ட்ரம்ப் பதவி நீக்கும் விசாரணை நேரடி ஒளிபரப்பு | தினகரன்


ட்ரம்ப் பதவி நீக்கும் விசாரணை நேரடி ஒளிபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது எடுக்கப்பட்டுவரும் பதவி நீக்க நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அதை முன்னெடுத்துள்ள, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் நேரலை ஒளிபரப்பின்போது மூன்று வெளியுறவு அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள்.

2020இல் நடக்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் மீது உக்ரைன் அரசு விசாரணை நடத்த அந்நாட்டு ஜனாதிபதி வலாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, ட்ரம்ப் அழுத்தம் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரைன் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அளித்து வரும் இராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஹண்டர் வேலை பார்க்கும் எரிவாயு நிறுவனம் மீது நடந்த முறைகேட்டு விசாரணைகளை மேற்கொண்டது உக்ரைன் அரசு. அதில் முக்கிய அதிகாரியொருவரை பதவி நீக்க ஹண்டர் அழுத்தம் தந்தது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று ட்ரம்ப் அழுத்தம் தந்ததாக புகார் எழுந்தது.

உக்ரைன் ஜனாதிபதி உடனான தொலைபேசி உரையாடலை முழுமையாக வெளியிடத் தயார் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

வெளிநாட்டு அரசு தங்கள் நாட்டுத் தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடிய சூழலுக்கு ட்ரம்ப் வழிவகுத்ததாக ஜனநாயக கட்சியினர் பதவி நீக்க நடைமுறைகளை ஆரம்பித்தனர்.

ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய ஆதரவாக பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை வாக்களித்தால், அதன் அடிப்படையில் விசாரணை செய்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் செனட் சபை பதவிநீக்கத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அப்போது மட்டுமே பதவி நீக்கம் செல்லும்.


Add new comment

Or log in with...