இன்னும் ஒரு வாரம்; எதிர்வுகூற முடியாத களம் | தினகரன்


இன்னும் ஒரு வாரம்; எதிர்வுகூற முடியாத களம்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒரு வார காலமே இன்னமும் எஞ்சியிருக்கும் நிலையில், இறுதிக் கட்ட தேர்தல் பரப்புரைகளில் சகல வேட்பாளர்களும் தீவிரம் காட்டியுள்ளனர். கடந்த காலத் தேர்தல்களைப் போலன்றி இம்முறை தேர்தல் சரிக்குச் சமனான பலப்பரீட்சையாக இருக்கப் போகின்றது.

 பலமான இரு முன்னணிகளின் வேட்பாளர்கள் மோதும் களமாகவும், இரு தரப்பின் வாக்குகளையும் கவரக் கூடிய மூன்றாவது வேட்பாளர் ஒருவரும் களமிறங்கியுள்ள தேர்தலாகவும் இது அமைந்துள்ளது.

தேர்தல் பிரசாரங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, இவர்தான் வெற்றி பெறுவார் என்பதை அறுதியிட்டுக் கூறி விட முடியாத தேர்தலாக இத்தேர்தல் இருப்பதால் வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கு இறுதி நேரம் வரை காத்திருக்கும் நிலைமை நிச்சயமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற்கு இடம்பெறும் சுப்பர் ஓவர் சுற்றுப் போட்டி போல தேர்தல் முடிவுகளுக்குக் காத்திருக்கும் நிலைமையொன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சகல வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு மிகத் தீவிரமான பரப்புரைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிறுபான்மை மக்களைப் பொறுத்த வரையில், அவர்களது எந்தவொரு பிரதான பிரச்சினைக்கும் நேரடியான தீர்வுகள் எதுவும் இவற்றில் கூறப்படாத போதும், ஒப்பீட்டளவில் அன்றாடப் பிரச்சினைகளுக்கும், உரிமைப் பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கும் குறைந்தபட்ச யோசனைகள் சில உள்ளடக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாகவிருக்கின்றது.

எனினும், தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஐந்து கட்சிகள் இணைந்து உருவாக்கிய தேர்தல் கூட்டணியினால் சமர்ப்பிக்கப்பட்ட 13அம்சக் கோரிக்கைகள் எதனையும் எந்தவொரு பிரதான வேட்பாளரும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கியிருக்கவில்லை. இருந்த போதும், ஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒப்பீட்டளவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு செவிசாய்த்திருப்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பிட்டுக் கூறப்படாவிட்டாலும் பொதுவான அடிப்படையில் மக்களின் பிரச்சினைக்கு ஏதோவொன்றை வழங்குவதாக அவர் உறுதியளித்திருப்பதையும் காணமுடிகிறது.

இதன் அடிப்படையிலேயோ என்னவோ, தமிழரசுக் கட்சியினர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனர். தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் அவர்கள் இந்த ஆதரவை வழங்கினார்களா அல்லது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தெரிவு யார் என்பதை நாடி பிடித்துப் பார்த்து அறிந்து கொண்டு விட்டு தமது தெரிவும் அதுவே என அவர்கள் அறிவித்தார்களா என்பது தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை உத்தியோகபூர்வமாக அவர்கள் அறிவித்து விட்டார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததும் இவ்வாறான முறையிலேயே என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 கடந்த 2015தேர்தலில் மைத்திரி_ரணில் கூட்டணிக்கு தமிழ்  ​தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருந்த போதும், அதன் பின்னரான ஆட்சிக் காலத்தில் தமது கோரிக்ைககளை நிறைவேற்றுவதில் தமிழ்க் கூட்டமைப்பினர் பல பின்னடைவுகளையே சந்தித்திருந்தனர். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. கிடைக்கக் கூடிய மற்றுமொரு சந்தர்ப்பத்தையும் நழுவ விடுவதற்கு அரசியல் பிரதிநிதிகள் முயற்சித்து விடக் கூடாது என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

 இதுஇவ்விதமிருக்க, 2009ஆம் ஆண்டு யுத்த முடிவின் பின்னர் இலங்கையின் அரசியல் மேடையில் அழிக்க முடியாத விம்பமாக உருவாக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் முகாமின் சார்பில் களமிறங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ தரப்பு தொடர்ந்தும் இனவாத ரீதியான பரப்புரைகளையே நம்பியுள்ளது என்பதுதான் அரசியல் அவதானிகளின் எண்ணமாக உள்ளது.

சிறுபான்மை மக்களின் வாக்குகள் தமக்கு மிகவும் குறைவாகவே கிடைக்கும் என்பதை அறிந்து வைத்துள்ளனர். எனவே அந்தத் தரப்பிலுள்ள அரசியல்வாதிகள் பலரும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை குறி வைத்தே பிரசாரங்களை முன்னெடுத்து வருவதைக் காண முடிகின்றது.

அவர்களது பிரசாரங்களின் இனவாதம் மறைந்திருப்பதைக் காண முடிகின்றது.

கடந்த 2015ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரும் இவ்வாறான தேர்தல் பிரசாரத்தையே முன்னெடுத்ததன் காரணமாக அவர் தோல்வி கண்டிருந்தார். இம்முறையும் அவ்வாறான சூழல் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இருந்த போதும் இம்முறை முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் 10இலட்சத்துக்கும் மேலானவர்கள் இருக்கின்றனர். இந்த வாக்காளர்களின் வாக்குகள் அதிகம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்குக் காரணங்களும் உள்ளன. பாடசாலைக் காலத்திலிருந்து அவர்கள் அனுபவித்து வரும் சமாதான சூழல்,

கண்ணுக்குப் புலனாகக் கூடிய பாரிய அபிவிருத்தி, உருவாக்கப்பட்டுள்ள விம்பம் எனப் பலவிடயங்களைக் கூறிக் கொண்டே செல்லலாம்.

அதேநேரம், கிராம மட்டங்களில் மஹிந்த தரப்புக்கு இருந்த ஆதரவு இம்முறை 'எளியவர்களின் நண்பன்' எனக் கருதப்படும் சஜித் பிரேமதாசவுக்கு பிரிந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சஜித்தின் தந்தையார் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட கிராமங்கள், கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் எனப் பல அபிவிருத்தித் திட்டங்களால் கவரப்பட்ட மக்கள் 'பிரேமதாச' என்ற பெயருக்கு தமது இதயங்களில் அழியாத இடத்தை வழங்கியுள்ளனர்.

இது நிச்சயமாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பாகவே அமையப் போகிறது.

இருந்த போதும் கோட்டாபய முகாமினால் முன்னெடுக்கப்படுகின்ற பிரசாரங்கள் குறிப்பாக ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலின் பின்னரான சூழ்நிலை என்பன கிராம மட்ட மக்களின் மனங்களில் எவ்வாறான மாற்றத்தை எற்படுத்தப் போகின்றன என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

ஆனால் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் கடந்த  ஜனாதிபதித் தேர்தலைப் போன்று இம்முறையும் ராஜபக்ஷ தரப்புக்கு எதிரான அலையே வீசுவதைக் காண முடிகின்றது.

சிறுபான்மையினர் மத்தியில் சஜித் ஆதரவையே அதிகம் காண முடிகின்றது.

சிறுபான்மையினரின் வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்குமென்பதை மறந்து விட முடியாது.  இதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆர்வம் காட்டாத வாக்காளர்கள் அதிகம் இருப்பதாகவே அறிய முடிகிறது.

இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக சிங்களக் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற வாக்குச்சீட்டு விநியோகத்தின் போது பலர் அவற்றைப் பெறாது திரும்பியனுப்பிய சம்பவத்தைக் கூறலாம்.

200இற்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கும் கிராமத்தில் சுமார் 16வாக்குச் சீட்டுக்கள் மாத்திரமே வாக்காளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஏனையவை மீளத்திருப்பியனுப்பப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த அரசியலிலும் வெறுப்புக் கொண்ட மக்களே இவ்வாறான முடிவுக்கு வந்திருப்பார்கள் என்றே ஊகிக்க முடிகின்றது. இதுபோன்று ஒட்டுமொத்த அரசியலை வெறுக்கும் வாக்காளர்களும் இம்முறை அதிகமாகவிருப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

எனவே இதுபோன்ற பாரிய சவால்களுடனேயே எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப் போகின்றது.

சாரங்கன்...


Add new comment

Or log in with...