தீர்மானம் மிக்க மலையக வாக்குகள் | தினகரன்


தீர்மானம் மிக்க மலையக வாக்குகள்

மலையகத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரம் அடைந்துள்ளன. தமிழ் முற்போக்குக் கூட்டணி  சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது. இ.தொ.கா கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளது. த.மு.கூட்டணி பிரதானமான 10கோரிக்கைகளை முன்வைத்திருப்பதாகச் சொல்கின்றது. இ.தொ.கா. 32அம்சக் கோரிக்கைகளை சமர்ப்பித்திருக்கின்றோம் என்கிறது.

இதுதவிர, இ.தொ.கா. 50ரூபா விசேட கொடுப்பனவு கிடைக்காமை, தீபாவளி முன்பணமாக 15ஆயிரம் ரூபாய் பெற்றுத் தராமை போன்றவற்றை முதன்மைப்படுத்திப் பேசுகின்றது. அத்துடன் பெருந்தோட்டங்களைக் காடுகளாக்கி சிறுத்தை, குளவி, தேனீ தாக்குதல்களுக்கு காரணமாக்கியது இந்த அரசாங்கமே என்று சாடுகின்றார் ஆறுமுகன் தொண்டமான்.

அத்துடன், தற்போதைய தனிவீட்டுத் திட்டத்துக்குப் பதிலாக பழையபடி மாடிவீட்டுத் திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்கிறார் அவர். இனி 1000ரூபா சம்பள அதிகரிப்பும் கிடைக்குமாம்.

 இதேநேரம் 50ரூபா கொடுப்பனவு இழுபறியில் செல்வதற்கு இ.தொ. காவும் ஒரு வகையில் காரணமென்று கூறப்படுகின்றது. நவீன் திசாநாயக்க இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் ஒருசாரார் சொல்கிறார்கள். இவர் ஆறுமுகன் தொண்டமானோடு நெருக்கமானவர் என்ற ரீதியில் அவருக்குச் சார்பான முறையில் செயல்படுவதாக விமர்சனங்கள் உள்ளன.

அதேவேளை அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கும் அவருக்கும் ஒத்துப்போகாத நிலைமை உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன. அரசியல் ரீதியில் திகாம்பரத்தின் உயர்வை நவீன் விரும்பாதவராக இருக்கிறார் என்கிறார்கள் த.மு. கூட்டணி ஆதரவாளர்கள்.

இதனால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவரை நுவரெலியா மாவட்டத்தை விடுத்து வேறு ஏதாவது ஒரு மாவட்டத்தில் போட்டியிடச் செய்யலாமா என்று கட்சித் தலைமைப் பீடம் யோசித்து வருவதாக மலையக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இதே நேரம் 2010க்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பான போக்கினைக் கடைப்பிடிக்க ஆரம்பித்த இ.தொ.கா, இன்று வரை அந்த விசுவாசத்தைக் கைவிடவில்லை. எனினும் 2015ஜனாதிபதித் தேர்தல் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் அக்கட்சி ஏமாற்றங்களையே சந்தித்தது. இந்தப் பின்னடைவில் இருந்து மீண்டெழ அது ஜனாதிபதித் தேர்தலில் ஜ.தே.கவுக்கே ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அது அப்படி நடக்கவில்லை.

பொதுஜன பெரமுனவோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்ய களமிறங்கியுள்ளது இ.தொ.கா.

இதனுடன் குறிப்பிடத்தக்க அளவு வாக்கு வங்கியைக் கொண்டிராத சதாசிவம், ரிஷி செந்தில்ராஜ் பிரதீபன் போண்றவர்களும் கோட்டாபய ராஜபக்ஷவினை ஆதரிக்கின்றார்கள். எனினும் இவர்களோடு இ.தொ.காவிற்கு ஒட்டுறவு கிடையாது. 

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்ட மலையக வாக்காளர்களை வசப்படுத்திக் கொள்ள இ.தொ .கா. பாவித்த ஒரு ஆயுதம்தான் பெருந்தோட்ட மக்களின் EPF நிதியை அரசாங்கம் கொள்ளையடித்து விட்டது என்னும் பிரசாரம்.

அதனை மீண்டும் அப்புத்தளையில் நிகழ்ந்த பரப்புரைக் கூட்டத்தில் கையில் எடுத்திருக்கிறார் ஆறுமுகன் தொண்டமான்.உண்மையில் 50ரூபா கொடுப்பனவு இழுபறி நிலைக்குச் சென்றதற்கு அடிப்படைக் காரணம்தான் என்ன? தேயிலைச் சபையிடம் இருந்து கடனாகப் பெறப்படும் பணமே இதற்குப் பயன்படுத்தப்படும் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டது.

ஆனால் இவ்வாறு விடுவிக்கப்படும் நிதி பெருந்தோட்ட அடிவிருத்திக்காக மட்டுமே செலவிடப்படலாம் என்று தேயிலைச் சபையின் விதிமுறை சொல்வதால் அதனைச் சம்பளக் கொடுப்பனவுக்கு வழங்க முடியாத சிக்கல் நிலவுவதாக அச்சபை கூறுகின்றது.

பெருந்தோட்ட மக்களின் சம்பளப் பிரச்சினை தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. அதற்கு இந்த அரசாங்கத்தை மட்டும் குறை கூறவது தவறு என்பது த.மு.கூட்டணியின் கூற்று. 1940ஆம் ஆண்டு முல்லோயா கோவிந்தன் 10சத சம்பள பிரச்சினைக்காக உயிர்த் தியாகம் செய்திருப்பதை அக்கட்சி சுட்டிக் காட்டுகின்றது.

15இலட்சம் மக்களைக் கொண்டுள்ள மலையக சமூகத்தில் இன்று பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள 150000இலட்சம் பேர் மட்டுமே சம்பளப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

ஆனால் இ.தொ. கா  ஒட்டுமொத்த மலையக மக்கள் எதிர்நோக்கும் ஒரே பிரச்சினையாக அதனை சித்தரிக்க முற்படுகின்றது என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ்.

தவிர, சம்பள விவகாரத்தை அரசாங்கத்தின் தலையீட்டுக்கு அப்பால் கொண்டு சென்ற பெருமை இ.தொ.காவையே சார்ந்து நிற்கின்றது. கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் அரசாங்க பொறிமுறைக்கு உட்படுத்த முடியாதவாறு இறுக்கமான சரத்துக்களைப் புகுத்தி மக்களை ஏமாற்றியது, ஏமாற்றி வருவது  இ.தொ.கா என்பதும் த.மு.கூட்டணியின் குற்றசாட்டு ஆகும்.

இந்த அரசாங்கத்தின் மூலம் பெறப்பட்டுள்ள சில நன்மைகளே த.மு. கூட்டணியின் பரப்புரைக்கான பலத்தைச் சேர்க்கின்றது.

தனிவீட்டுத் திட்டம், காணி உறுதிப் பத்திரம், பிரதேச சபைகள் அதிகரிப்பு, பிரதேச செயலகங்கள் உருவாக்குவற்கான முன்னகர்வு, பிரதேச சபை சட்டத்தில் திருத்தம், மலையக அபிவிருத்திக்கென தனியான அதிகாரசபை, பாடசாலைகள் அபிவிருத்தியும் காணி வளங்களும், 450தோட்ட மருத்துவமனைகளை அரசுடைமையாக்கும் ஏற்பாடு என்று குறிப்பிடக் கூடியவைகள் இருக்கவே செய்கின்றன. அத்துடன் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள மலையகத்துக்கான 10அம்சமம் வலு சேர்க்கக் கூடியதாக இருக்கும்.

இதனால் சம்பளக் கொடுப்பனவு விவகாரம் பெரிய அதிப்தியை உண்டாக்கப் போவதில்லை என்று அக்கட்சி உறுதியாக நம்புகிறது.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ள 1000ரூபா நாட்சம்பளம் மற்றும் தற்போதைய தனிவீட்டுத் திட்டத்துக்கு மாற்றாக மாடிவீடுகள் இரண்டுமே சாத்தியப்படாதவை என்பது பிரசாரத்துக்கு நிறையவே பயன்படும். ஏனெனில் ஏற்கனவே 1999இல் லயன் வீடுகளுக்கு மாற்றாக மாடிவீட்டுத் திட்டத்தை இ.தொ.கா  நடைமுறைப்படுத்தியது.

இது பொருத்தமாக அமையாது என்பதை சிவில் அமைப்புகள் ஜ.நா வரை எடுத்துச் சென்று அதனைக் கைவிடச் செய்தன. எனவே இடவசதி இல்லாத (1.25பேர்ச் நிலப்பரப்பு) இன்னுமொரு மாடி லயவரிசையா என்று மக்கள் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த மாடிவீட்டு சமாச்சாரம் இ.தொ.காவுக்கு சங்கடத்தைத் தோற்றுவிக்கலாம் என்பதே அவதானிகளின் பார்வை.

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இதுவரை 9000தனி வீடுகள் அமைக்கப்பட்டு காணி உறுதிகளுடன் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவை தனித்தனி கிராமங்களாக மலையக சமூகத்தின் மேம்பாடு கருதி சேவையாற்றியவர்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விடயம்.

மலையகக் கட்சிகள் இரண்டும் நுவரெலியா மாவட்டத்தையே இலக்காகக் கொண்டுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்களது நிலையும் இதுதான்.

கோட்டாபய ராஜபக்ஷவைப் பொறுத்தவரை சிங்கள வாக்குகளையே பெரிதும் நம்புகிறார். சஜித் பிரேமதாச சிறுபான்மை இன மக்களின் வாக்குகளிலேயே தங்கி இருக்கின்றார். அந்த வகையில் மலையக மக்களின் பெருமளவு வாக்குகளும் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதில் தீர்க்கமானவையாக அமையப் போகின்றன.

நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜ.தே.க. அதிகளவிலான வாக்கு வங்கியை  தக்க வைத்துக் கொண்டே வருகின்றது. இங்கு இக்கட்சியைத் தவிர்த்து வேறு எந்தக் கட்சியினாலும் கூடுதலான வாக்குகளை இதுவரை பெற முடியவில்லை.

2005ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. பெற்ற வாக்குகள் 152,836ஆகும். ஐ.ம.சு.கூட்டமைப்புப் பெற்ற வாக்குகள் 147,210ஆகும். 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. 180,604வாக்குகளும், ஐ.ம.சு.கூட்டமைப்பு 151,604வாக்குகளும் பெற்றன. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க சார்பில் 2 22,605வாக்குகள் ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பில் 1,45,339வாக்குகள் கிடைத்தன. இந்நிலைமையே பாராளுமன்றத் தேர்தலிலும் (2015) காணப்பட்டது. வரும் ஜனாதிபதித் தேர்தல் நி​ைலவரமும் இப்படியே அமைலாம்.

இதநேரம் பிந்திய கணிப்பின்படி சஜித் பிரேமதாச சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறக் கூடியவராகக் காணப்படுகின்றார். குறிப்பாக மலையகத்திலும் இதே நிலைமையே நிலவுகிறது. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலில் இறுதி தீர்மானத்தைக் கொண்டு வரும் என்பதால் இது குறித்து கட்சிகள் பெரிதும் கவனம் செலுத்துகின்றன. 

மக்கள் எவர் சொல்வதை நம்புவது என்ற குழப்பத்தில் உள்ளார்கள். பொதுவாக இத்தேர்தல் மலையக மக்களுக்கு சவாலாகவே அமையப் போகின்றது என்னவோ உண்மை. தற்போது பரப்பப்படும் பொய்யுரைகள் வலுவிழக்கும்  பட்சத்தில் இறுதி ஆயுதமாக இனவாதத்தைக் கையில் எடுக்கும் அபாயமும் இல்லை என்று கூற முடியாது.

எவ்வாறாயினும் வாக்குகளைப் பெற்ற ஆட்சியதிகாரத்தை வசப்படுத்திக் கொள்ள நடக்கும் போட்டியாகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் மாறியுள்ளது. இதனிடையே மலையக மக்களிடத்து போதிய தெளிவு ஏற்படாது போகுமானால் அது வாக்குகளைச் சிதறடிக்கவே உதவும். இதனால் மலையக மக்களின் இருப்புக் கேள்விக் குறியாக்கப்பட்டு விடும்.

மலையகத்தில் பாரம்பரிய செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு கட்சியும் வாக்கு வங்கியினைக் கொண்டிருக்கும் நிலையான கலாசாரம் இன்று மாறிக் கொண்டிருக்கின்றது. தமது தலைமைகளின் வாக்கினை மட்டுமே வேதவாக்காக கருதும் நிலை மெல்ல மெல்ல மறைந்து வருகின்றது. இ.தொ.கா. அரசியலில் தனி சக்தியாக பரிணமித்தக் காலம் ஒன்று இருந்தது. ஆனால் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தோற்றமானது இந்நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதுவே மலையகத்தில் போட்டி அரசியலுக்கான பின்புலத்தை உருவாக்கிவிட்டுள்ளது.

இதன் பின்னணியில் செயற்படும் சில சக்திகள் மலையக மக்களின் வாக்குகளைப் பிரிக்க முற்படுமாயின் அது அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவுக்கே வலிகோலும் என்பதே புத்திஜீவிகளின் கவலை.

எனவே வாக்குகளுக்காக மலையக மக்களிடத்து தவறான தகவல்களை பரப்புவது, யதார்த்தத்துக்கு மாறாக புனைவுகளை ஒப்புவிப்பது சரியானதாக அமையப் போவதில்லை.

ஏனெனில் மலையக மக்களின் வாக்குப் பலத்தின் அடிப்படையிலேயே நாட்டின் தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட போகிறார். தமது இருப்பினை உருப்படியான தெரிவு ஒன்றுக்கு அர்ப்பணிப்பதன் மூலமே எதிர்பார்ப்புகளை ஈடேற்றிக் கொள்ள பேரம் பேச முடியும் என்பதை மறந்து விடக் கூடாது.


Add new comment

Or log in with...