தமிழக அரசியலில் சிக்கித் தவிக்கும் வள்ளுவ பெருந்தகை | தினகரன்


தமிழக அரசியலில் சிக்கித் தவிக்கும் வள்ளுவ பெருந்தகை

மிழ்நாட்டின் அரசியல் புயலில் இப்போது, பொதுமறை அருளிய திருவள்ளுவர் அகப்பட்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து வரலாற்றையே மாற்றப் பார்க்கின்றனர் பா.ஜ.கவினர்.

வெண்மை நிற அங்கவஸ்திரத்துக்குப் பதிலாக காவி உடையில் காட்சி தருகிறார் வள்ளுவர் பெருமான். இதேவேளை தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை மற்றும் உருத்திராட்சை மாலை அணிவித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று (புதன்கிழமை) வழிபாடு செய்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தஞ்சை மாவட்டம் வல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை சாணம் வீசி மற்றும் கறுப்பு மை பூசி அவமதிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு எழுந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

இப்படியான சூழலில், நேற்று தஞ்சை இராஜராஜ சோழனின் சதயவிழாவுக்குச் சென்ற அர்ஜூன் சம்பத், அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை வல்லம் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்து, சிலையின் கை, உடம்பில் விபூதி பூசி, கழுத்தில் உருத்திராட்சை மாலை அணிவித்தார்.பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார்.

திருவள்ளுவர் மதங்களுக்கு அப்பாற்பட்ட நன்னெறிக் கருத்துகளை உலகுக்குத் தந்தவர் என்பதை மறந்த நிலையில் இப்போது அரசியல்வாதிகள்  அவரை ஏதோவெல்லாம் செய்கின்றனர்.

 நிருபர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், "திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த செயலுக்கு தி.மு.கவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கின்றேன்," என்றார்.

மேலும் அவர், "பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் திருக்குறளின் பெருமைகளைப் பற்றியும், திருவள்ளுவரை பற்றியும் பேசி வருகிறார். திருக்குறளின் கருத்துகளை மேற்கோள் காட்டி பேசுகிறார். இது அவர் தமிழ்மொழி மீது வைத்துள்ள பற்றை காட்டுகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் தி.மு.க, தி.க. உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றன" என்றார்.

இந்நிலையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்ததாகக் கருதப்படும் திருவள்ளுவரின் உருவம் எப்படித் தோன்றியது என்பது பற்றி ஆராய வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள திருவள்ளுவரின் உருவப்படத்தில் திருவள்ளுவர் வெள்ளை உடை அணிந்து அமர்ந்திருப்பது போல காட்சியளிக்கிறார். 1959அளவில் இந்தப் படம் வெளியிடப்பட்டு, பரவலான பிறகு, பெரிதும் இந்தப் படமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்தப் படத்தையே அதிகாரபூர்வ படமாக பயன்படுத்த வேண்டுமென அரசாணைகளும் வெளியிடப்பட்டு விட்டன. இதற்குப் பிறகு மிக அரிதாகவே  அந்தப் படத்திற்கு மாறுபட்ட திருவள்ளுவரின் படங்கள் வரையப்பட்டுள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் தொடங்கி விட்டன.

அந்தக் காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் ஆட்சியராக இருந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் திருவள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த நாணயத்தின் ஒருபுறம் திருவள்ளுவரின் உருவமும் மற்றொரு புறம் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயத்தில் திருவள்ளுவர் ஒரு சமண முனிவரைப் போல காட்சியளிக்கிறார். முகமும் தலையும் மழிக்கப்பட்டு, தலை மேல் குடையுடன் இந்த நாணயத்தில் காணப்படுகிறார் திருவள்ளுவர்.

இந்தத் திருவள்ளுவரை உருவகப்படுத்த, எந்த உருவத்தையும் எல்லிஸ் மாதிரிக்கு எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. "இவரை உருவகப்படுத்தியவர்கள், இவரை ஒரு சமண முனிவர் என்று கருதியுள்ளார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. திருக்குறளில் 'ஆதி பகவன்', 'மலர்மிசை ஏகினான்', 'அறவாழி அந்தணன்' என்று வரும் சொல் தொடர்கள் வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று கொள்வதற்கு வலுவான சான்றுகள் ஆகும்" என்கிறார் இது குறித்து எழுதியுள்ள கல்வெட்டு ஆய்வாளரான ஐராவதம் மகாதேவன்.

இதற்குப் பிறகு, 1904இல் இந்து தியாலாஜிகல் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த கோ. வடிவேலு செட்டியார் என்பவர், 'திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்' என்ற நூலை வெளியிட்டார். இரு பாகங்களாக வெளியான இந்தப் புத்தகத்தில் திருவள்ளுவரின் படம் 'திருவள்ளுவநாயனார்' என அச்சிடப்பட்டிருந்தது.

அதில் ஜடாமுடியுடனும் தாடி மீசையுடனும் மார்புக்குக் குறுக்காக யோகப் பட்டை எனப்படும் துண்டை அணிந்தபடியும் திருவள்ளுவர் காட்சியளித்தார். ஒரு கையில் சின் முத்திரையுடன் ஜெப மாலையும் மற்றொரு கையில் ஒரு ஓலைச் சுவடியும் இருந்தது. நெற்றியில் பட்டையும் நடுவில் குங்குமமும் இருந்தன.

ஏன் இப்படி ஜடாமுடியுடன் கூடிய உருவம் கொடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு விளக்கமும் இந்த நூலில் இருக்கிறது. 'நாயனார் சொரூபஸ்துதி' என்ற பாடலை அடிப்படையாக வைத்தே இந்த உருவம் திருவள்ளுவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்குப் பிறகு இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியான போது, அதிலும் ஒரு திருவள்ளுவர் படம் கோட்டுச் சித்திரமாக இடம்பெற்றிருந்தது. அதில் திருவள்ளுவர் ஒரு சைவ சமய அடியாரைப் போல காட்சியளிக்கிறார்.கரங்களிலும் நெற்றியிலும் விபூதிப் பட்டையுடன் காட்சியளிக்கும் இவர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் போலவும் அவரை இரு அடியார்கள் தொழுவதும் போலவும் அந்தப் படம் இடம்பெற்றிருந்தது. இதனை சம்பந்தன் என்பவர் வரைந்திருந்தார்.

இதற்குப் பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நூல்களில் திருவள்ளுவர் படங்கள் ஏறக்குறைய இதே தோற்றத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்தப் படங்கள் தமிழ்நாட்டில் பல வீடுகளில் வைத்து வணங்கப்பட்டன. வேறு பலரும் திருவள்ளுவர் படங்களை வெளியிட்டார்கள். அதில் பல படங்களில் யோகப் பட்டைக்குப் பதிலாக மார்பின் குறுக்கே பூணூலும் இடம்பெற்றிருந்தது.

1950களில் பாலு - சீனு என்ற சகோதரர்கள் கலை என்ற இதழை நடத்தினார்கள். அந்த இதழில் ஒரு திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருந்தது. அந்தப் படத்தில் திருவள்ளுவர் எந்த மதச் சின்னமும் இன்றி இருந்தார்.

"1950களின் பிற்பகுதியில்தான் நாம் இப்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியைத் தொடங்கியவர் கவிஞர் பாரதிதாசன். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ராமச்செல்வன் என்பவருடன் சேர்ந்து வந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்கும் திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை ராமச்செல்வன் ஏற்றுக் கொண்டார்" என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளரான க. திருநாவுக்கரசு.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதி இந்தப் படம் வரையப்பட்டது குறித்து 'திருக்குறள் திருவுருவப் பட விளக்கம்' என்ற ஒரு சிறிய வெளியீட்டைக் கொண்டுவந்தது. தற்போதைய திருவள்ளுவரின் படத்தை அவர் ஏன் அப்படி வரைந்தார் என்பதற்கான விளக்கம் அந்த வெளியீட்டில் இடம்பெற்றிருந்தது.

"இந்தப் படம் வரைந்து முடிக்கப்பட்ட பிறகு நாகேஸ்வரபுரத்தில் ஒரு வீட்டில் இந்தப் படத்தை வைத்தார் வேணுகோபால் சர்மா. காமராஜர், சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன், எழுத்தாளர் கல்வி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.பிறகு இந்தப் படம், 1960இல் சி.என். அண்ணாதுரையால் காங்கிரஸ் மைதானத்தில் இந்தப் படம் வெளியிடப்பட்டது.

பிறகு இதே படம், மத்திய அரசால் தபால் தலையாகவும் வெளியிடப்பட்டது. 1964ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி தமிழக சட்டமன்றத்தில் திருவள்ளுவரின் உருவத்தை திறந்து வைத்தார் குடியரசு துணைத் தலைவர் ஜாகிர் ஹுசைன். உடன் முதலமைச்சர் பக்தவத்சலம் இருந்தார்.

இதற்குப் பின் 1964ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி தமிழக சட்டமன்றத்தில் வேணுகோபால் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார்" என்கிறார் திருநாவுக்கரசு.

இதற்குப் பின்னர் மு. கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே இந்தப் படம் அரசுப் பேருந்துகள் அனைத்திலும் இடம்பெறச் செய்யப்பட்டது. இந்தப் படமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் அடிப்படையிலேயே சென்னை மையிலாப்பூரில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவரின் சிலை உருவாக்கப்பட்டது.

இன்று திருவள்ளுவரின் உருவம் அரசியல் சுழியில் அகப்பட்டுத் தவிக்கிறது.


Add new comment

Or log in with...