மற்றுமொரு அரபு வசந்தமா? | தினகரன்


மற்றுமொரு அரபு வசந்தமா?

2011ஆம் ஆண்டு துனீசியாவில் தொடங்கி எகிப்து, சிரியா, லிபியா என்று ஆர்ப்பாட்டங்கள் பரவியபோது அது ஒருசில சர்வாதிகாரிகளை துரத்தியது என்னமோ உண்மை தான், ஆனால் விடுவிக்கப்படாத எத்தனையோ கேள்விகளை விட்டுவைத்தே அந்த ஆர்ப்பாட்டங்கள் தணிந்தன. 

இப்போது ஈராக், லெபனானில் ஏற்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், எகிப்தில் இருந்து நின்று தலைதூக்கும் ஆர்ப்பாட்டங்களை மத்திய கிழக்கின் மற்றொரு அரபு வசந்தம் என்று வர்ணிப்பது மேற்போக்கானது.  

ஈராக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாயை சுடுவது போல் சுடப்படுகிறார்கள். லெபனான் ஆர்ப்பாட்டம் நாட்டின் அன்றாட வாழ்வை முடக்கி பிரதமர் சாத் அல் ஹரிரி இராஜினாமா செய்யும் அளவுக்குச் சென்றுவிட்டது. ஜனாதிபதி அப்தல் பத்தாஹ் அல் சிசியின் ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதியில் திரளும்போது இராணுவம் வழக்கம்போல் ஒடுக்குவது என்று பூனை, எலி ஆட்டம் நடந்துகொண்டு தான் இருக்கிறது.  

ஈராக், லெபனான் மற்றும் எகிப்தின் பிரச்சினைகள் வேறு வேறு. ஆனால் மத்திய கிழக்கு மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருக்கும் இளைஞர்களின் கோபம், ஏமாற்றம், கவலை எல்லாமே அங்கே பொதுவானது.  

அதாவது மத்திய கிழக்கு மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60வீதமானவர்கள் 30வயதுக்கு குறைவானவர்கள். ஆனால் அங்கே உள்ள பொருளாதார பிரச்சினை, ஊழல், சம்பிரதாய அரசியல் மற்றும் ஒடுக்குமுறைகளால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்களின் வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதோடு சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.  

எனவே, இளைஞர்களை அரசுக்கு எதிராக வீதிக்கு அழைப்பதற்கு பிரசங்கம் நடத்தத் தேவையில்லை. ஒரு வட்ஸ்அம், பேஸ்புக் செய்தி போதுமானது.

ஈராக் மற்றும் லெபனானில் இப்போது ஏற்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு முக்கிய இரண்டு காரணம் வேலையின்மை மற்றும் ஊழல். 

ஈராக்கை சொல்லவே தேவையில்லை, உலகின் ஊழல் மிகுந்த நாடாக சம்பியன் பட்டமே வென்றிருக்கிறது. யுத்தங்கள், மதப் பிளவுகள், சர்வதேச ஆக்கிரமிப்புகளுக்கு இடையே அங்குள்ள அரசியல் கட்டமைப்பு அங்கிருக்கும் மக்களுக்கு உருப்படியாக எந்த சேவையும் செய்வதாக இல்லை. லெபனான் இந்த அளவுக்கு மோசமில்லாதபோது பிராந்திய நாடுகளின் நன்கொடைகளில் பிழைப்பு நடத்திப் பழகிப்போன அந்த நாடு உலகில் கடன் சுமை அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று. நாட்டின் பொருளாதார வளர்ச்சி கூட பூஜ்யத்தைத் தாண்டி உயர்வதாக தெரியவில்லை. அது மக்களின் வாழ்க்கை சுமையை அதிகரித்து அவர்கள் வீதிக்கு இறங்கும் அளவுக்கு தள்ளிவிட்டது.  

இப்பாடியான சூழலில் சராசரி மக்களுக்கு அந்நாட்டின் அரசியல் கட்டமைப்பு மற்றும் அதில் இருக்கும் ஊழல் மீதே முதலில் கோபம் வரும்.  

லெபனான், ஈராக் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அரசு பதவி விலகுவது மாத்திரம் போதவில்லை. அவர்கள் கேட்பது ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பின் மாற்றம்.  

ஈராக்கை பொறுத்தவரை ஆர்ப்பாட்டங்கள் என்றாலே வன்முறையாகவே இருக்கும். அரசுக்கு, பாதுகாப்பு படைகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியாக சமாளிக்கத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அமைதியாக எதிர்ப்பை வெளியிடத் தெரியவில்லை. இதுவரை 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  

ஈராக்கில் இப்போது நடப்பது திட்டமிட்ட ஆர்ப்பாட்டங்கள் அல்ல. அதற்கு தலைவர்கள் இல்லை. ஆனால் அரசு அவர்களை ஒடுக்க முயற்சிக்க முயற்சிக்க அது தீவிரம் அடைந்து வருவதோடு அமைப்பு ரீதியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.  

குறிப்பாக தலைநகர் பக்தாதில் அரச கட்டடங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் பெரும்புள்ளிகள் வசிக்கு பசுமை வலயப் பகுதியை ஆக்கிரமிக்கவே ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்று வருகிறார்கள். அது நடந்து விட்டால் ஈராக் மற்றொரு பிரச்சினைக்குள் விழுந்து விடும் என்பது நிச்சம்.  

பக்தாதில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டங்கள் இப்போது வேறு நகரங்களுக்கு பரவியிருக்கிறது. குறிப்பாக ஷியாக்களின் புனித நகரான கர்பலாவில் ஆர்ப்பாட்டம் எல்லை மீறி நடக்கிறது. முகமூடி அணிந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஒன்றில் பலரும் கொல்லப்பட்டார்கள்.  

அதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக சந்தேகிக்கு நிலையில் அங்கிருக்கும் ஈரானிய துணைத் தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக் காரர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.  

லெபனானில் வட்ஸ்அப் சமூகதளத்தின்ஊடான அழைப்புகளுக்கு அரசு வரி விதித்ததே வினையாகிப்போனது. இதனை அடுத்து ஒக்டோபர் 17ஆம் திகதி ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானதை தொடர்ந்து அரசு அந்த வரியை நீக்கிக் கொண்டபோதும் ஆர்ப்பாட்டங்கள் தணியவில்லை.  

ஆரம்பத்தில் சுமுகமாகத் தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் இருந்தன. ஆனால் இப்போது வீதிகளை முடக்கி அங்கங்கே கலவரங்கள் வெடித்து தீவிரமடைந்திருக்கிறது.  

பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி அரசு வாக்குறுதி அளித்தாகிவிட்டது, பிரதமர் கூட இராஜினாமா செய்துவிட்டார், ஆனால் ஆர்ப்பாட்டங்கள் முடிவதாக இல்லை. ஒட்டுமொத்த அரசியலும் மாறவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.  

2011அரபு வசந்தத்தை பொலன்றி ஈராக், லெபனான் இரண்டு நாடுகளிலும் சர்வாதிகாரிகள் இல்லை. ஆனால் அவர்களுக்கு தமது நாட்டின் அரசியல் பிடிக்கவில்லை. 

என்றாலும் மத்திய கிழக்கில் இளைஞர்களின் எதிர்ப்பு என்பது கோபத்துக்கு அப்பால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இல்லை. 2011இப்படியான கோபத்தால் கண்ட தீர்வு ஒன்றுமில்லை. துனீஷியாவில் ஜனநாயகம் பிறந்தது என்னமோ உண்மைதான், ஆனால், அங்கு ஸ்திரமான அரசு ஒன்று உருவாவது குதிரைக்கொம்பாக இருக்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகளும் அப்படியே தான் இருக்கின்றன.  

எகிப்தில் ஹொஸ்னி முபாரக்கை துரத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை விடவும் கொடிய சர்வாதிகாரி ஒருவரை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். சிரியா, லிபியா, யெமன் துண்டு துண்டாகிவிட்டது.  

இந்த இலட்சணத்தில் மற்றொரு அரபு வசந்தம் என்பது மத்திய கிழக்கிற்கு தாங்காது.

எஸ். பிர்தெளஸ்


Add new comment

Or log in with...