அதிகாலையில் கண்களுக்கு தென்படுவது பனிமூட்டம் அல்ல! | தினகரன்


அதிகாலையில் கண்களுக்கு தென்படுவது பனிமூட்டம் அல்ல!

​கொழும்பிலும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலும் மாத்திரமல்லாமல் நாட்டின் பல பிரதேசங்களிலும் பனி மூட்டம் போன்ற வானிலை கடந்த சில தினங்களாக நிலவுகின்றது. குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் இந்நிலைமை தீவிர நிலையை அடைந்தது. இதனைப் பனி மூட்டம் என்று தான் பெரும்பாலானவர்கள் நம்பினர். ஆனால் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கொழும்பிலும் அதனை சூழ உள்ள பிரதேசங்களிலும் காணப்படும் பனி மூட்டம் போன்ற வானிலைக்கு உண்மையான காரணம் பனிமூட்டம் அல்ல என்பது தெரிய வந்துள்ளது.  

இவ்வாறான சூழலில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டிலான விஷேட செய்தியாளர் மாநாடொன்று கடந்த புதன்கிழமை கொழும்பில் நடாத்தப்பட்டது. அச்செய்தியாளர் மாநாட்டில் இந்த பனிமூட்டத்திற்கான காரணம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று மாசடைந்திருப்பதன் வெளிப்பாடே தற்போதைய பனிமூட்டம் போன்ற வானிலைக்கான அடிப்படைக் காரணம் என்பதை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

தற்போது புதுடில்லியில் வளி மாசடைந்துள்ளது. அந்த மாசுக்காற்றின் ஊடாக வரும் தூசு துகள்கள் தான் கொழும்பினதும் அதனை அண்டிய பிரதேசங்களதும் வளிமண்டத்தில் பனிமூட்டம் போன்ற வானிலையைத் தோற்றுவித்திருக்கின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

அதேதேரம் இவ்வானிலை காணப்படும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் உடலில் ஒரு வகை எரிவு நிலையையும் உணர்ந்துள்ளனர். அதற்கும் தற்போது வளி மாசடைந்திருப்பதற்கும் தொடர்பு இருக்கலாமென நம்பப்படுகின்றது. அதன் காரணத்தினால் இது தொடர்பில் தெளிவைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் அதிகம் கவனம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.  

இந்தியாவின் புதுடில்லியில் தற்போது ஏற்பட்டுள்ள வளி மாசு காரணமாக அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வீடுகளிலேயே இருக்குமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர். வளி மாசடைந்திருப்பதன் விளைவாக புதுடில்லியில் பல நோயாளர்கள் மூச்சு திணறலுக்கு உள்ளாகி மருத்துவமனைகளிலும் சிகிச்சையும் பெற்றுள்ளனர்.  

இந்த வளி மாசடைதலின் தாக்கம் தான் இலங்கையின் வளிமண்டலத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது. குறிப்பாக கொழும்பு நகரின் வளியில் காணப்படும் சிறுதுகள்களின் அளவு ஒரு கியூபிக் மீற்றருக்கு 50மைக்கிரோ கிராம் ஆக சமனான அளவில் உள்ள காற்றில் கடந்த செவ்வாய்கிழமை (5ஆம் திகதி) மற்றும் புதன்கிழமையாகும் (6ஆம் திகதி) போது சிறிய அளவிலான தூசு துகள்கள் 70மைக்கிரோ கிராம்கள் வரை அதிகரித்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தாம் பின்பற்றும் வளி மாசடைதல் கணிப்பீடு முறைகளு-க்கு அமைய கொழும்பின் வளிமண்டலம் குறிப்பிடத்தக்களவு மாசடைந்துள்ளது. அமெரிக்க முறையில் வளிமாசடைதலை அளவிடும் முறைமைக்கு அமைய கன மீற்றருக்கு 0 -,- 50வரையில் வளி தரமானது. ஆனால் கடந்த 5ஆம், 6ஆம் திகதிகளில் கொழும்பு நகரின் வளியின் பெறுமானம் 172வரை அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால் அது 6ஆம் திகதி மாலையாகும் அதன் பெறுமானம் 112வரை வீழ்ச்சியடைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.  

இவ்வாறு கொழும்பு நகரின் வளியில் தூசு துகள்களின் அளவு அதிகரிப்பதற்கு காற்று வீசும் திசையில் ஏற்படும் மாற்றமே அடிப்படை காரணம் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி சரத் பிரேமசிறி குறிப்பிட்டிருக்கின்றார். அதாவது புதுடில்லி வளிமண்டலத்தில் சேர்ந்துள்ள தூசு துகள்கள் காற்றுவீசும் திசைக்கு ஏற்ப கொழும்பு நகரின் வளியிலும் தாக்கம் செலுத்துகின்றது. ஆனாலும் காற்று வீசும் திசையில் அவ்வப்போது மாற்றம் ஏற்படுவதால் கொழும்பு வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அளவு கூடிக் குறைவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.  

இருப்புனும், 2018ஆம் ஆண்டில் உலக பசுமை சமாதான அமைப்பு நடாத்திய ஆய்வில் உலகில் வளி அதிகம் மாசடைந்த நகரங்களில் 30நகரங்கள் இந்தியாவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஐந்து நகரங்கள் புதுடில்லிக்கு 80கிலோ மீற்றர்கள் சுற்றளவில் காணப்படுகின்றன. அந்நகரங்கள் உலகில் மிகுந்த மாசடைந்த நகரங்களின் பட்டியிலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த வளி மாசு உடலாரோக்கியத்திற்கு உகப்பானதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக சுவாசத்தொகுதி நோயைக் கொண்டிருப்பவர்களும் சிறுக்குழந்தைகளும் முதியோரும் இதன் ஆரோக்கிய ரீதியிலான அச்சுறுத்தலைப் பெரிதும் எதிர்கொள்வர். அதனால் களைப்பைத் தரக்கூடிய வேலைகளை சுவாசத்தொகுதி நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது. அத்தோடு வெளியில் செல்லும் போது முகமூடி அணிந்து கொள்வதே ஆரோக்கியமானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

குறிப்பாக இந்த நாட்களில் சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது பாதுகாப்பானதென சிறுவர் நோயியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனனர். அதனால் சிறுவர்கள் பாசடாலை மற்றும் முன்பள்ளிக்கு செல்லும் போதும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் முகமுடியை அணிந்திருப்பதன் மூலம் சுவாசிப்பதில் ஏற்படக்கூடிய நெருக்கடிக்களை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று சிறுவர் நோயியல் நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டிருக்கின்றார்.  

ஆனாலும் சுவாசத்தொகுதியுடன் தொடர்பான நோய்கள் குறித்த அறிகுறிகள் தொடராகக் காணப்படுமாயின் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்வதே சிறந்தது. இவ்விடயத்தில் அசிரத்தையும் கவனயீனமும் உடலாரோக்கியத்திற்கு பாதிப்பாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.   எனினும் தற்போது புதுடில்லியில் ஏற்பட்டுள்ள வளி மாசு காரணமாக மாரடைப்பு, நீரிழிவு, நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்றவாறான தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாக கூறப்படுகின்றது. ஆனால் வளி மாசடைதல் காரணமாக வருடமொன்றுக்கு 70இலட்சம் பேர் உலகம் முழுவதிலும் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.  

இவ்வாறு இலங்கையிலும் இந்தியாவிலும் மாத்திரமல்லாமல் உலகலாவிய ரீதியிலும் கவனம் செலுத்தப்படும் அளவுக்கு வளி மாசடைந்திருப்பதற்கு இந்தியாவின் வடபகுதியிலும் புதுடில்லியிலும் அறுவடைக்கு பின்னர் காய்ந்த பயிர்களை எரிப்பதும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையும் காரணமாக அமைந்துள்ளன என சுற்றுச்சூழல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவற்றின் ஊடாக இரசாயனப் பதார்த்தங்களும் கண்களுக்கு புலப்படாத தூசு துகள்களும் தான் வளியில் சேர்கின்றன. அவை மனித ஆரோக்கியத்திற்கு உகப்பானவை அல்ல.   ஆகவே தற்போதைய சூழலில் காற்று மாசடைந்திருப்பது தொடர்பில் கவனம் செலுத்தி மருத்துவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும். அதுவே ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதாகும். 

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...