தடை செய்யப்பட்ட வலைகளுடன் 14 பேர் கைது | தினகரன்


தடை செய்யப்பட்ட வலைகளுடன் 14 பேர் கைது

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றும் சட்டவிரோத மீன்பிடி வலைகளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, நோர்வே தீவுக்கு அருகிலுள்ள கடற்பிரதேசத்தில் கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவினரால் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட வழமையான ரோந்து நடவடிக்கையின்போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடமிருந்து 02 மீன்பிடிப் படகுகள், 02 இயந்திரங்கள், 02 தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது முதல் 47 வயதுடைய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை யாழ். நகரை அண்மித்த பகுதியில் நேற்று (07) வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினரும் யாழ். விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, தடை செய்யப்பட்ட 38 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது மீன்பிடி உபகரண விற்பனை நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 38 சட்டவிரோத மற்றும் தடை செய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளுடன் குறித்த விற்பனை நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக  யாழ். மீன்பிடித் திணைக்கள பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...