோசே தந்த சட்டங்களை மீறுவதற்குப்பதில் சாவைச் சந்திக்கத் துணிகின்றனர். மரணத்தின் மறுபக்கம், தங்களை உயிர்த்தெழச் செய்யும் இறைவனை தாங்கள் சந்திக்கப் போவதாக அவர்கள் அறிக்கையிடுகின்றனர்:

"நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்... கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன்." மக்கபேயர் 2ம் நூல் 7: 9,14

என்று இவர்கள் கூறும் சொற்கள், உயிர்ப்பைப் பற்றிய உன்னத அறிக்கைகளாக ஒலிக்கின்றன.

உயிர்ப்பைப் பற்றிய மாற்றுக் கருத்துக்கள் கொண்ட சதுசேயர்களை நற்செய்தியில் நாம் சந்திக்கின்றோம். இவர்களை உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர்கள்' என்று நற்செய்தியாளர் லூக்கா நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். மறு உலக வாழ்வைப்பற்றி மக்களுக்கு வலியுறுத்திக் கூறிவந்த இயேசுவை மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அவரிடம் ஒரு புதிரான கேள்வியை எழுப்புகின்றனர் சதுசேயர்கள். மறுஉலக வாழ்வையும், திருமணத்தையும் இணைத்து அவர்கள் கேட்ட அந்தக் கேள்வியில் ஒலித்த ஏளனத்தை இயேசு புரிந்துகொண்டார். எனவே, அவர்கள் தொடுத்த கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் மறுவாழ்வைக் குறித்தும் அந்த வாழ்வில் நாம் சந்திக்கவிருக்கும் இறைவனைக் குறித்தும் அழகான விளக்கங்களைத் தந்தார். 

"வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" (லூக்கா நற்செய்தி 20: 34-38)என்று இயேசு தெளிவுபடுத்தினார்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் எல்லா உயிரினங்களுக்கும்  பிறப்பு, இறப்பு என்ற இரு புள்ளிகள் உண்டு. இவ்விரு புள்ளிகளையும் இணைத்து நாம் வரையும் கோலம், நமது வாழ்வு. பல நேரங்களில் நாம் வரையும் கோலம் அலங்கோலமாய் மாறினாலும், அதை அழித்துத் திருத்தி மீண்டும் மீண்டும் அழகானக் கோலம் வரைய, நமக்கு அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.

இவ்விரு புள்ளிகளில் பிறப்பு என்ற புள்ளி, எல்லாருக்கும் தெளிவாகத் தெரியும். இறப்பு என்ற புள்ளி எங்கோ ஓரிடத்தில் இருக்கிறதென்பதும் எல்லாருக்கும் தெரியும். அனைவரும் இறப்போம் என்பது நிச்சயம். ஆனால், எப்போது, எங்கே, எப்படி இறப்போம் என்பது, நமக்குத் தெரியாது. குணமாக்க இயலாத நோய் கண்ட ஒரு சிலருக்கு, அவர்களது மரணத்திற்கு நாள் குறிக்கப்படுகிறது.

புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் பலருக்கு மறுஉலக வாழ்வைத் தருவதற்கு முன் இவ்வுலகிலேயே மாறியதொரு, புதியதொரு வாழ்வைத் தந்துள்ளது. இப்புதிய வாழ்வினால் ஒரு சிலர் அற்புத குணங்களும் பெற்றுள்ளனர். ஒரு சிலர் குணம் பெற முடியவில்லையெனினும் மரணத்தைச் சந்திக்கும் முன் தங்களையும் தங்களைச் சுற்றி உள்ளவர்களையும் வெகுவாக மாற்றியுள்ளனர்.

நற்செய்தியில் மறுவாழ்வைப் பற்றிக் கூறும்போது "அவர்கள் வான தூதர்களைப் போல் இருப்பார்கள்" என்றார். மறு வாழ்வை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணத்தில் கிரெக் ஆண்டர்சன், இராண்டி பவுஷ் கீதாஞ்சலி கெய் போன்ற பல வானதூதர்களைச் சந்திக்கமுடியும். கண்களையும் செவிகளையும் உள்ளங்களையும் திறந்து இவ்வுலகப் பயணத்தை மேற்கொள்வோம்.        

ஜெரோம் லூயிஸ்


Add new comment

Or log in with...