நீண்ட இடைவெளிக்கு பின் நரேன் | தினகரன்


நீண்ட இடைவெளிக்கு பின் நரேன்

அஞ்சாதே படம் மூலம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், நடிகர் நரேன். நீண்ட இடைவெளிக்கு பின், கார்த்தியுடன் அவர் நடித்துள்ள கைதி படம், தீபாவளிக்கு வெளியாகியது. 

நரேன் உடன் பேசியதிலிருந்து...

அஞ்சாதே படத்திற்கு பின், ஒரு சில படங்களை தவிர, உங்களை சினிமா பக்கமே காணவில்லையே?

நல்ல பாத்திரத்திற்காக காத்திருந்தேன். மற்றபடி, திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. அஞ்சாதே படத்திற்கு பின், பூக்கடை ரவி என்ற படத்தில் நடித்தேன். அப்படம், பாதியிலேயே நின்றது. பின், தம்பிக்கோட்டை, முகமூடி, கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்தேன். தற்போது, அதர்வா உடன், ஒத்தைக்கு ஒத்த, சுசீந்திரன் இயக்கத்தில், சாம்பியன் போன்ற படங்களில் நடித்து வருகிறேன். 

கைதி படத்தில், என்ன கதாபாத்திரம்?

இப்படத்தில், பொலிஸாக நடித்தேன். முதலில், இயக்குனர் தான் என்னை, இப்பாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்தார். கார்த்தி நடிப்பதை அறிந்ததும், நானும் ஒப்புக் கொண்டேன். கார்த்தியுடன் எனக்கு, நெருக்கமான நட்பு உண்டு. அவர் தேர்வு செய்யும் படம், எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். அதோடு, இயக்குனர் லோகேஷ் கனகராஜிடமும் நம்பிக்கை உள்ளது. 

படம் எப்படி வந்திருக்கிறது?

ஓர் ஒபரேஷனில் தான், படம் ஆரம்பிக்கும். அதிவேகமாக, திரைக்கதை நகரும். ஒரு பிரச்சினையில் சிக்கும் நல்ல பொலீஸ், உடைந்த கையோடு என்ன செய்கிறான் என்பது தான், எனக்கான பாத்திரம். பெரும்பாலான படப்பிடிப்பு, இரவில் நடந்தது. பெரிய கமர்ஷியல் படத்தில், நாயகியே இல்லாமல் படம் தயாரிக்க, நிறைய தைரியம் வேண்டும்.  

கார்த்தியுடன் நடித்தது குறித்து?

கார்த்தியும், நானும் நண்பர்கள் என்றாலும், தொடர்நது பல நாள் ஒன்றாக பயணித்தது இப்படத்தில் தான். அவர், ரொம்ப தெளிவா, நாம் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து வைத்துள்ளார். இப்படத்தில​ை கார்த்தியின் நடிப்பு பிரமாதமாக பேசப்படும். 

அஞ்சாதே படம் போன்று மீண்டும் வருமா?

கண்டிப்பாக சொல்ல முடியாது. 'அஞ்சாதே 2' படம் நடிக்க ஆசை தான். மிஷ்கின் கூட பேசியிருக்கிறேன். அவரும், செய்யலாம் எனக் கூறியுள்ளார். அது, 'அஞ்சாதே 2' ஆக இருக்கலாம் அல்லது வேறு ஒன்றாகவும் இருக்கலாம். 

எந்த மாதிரியான, 'ரோலில்' விருப்பம்?

எனக்கு,​ெகாமெடி ரொம்ப பிடிக்கும். ஆனால், அந்த மாதிரி பாத்திரங்கள் வருவதில்லை. மலையாளத்தில், எனக்கான இமேஜை உடைத்து, இரண்டாவது படத்திலேயே, காமெடி பாத்திரத்தில் நடித்து விட்டேன்.

தமிழில், 10 ஆண்டாகியும், அதை உடைக்க முடியலை.


Add new comment

Or log in with...