சவூதிக்கு உளவு பார்த்ததாக ட்விற்றர் ஊழியர்கள் மீது அமெ. குற்றச்சாட்டு | தினகரன்


சவூதிக்கு உளவு பார்த்ததாக ட்விற்றர் ஊழியர்கள் மீது அமெ. குற்றச்சாட்டு

சவூதி அரேபியாவுக்கு உளவு பார்த்ததாக இரு முன்னாள் ட்விற்றர் ஊழியர்கள் அமெரிக்காவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

சவூதியை விமர்சிப்பவர்கள் உட்பட ட்விற்றர் பயனர்கள் தொடர்பில் தனிப்பட்ட விபரங்களை சவூதி உளவுப் பிரிவுக்கு கொடுத்ததாக சென்பிரான்சிஸ்கோவில் இவர்கள் மீது கடந்த புதன்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அமெரிக்க பிரஜையான அஹமது அபவுமா மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல் அல்சபரா என்ற இருவருமே இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பதாக நீதிமன்ற ஆவணத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இதில் சவூதி பிரஜையான அஹமது அல்முத்தாரி என்ற மூன்றாவது ஒருவரும் உளவுக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

அமெரிக்காவுக்குள் சவூதி பிரஜைகள் மீது உளவுக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இரு ட்விற்றர் ஊழியருக்கும் சவூதி அதிகாரிகளுக்கும் இடையிலான இடைத் தரகராக அல்முத்தாரி செயற்பட்டுள்ளது.

சீட்டில் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை ஆஜரான அஹமது அபவுமா, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கு விசாரணை இன்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

எப்.பி.ஐ உளவுப் பிரிவுக்கு பொய்யான அறிக்கை மற்றும் ஆவணங்களை வழங்கியதாகவும் அபவுமா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ட்விற்றரில் ஊடக கூட்டு முகாமையாளராக பதவி வகித்த அபவுமா 2015 இல் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அல் அல்சபரா மற்றும் அஹமது அல்முத்தாரி இருவரும் சவூதி அரேபியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

முன்னாள் ட்விற்றர் பொறியியலாளராக இருந்த அல்சபரா, சவூதி உளவுப் பிரிவால் பணியமர்த்தப்பட்ட பின் 2015இல் 6,000க்கும் அதிகமான ட்விற்றர் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை அணுகியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவர் தனது மேற்பார்வையாளருடன் சண்டையிட்டு பதவியில் இருந்து விலகி இருப்பதோடு அதனைத் தொடர்ந்து அவர் தனது மனைவி மகளுடன் சவூதி திரும்பியுள்ளார்.

சவூதியின் இஸ்தன்புல் தூதரகத்தில் அமெரிக்க பத்திரிகையாளர் காசோக்கி படுகொலை செய்யப்பட்ட நிலையிலும் அந்நாட்டுடனான தன்னுடைய உறவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வருகிறார். இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, ட்விற்றரில் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர்களின் தகவல்களை பாதுகாக்க சிறந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்றும் ட்விற்றர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் திருட்டு குறித்து அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...